

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் |
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, ||
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த |
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் ||
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை |
அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில், ||
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி |
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 25)
மகாவிஷ்ணுவின் அவதாரமான கண்ணன், தேவகியின் மகனாகப் பிறந்து, கோகுலத்தில் யசோதை மைந்தனாக வளர்ந்தான். இதனால், ‘ஒருத்தி மகனாகப் பிறந்து, ஒருத்தி மகனாக ஒளித்து வளர்க்கப்பட்டதாக’ இந்தப் பாசுரம் தொடங்குகிறது. கம்சனின் சதித் திட்டங்களை முறியடித்து வெற்றி கண்டான் கண்ணன்.
கம்சனால் அனுப்பப்பட்ட பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தன், வத்சாகரன், பகாசுரன், அகாசுரன், தேனுகாசுரன் என அனைவரும் கண்ணனால் அழிக்கப்பட்டனர். தனக்கு அழிவு நெருங்குவதாக உணர்ந்த கம்சன், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல தவித்தான். வீரச் செயல்கள் புரிந்த கண்ணனைப் புகழ்ந்து, தாங்கள் வேண்டும் வரங்களை அளிக்கும்படி பாவை நோன்பிருக்கும் பெண்கள் அவனை வேண்டுகின்றனர்.
எம்பெருமான் புகழ் பாடி மகிழ்வோம்..!
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி 5)
பஞ்ச பூதங்களாக விளங்கும் சிவபெருமானே! குளிர்ந்த வயல்களால் சூழப்பெற்ற திருப்பெருந்துறையில் உறையும் ஈசனே! உன் சிறப்பு இயல்புகளைப் பாடும் புலவர்கள், பெருமைகளைச் சொல்லி ஆடும் பக்தர்கள், சிவனடியார்கள் அனைவரும் உன் தரிசனம் வேண்டி நிற்கின்றனர். நீ எங்கள் முன்பு தோன்றி, எங்கள் பாவங்களைத் தீர்த்து, எங்களை ஆட்கொள்ள வேண்டும்.
அதற்காக நீ உடனே துயில் நீங்கி எழ வேண்டும் என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். பிறப்பு, இறப்பு இல்லாத பரமன் என்றும் நிலையானவன். நிரந்தரமானவன், நம் சக்திக்கு அப்பாற்பட்ட இறைவனை பாடி மகிழ்ந்தாலே அவன் நமக்கு தரிசனம் அளிப்பான் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.