சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று பிற்பகல் ஆழ்வார்புரத்தில் உள்ள அறநிலையத் துறை மண்டகப்படியில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். படங்கள்: நா.தங்கரத்தினம்
மதுரை: மதுரை தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டகப்படியில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றிரவு முதல் இன்று காலை வரைவிடிய விடிய தரிசனம் செய்தனர்.
மே 6-ல் திருவிழா நிறைவுபெறுவதை முன்னிட்டு இன்று மலைக்குப் புறப்படுகிறார். மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.27-ம் தேதி தொடங்கியது.
மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் கோலத்தில் ஏப்.29-ல் அழகர்மலையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டார்.
ஏப். 30-ல் மூன்று மாவடியில் எதிர்சேவை நடந்தது. மே 1-ம் தேதி அதிகாலை 5.48 மணிக்கு பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார்.
ராமராயர் மண்டபத்தில் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி செய்து குளிர்வித்தனர். அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கினார்.
இதையடுத்து 6-ம் நாளான மே 2-ம் தேதி மதுரை வண்டியூரிலுள்ள பெருமாள் கோயிலிலிருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி தேனூர் மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.
அங்கு திருமஞ்சனமாகி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். அதைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் இரவு 11 மணியளவில் எழுந்தருளினார்.
அங்கு திருமஞ்சனமாகி இரவு தொடங்கி விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் 7-ம் நாளான (மே 3) நேற்று காலை 7 மணியளவில் மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் புறப்பாடாகி வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.
அப்போது அழகரின் சடாரி அக்கரையிலுள்ள மண்டகப்படிக்குக் கொண்டு செல்லப்பட்டு பூஜை நடைபெற்றது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர், தல்லாகுளத்திலுள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இரவு 11 மணிக்கு கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு கள்ளழகர் கோலத்தில் இன்று (மே 4) அதிகாலை 2 மணியளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.
அங்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய தரிசனம் செய்தனர். பின்னர் கருப்பணசாமி கோயில் வையாளி சேவை முடிந்து தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளி மதுரை விஜயத்தை முடித்து மலைக்குப் புறப்பட்டார்.
தொடர்ந்து ரிசர்வ் லைன், புதூர், சர்வேயர் காலனி வழியாக பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். மே 5-ம் தேதி காலை 10.40 மணியளவில் அழகர்கோவில் இருப்பிடம் சேர்கிறார்.
மே 6-ல் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஹரிஹரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.