

படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: ‘உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாவிட்டால் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான நடவடிக்கையை சந்திக்க வேண்டியது வரும்’ என மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், இணை ஆணையர், அறங்காவல் குழு தலைவர், செயல் அலுவலருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பங்குன்றத்தில் 144 தடையாணை பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, அப்போது விசாரணையை பகல் 12.30-க்கு ஒத்திவைத்து, அப்போது மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது மாவட்ட ஆட்சியர் நேரிலும், காணொளி வாயிலாகவும் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வாதிடுகையில், “திருப்பரங்குன்றம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த முடியாது,” என்றார்.
அதற்கு நீதிபதிகள், “நீங்கள் அப்படி நினைத்தால் வாதங்களை வைக்க வேண்டாம், விட்டுவிடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உயர் நீதிமன்றத்தில் இருந்து 3, 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஆட்சியரால் நீதிமன்றத்துக்கு வர முடியாதா. ஆட்சியரை பார்க்காமல் வழக்கை விசாரிக்க மாட்டோம். விசாரணை மதியம் 1.15 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது,” என்றனர்.
மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் ஆஜரானார். மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையர் இனிகோ திவ்யனும் ஆஜரானார். மனுதாரர்கள் தரப்பில் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடாமல் சுருக்கமாக வாதங்களை முன்வைக்கலாம் என நீதிபதிகள் கூறினர்.
தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில், “திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். 144 தடை உத்தரவால் பக்தர்களால் கிரிவலம் செல்ல முடியவில்லை. உள்ளூர் மக்களையும் திருப்பரங்குன்றத்துக்கு அனுமதிக்க மறுக்கின்றனர். திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற தலைவர்கள் பலரை கைது செய்துள்ளனர். பலரை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். கோயிலுக்கு செல்பவர்களை கூட தடுக்கி்ன்றனர்.
கடந்த ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடுக்கும் நோக்கத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதே போலவே இந்தாண்டும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவிடாமல் தடுத்த காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளானார்,” எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இப்போதும் இனிகோ திவ்யன் தான் ஹீரோவா? என்றனர்.
அரசு தரப்பில், “உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வருவாய்த் துறையினர், அறநிலையத் துறையினர், தொல்லியல் துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்கக்கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மத்திய பாதுகாப்புப் படையின் உதவியை கோரலாம். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக 3 நாளில் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கோயிலுக்கு செல்பவர்கள் கைது செய்யப்படவில்லை,” எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “உச்ச நீதிமன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படியிருக்கும் போது அடிவாரத்தில் 144 தடையாணை பிறப்பித்தது ஏன்? இதனால் கிரிவலம் செல்ல முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டுள்ளது. திருப்பரங்குன்றத்துக்கு யாரையும் செல்ல விடாமல் தடுப்பது ஏன்? 144 தடையாணையால் மக்களின் மத உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி எதையும் செய்யவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அதிகாரிகளை வலியுறுத்துவோம். இதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. நீதிமன்ற உத்தரவை மீறினால் அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும்.
கடந்த ஆண்டை போல ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மலை உச்சிக்கு தான் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
144 தடையால் மக்களின் வழிபாட்ட உரிமையான கிரிவலம் செல்வது, தீபத்தை தரிசனம் செய்வதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மனுதாரர்கள் நீதிமன்றம் வந்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை புறக்கணிக்க முடியாது” என்று கூறி விசாரணையை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தனர்.
மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், செயல் அலுவலர், அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் காணொளி வழியாக ஆஜராக உத்தரவிட்டார்.
பின்னர் அரசு தரப்பில், ‘திருப்பரங்குன்றத்தில் மக்கள் நடமாட்டத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. இன்று 30 ஆயிரம் பேர் வரை திருப்பங்குன்றம் கோயிலுக்கு சென்றுள்ளனர். 6000 பேர் நூறு ரூபாய் டிக்கெட் வாங்கி கோயிலுக்கு சென்றுள்ளனர். பக்தர்களின் எந்த உரிமையும் பாதிக்கப்படவில்லை, மதரீதியான ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவல் பொறுத்தவரை 258 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள். இவர்களால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக புலனாய்வு பிரிவின் தகவல் மற்றும் அவர்களின் முன்நடத்தை அடிப்படையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் மலை அளவில் தான் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் தான் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தலை உச்சிக்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அது எல்லை கல் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன’ எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘உச்ச நீதிமன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அரசியல் காரணங்களுக்காக நிறைவேற்றப்படாமல் இருப்பதற்காக 144 தடையாணை பிறப்பித்துள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவு இவ்வாறு 144 தடையாணை பிறப்பித்து மீறப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியரை ஆஜராக தெரிவித்தோம். அவரையே உச்ச நீதிமன்றம் கண்காணிப்பு அதிகாரியாக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் பொருட்டு மலைப்பகுதிக்கு யாரும் செலலாமல் இருப்பதை தடுக்கும் வகையில் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 144 தடையாணை பிறப்பிக்க ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு. கடந்தாண்டு 144 தடையாணை பிறப்பித்த உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாமல் தடுக்கப்பட்டது. இந்தாண்டு அப்படி நடந்தால் உச்ச நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியாக வேண்டும். சீராய்வு மனு நிலுவையில் இருப்பதை காரணமாக கூறி உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க முடியாது.
உச்ச நீதிமன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், காவல் இணை ஆணையர், அறங்காவல்குழு தலைவர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் நிறைவேற்ற வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். மனு முடிக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளார்.