மயி​லாப்​பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்​தானத்​தில் அமைந்​துள்ள ஸ்ரீ நி​வாஸ பெரு​மாள் கோயி​லில் நேற்று முன் தினம் மகா சம்ப்​ரோக் ஷணம் நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் பங்​கேற்று சுவாமி தரிசனம்​ செய்​தனர்​. | படங்கள்: எம்.ஸ்ரீநாத் |

 
ஆன்மிகம்

மயிலாப்பூர் ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீநிவாஸர் கோயிலில் மகா சம்ப்ரோக் ஷணம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கே.சுந்தரராமன்

சென்னை: மயி​லாப்​பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்​தானத்​தில் ஸ்ரீஅலர்​மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீ ஸ்ரீ நி​வாஸ பெரு​மாள் கோயிலில் மகா சம்ப்​ரோக்ஷணம் நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் பங்​கேற்று சுவாமி தரிசனம் செய்​தனர்.

சென்​னை, மயி​லாப்​பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்​தானம், 4 நூற்​றாண்​டு​களுக்கு முன் தோன்​றிய​தாகக் கூறப்​படும் பழமை​யான கோயி​லாக அறியப்​படு​கிறது. 1832-ம் ஆண்​டில் பக்​தர்​கள் சில​ரால் ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஹயக்​ரீவர் விக்​கிரகங்​கள் ஸ்தாபிக்​கப்​பட்​டன.

          

1924-ம் ஆண்டு இந்து குழு​மத்​தின் பங்​களிப்​புடன் ஸ்ரீ நி​வாசப் பெரு​மாள் மற்​றும் அலர்​மேல் மங்கை தாயார் விக்​கிரகங்​கள் ஒரே சந்​நி​தி​யில் நிறு​வப்​பட்​டன. 1975-ம் ஆண்டு நடை​பெற்ற மஹா சம்ப்​ரோக்ஷணத்​தில், கல்​கத்தா பாங்​கூர் அறக்​கட்​டளை​யின் பங்​களிப்​புடன் தாயாருக்கு தனி சந்​நிதி கட்​டப்​பட்​டது.

பின்​னர் ஆண்​டாள், ராமர், லட்​சுமி ஹயக்​ரீவர், நரசிம்​மர், ஸ்ரீ சக்​கரத்​தாழ்​வார், ஸ்ரீ பேயாழ்​வார், ஆஞ்​ச நேயர், ஆழ்​வார்​கள், ஆச்​சார்​யர் விக்​கிரகங்​கள் பிர​திஷ்டை செய்​யப்​பட்​டு, ஓர் ஆண்​டில் 230 நாட்​களுக்​கும் மேல் திரு​விழாக்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

பக்​தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ அலமேலு மங்கா சமேத ஸ்ரீநிவாஸ பெருமாள்.

அண்​மை​யில் நடை​பெற்ற அறங்​காவலர் குழு கூட்​டத்​தில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​தில் இக்​கோயி​லில் மகா சம்ப்​ரோக் ஷணம் நடத்த முடிவு செய்​யப்​பட்​டது. அதன்​படி, கடந்த 12-ம் தேதி மாலை முதல் பூர்​வாங்க பூஜைகள் தொடங்​கின.

அன்​றைய தினம் மாலை 7 மணி முதல் பகவத் பிரார்த்​தனை, அனுக்​ஞை, புண்​யாஹ​வாசனம், வாஸ்து சாந்தி ஹோமம் நடை​பெற்​றன. மார்ச் 15-ம் தேதி மதி​யம் 2 மணி முதல் ஸ்ரீ பெரு​மாள், ஸ்ரீ தாயார், ஸ்ரீ ஆண்​டாள், ஸ்வாமி தேசிகன் - உற்​சவர்- 108 கலச விசேஷ திரு​மஞ்​சனம் நடை​பெற்​றன. மார்ச் 16-ம் தேதி காலை 9.15 முதல் 10.30 மணிக்கு உள்​ளான முஹூர்த்​தத்​தில் மகா சம்ப்​ரோக் ஷணம் நடை​பெற்​றது.

அதைத் தொடர்ந்து சாற்​று​முறை, ஆசார்​யா​தி​கள் பஹூ​மானங்​கள் நடை​பெற்​றன. மாலை 4 மணி அளவில் ஸ்ரீ பெரு​மாள் - தாயார் திருக்​கல்​யாணம் நடை​பெற்​றது. மாலை 7 மணி அளவில் ஸ்ரீ பெரு​மாள், தேசிகன், விசேஷ திரு​வீதி புறப்​பாடு, பின்பு தாயாருடன் உள் புறப்​பாடு நடை​பெற்​றது.

நிகழ்ச்சி ஏற்​பாடு​களை கோயில் அறங்​​காவலர்​கள்​, ஆர்​.அனந்​த​பத்​ம​நாபன்​, ஆர்​.​முகுந்​தன்​, எல்​.என்​. ஸ்ரீநி​வாசன்​ செய்​திருந்​தனர்​. ​ திரளான பக்​தர்​கள்​ வந்​திருந்​து சு​வாமி தரிசனம்​ செய்​தனர்​.

SCROLL FOR NEXT