

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! |
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? ||
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால் |
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் ||
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும் |
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ||
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! |
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை)
பெண்ணே..! நோன்புகள் பல நோற்று அதன் மூலம் சொர்க்கம் அருளப்படும் வாய்ப்பு உனக்கு கிட்டும். நாங்கள் பல முறை கூப்பிட்டும் கதவைத் திறக்க மறுக்கிறாய்.
பதில் மொழியும் கூறவில்லை. ராமபிரானால் முன்பு ஒரு காலத்தில் எமன் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், உறங்கும் போட்டியில் உன்னிடம் தோற்று, அவனது பேருறக்கத்தை உனக்கு அளித்துவிட்டான் போலும்..
வாசம் மிகுந்த துளசி மாலையை திருமுடியில் சூடியுள்ள நாராயணன் நமது நோன்புக்கு பரிசாக பேரின்பத்தை அளிப்பான். எனவே, தாமதிக்காமல் உடனே வந்து கதவைத் திறப்பாய். உலகோர் புகழும்படி நோன்பு இருந்து நீராடுவோம் என்று தன் தோழியை நீராட அழைக்கிறாள் கோதை.
அளவிட முடியாத பரம்பொருள் ஈசன்!
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் |
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே ||
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் |
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ||
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன் |
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள் ||
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார் |
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். ||
(திருவெம்பாவை)
நல்ல குலத்தில் உதித்து, கோயில் திருப்பணிகளை மேற்கொள்ளும் பெண்களே! நம் தலைவனாகிய ஈசனின் திருப்பாதங்கள், ஏழு பாதாள உலகங்களையும் கடந்து கீழே உள்ளது.
விதவிதமான மலர்களை சூடும் திருமுடி வானத்தில் எல்லைகளைக் கடந்து, அனைத்து பொருட்களுக்கும் எல்லையாக உள்ளது. உமையொரு பாகனாக இருப்பதால், அவன் ஒருவன் அல்ல என்பதை நம்மால் அறிய முடிகிறது.
வேதங்கள், விண்ணவர், பூலோகத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் இறைவனின் புகழைப் பாடி முடிக்க முடியாது.
யோகிகளுக்கும், ஞானிகளுக்கும் நண்பனாக விளங்கும் ஈசனுக்கு பல தொண்டர்கள் உண்டு. அவனது பெருமைகள் முழுவதையும் போற்றிப் பாடுவது என்பது இயலாத செயல் என்று மாணிக்கவாசகர் கூறுகிறார்.