

சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் தடையை நீக்கியுள்ளதால், 6 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்று, பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்றும் தேசிய மருத்துவ ஆணையம் கடந்த 2023-ம் ஆண்டு ஆக.6-ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தின் மக்கள்தொகை அடிப்படையில், இன்றைய நிலையில், 7,731 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், ஏற்கெனவே தமிழகத்தில் அரசு - தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 12,650 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதால் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவும் முடியாது.
ஏற்கெனவே தொடங்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் முடியாத நிலை உருவானது. இந்நிலையில், புதிய விதிமுறைகளை கைவிடுவதாக கடந்த கடந்த மாதம் 27-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.
தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையின்படி, தமிழகத்தில் இதுவரை அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை.
புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கான தடை நீக்கப்பட்டு விட்ட நிலையில், 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். அடுத்த சில நாள்களில் தமிழகத்தில் புதிய அரசு அமைக்கப்பட்டவுடன் இதற்கான நடவடிக்கையை பாமக மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.