ஆன்மிகம்

உலக மாயையில் இருந்து விடுபடுவோம்..! | மார்கழி மகா உற்சவம்

கே.சுந்தரராமன்

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் |

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ||

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன |

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே ||

போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே! |

சாலப் பெரும்பறையே, பல்லாண்டு இசைப்பாரே, ||

கோல விளக்கே, கொடியே, விதானமே, |

ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்! ||

(திருப்பாவை 26)

நீல மணி போன்ற நிறத்தை உடையவனும், யாதவ குலவிளக்கு போன்றவனுமான கண்ணனே! ஆல் இலையில் துயில் கொள்பவனே! பக்தர்களை உன் மீது மயக்கம் கொள்ளச் செய்தவனே! பாவை நோன்புப் பெண்களுக்கு சில விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை நீராடுதல், அணிகலன் இல்லாமை, பால், நெய் நீக்குதல், தவறு செய்யாமை, தானம் செய்தல், புறங்கூறாமை ஆகியனவாகும்.

இந்த நோன்புக்கு தேவையான வெண்மை நிறம் கொண்ட பாஞ்சசன்யத்தைப் போன்ற வலம்புரி சங்குகளையும், அகலமான பறை வாத்தியங்களையும், பல்லாண்டு பாடுபவர்ளையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் நீ எங்களுக்கு அளித்து அருள்புரிய வேண்டும் என்று ஆண்டாளின் தோழிகள் கண்ணனை வேண்டுகின்றனர்.

பேரானந்தம் அளிப்பார் சிவபெருமான்...!

பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார் | பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும் ||

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில் | வணங்குகின்றார், அணங்கின் மணவாளா ||

செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப் |பெருந்துறையுறை சிவபெருமானே! ||

இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும் | எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! ||

(திருப்பள்ளியெழுச்சி 6)

செந்தாமரை மலர்கள் நிறைந்த, குளிர்ந்த வயல்கள் சூழ்ந்து காணப்படும் திருப்பெருந்துறையில் வசிக்கும் எம்பெருமானே! பார்வதி தேவியின் துணைவனே! உன் அருளைப் பெற விரும்பும் அடியார்கள், அனைத்தையும் உதறிவிட்டு, உன்னை தரிசிக்க வந்துள்ளனர்.

எங்களது பிறப்பை நீக்கி, அனைவரையும் ஆட்கொண்டு முக்தி நிலை தருவதற்காக நீ உடனே விழித்தருள வேண்டும் என்று சிவபெருமானுக்கு, மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார்.

இறைவன் சோதிக்கிறான் என்று வசைபாடுபவர்கள், பந்த பாசத்தை வெறுத்து அவனே கதி என்று வருபவர்கள் யாராக இருந்தாலும், ஈசனை நம்பி அவனை சரண் புகுந்தால், அவர்கள் பேரானந்தத்தில் திளைப்பது உறுதி என்று மாணிக்கவாசகர் கூறுகிறார்.

SCROLL FOR NEXT