ஆஞ்சநேயருக்கு நேற்று நடைபெற்ற புஷ்பாஞ்சலி.
நாமக்கல்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 3 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துபடி செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கனகாபிஷேகத்துடன் அபிஷேகம் நிறைவு பெற்றது.
தொடர்ந்து, காலை 5 மணியளவில் சுவாமிக்கு துளசி, முல்லை, மல்லிகை, அரளி, அல்லி, ரோஜா என 3 டன் எடை கொண்ட பல்வேறு வகையான மலர்கள் கூடை கூடையாக தூவப்பட்டு சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பின்னர், ஆஞ்சநேய சுவாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாமக்கல் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.