திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். அடுத்த படம்: கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகையில் விரதம் இருப்பதற்காக இடம் பிடித்து தங்கியிருக்கும் பக்தர்கள்.
தூத்துக்குடி: திருச்செந்தூரில் கந்தசஷ்டி பெருவிழா இன்று தொடங்குகிறது. தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், சிற்றுண்டி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் இன்று (நவ.10) தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது.
காலை 5 மணிக்குமேல் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருள்கிறார். காலை 7 மணி அளவில் யாகசாலை பூஜை தொடங்குகிறது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், திருச்செந்தூருக்கு வந்து தங்கி சஷ்டி விரதமிருந்து சூரசம்ஹாரத்தை காண்பார்கள். சஷ்டி விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நேற்று முதலே திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் இடம் பிடித்து தங்கியுள்ளனர். அங்குள்ள தனியார் தங்கும் விடுதிகள், மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், மடங்களிலும் பக்தர்கள் நேற்று காலை முதல் வந்து தங்கியுள்ளனர்.
பக்தர்களுக்கான வசதிகள், விழா ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் கந்தசஷ்டி பெருவிழா, இந்த ஆண்டு நவ.10-ம் தேதி (இன்று) தொடங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ.15-ம் தேதியும், திருக்கல்யாணம் நவ.16-ம் தேதியும் நடைபெறவுள்ளன. கந்தசஷ்டி விரதத்தின் முதல் ஐந்து நாட்களில் நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பக்தர்களும், சூரசம்ஹார நாளில் 6 லட்சம் பக்தர்களும், திருக்கல்யாண நாளில் 2 லட்சம் பக்தர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில்கொண்டு, விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக 11 இடங்களில் மொத்தம் 1 லட்சத்து 2,673 சதுர அடி பரப்பளவில் நிழற்கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இக்கொட்டகைகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கோயில் வளாகத்தில் உள்ள நிரந்தரக் கழிப்பறைகளுடன் கூடுதலாக 300 தற்காலிகக் கழிப்பறைகளும் அமைக்கப்படுகின்றன.
விழா நாட்களில் நாள்தோறும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் வகையில் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் எளிதாக கோயிலுக்கு வந்து செல்லும் வகையில், கோயில் நிர்வாகத்தின் சார்பில் 4 கட்டணமில்லா சுற்றுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பொது தரிசனம் மற்றும் முதியோர் தரிசன வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 6 லட்சம் குடிநீர் பாட்டில்கள், ஒரு லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள், சிற்றுண்டிகள் வழங்கப்பட உள்ளன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க 12 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்களும், சுமார் 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
பக்தர்களின் பாதுகாப்புக்காக 493 இடங்களில் சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. விழா நாட்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், கோயில் சார்ந்த பாதுகாப்புப் பணிகளில் வெளிமுகமை மூலம் 789 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருப்பரங்குன்றம்: முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு, பக்தர்கள் தங்கி விரதமிருப்பதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள சஷ்டி மண்டபம் இந்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.