மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோயிலில் உள்ள தீப மண்டபத்தில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை மகா தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கம்போல் உச்சி ப்பிள்ளையார் கோயிலில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தரிசிக்க திருப்பரங்குன்றத்தில் லட்சக்ணக்கானோர் திரண்டனர். அடிவாரத்தில் நின்று தீபத்தூணை பார்த்தபடி வணங்கியவாறு காத்திருந்தனர். சரியாக 6 மணிக்கு வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என மக்கள் நினைத்தனர். ஆனால் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. தீபத்தை தரிசிக்க அடிவாரத்தில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறும்போது, ‘திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது’ என்றார்.
பின்னணி என்ன? - திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிக்கந்தர் தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்ததுடன், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதற்கிடையே, மலை உச்சியில் பொதுமக்களை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், தொல்லியல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என்றும் கோரி ராம ரவிக்குமாரும் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை அடுத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நவம்பர் 24-ம் தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருநாளில் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு மட்டும் ஒருமுறை தீபம் ஏற்ற இடைக்கால அனுமதி வழங்கப்படுகிறது. இது தற்காலிக ஏற்பாடு மட்டுமே.
தீபம் ஏற்றும் இடத்துக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. தீபம் ஏற்றச் செல்லும் குழுவில் எத்தனை பேர் இடம்பெற வேண்டும், யார் யார் செல்ல வேண்டும் என்பதை கோயில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை மற்றும் காவல் ஆணையருடன் ஆலோசித்து மதுரை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்ய வேண்டும்.
தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். இதற்குத் தேவையான பாதுகாப்பை காவல் துறை வழங்க வேண்டும். தேவைப்பட்டால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உதவியையும் பெறலாம். தீபத்தூண் பகுதிக்கு அனுமதிக்கப்பட்ட குழுவினர் மற்றும் கண்காணிப்பு, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மட்டுமே செல்லலாம்.
தீபம் ஏற்றும் பகுதியில் பொது மக்கள் கூடுவது, ஊர்வலம் நடத்துவது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, முழக்கங்கள் எழுப்புவது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உறுதியாக அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. இதனால் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தரிசிக்க அடிவாரத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.