திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவையொட்டி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை நேற்று மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் தீபத் திருவிழாவையொட்டி இன்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
பிரசித்திபெற்ற அண்ணாமலையார் கோயிலில் கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. கடந்த 9 நாட்களாக காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவு பஞ்ச மூர்த்திகளும் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தனர்.
விழாவின் 10-ம் நாளான இன்று அதிகாலை பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி அண்ணாமலையார் கோயில் மற்றும் மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் வளாகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அண்ணாமலையார் கோயில் சுவாமி சந்நிதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மாலை 5 மணியளவில் கோயில் 3-ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமதே முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.
பின்னர் மாலை 5.55 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்துடன் கோயில் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அப்போது, கொடிமரம் முன்புள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
மகா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரை 5 அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்டது. இந்தக் கொப்பரைக்கு நேற்று அதிகாலை கோயிலில் சிறப்பு பூஜைசெய்யப்பட்டு, பின்னர் மலை உச்சிக்கு கொண்டுச் செல்லப்பட்டது. மேலும், தீபம் ஏற்றுவதற்கு ஆயிரம் மீட்டர் காடா துணியாலான திரியும், தீபம் எரிவதற்கு 3,000 கிலோ நெய்யும் பயன்படுத்தப்படுகின்றன.
இவையும் இன்று அதிகாலை மலை உச்சிக்கு தனியாகக் கொண்டு செல்லப்படுகின்றன. மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காலையில் பரணி தீபத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களும், மாலையில் மகா தீபத்துக்கு 6 ஆயிரம் பக்தர்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பொது தரிசனத்துக்கு ராஜகோபுரம் வழியாக காலை 5.30 மணி முதல் 9 மணி வரை 20 ஆயிரம் பக்தர்கள் வரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தீபத் திருவிழாவையொட்டி வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகர்க் தலைமையில், 6 டிஐஜி-க்கள், 29 எஸ்பிக்கள் உட்பட15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.