மாங்கனித் திருவிழா இன்று தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காரைக்கால் அம்மையார்.
காரைக்கால்: காரைக்காலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா இன்று (ஜூன் 27) மாப்பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்கவுள்ளது.
63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்ற காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது. இக்கோயிலில், அம்மையார் வரலாற்றை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் இவ்விழா நிகழாண்டு இன்று மாலை பரமதத்தர் அழைப்பு (மாப்பிள்ளை அழைப்பு) வைபவத்துடன் தொடங்குகிறது.
நாளை (ஜூன் 28) காலை பரமதத்தர்- புனிதவதியார் திருக்கல்யாணம், அன்று மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு, 29-ம் தேதி அதிகாலை பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், அன்று காலை பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா (பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து வழிபடுதல்), மாலை அமுது படையல், 30-ம் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சிக் கொடுக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இதேபோல் ஜூலை 29-ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி ஒரு மாத காலம், அம்மையார் கோயில் மணிமண்டபத்தில் நாள்தோறும் மாலை ஆன்மிக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான சுகாதார வசதி, விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.