தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். (உள்படம்) பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய அன்னை. படங்கள்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் 444-வது ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலையுடன் பெருவிழா பிரார்த்தனைகள் தொடங்கின. தொடர்ந்து மூன்று திருப்பலிகள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து, பேராலயத்தில் இருந்து திருக்கொடியை ஆயர் ஸ்டீபன், மேளதாளங்கள் முழங்க, பேராலயத்தை சுற்றி பவனியாக எடுத்து வந்தார். பின்னர் பேராலயத்துக்கு முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை ஆயர் ஏற்றி வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என்று முழக்கமிட்டனர். கொடி ஏற்றப்பட்டபோது சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
மேலும், பேராலயத்துக்கு எதிரே பழைய துறைமுகத்தில் இருந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது. பக்தர்கள் நேர்ச்சையாக பால் குடம், வாழைத்தார் போன்ற
வைகளை கொடிமரத்தின் பீடத்தில் வைத்து வழிபட்டனர். சிலர் தங்கள் குழந்தைகளையும் கொடிமரத்தின் பீடத்தில் வைத்து அன்னையிடம் ஒப்புக் கொடுத்தனர். கொடியேற்றம் முடிந்ததும் பால் மற்றும் பழத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
கொடியேற்ற நிகழ்ச்சியில், தமிழக மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் த.சரத்குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத்,மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொன் மகுடம்: தொடர்ந்து பகல் 12 மணிக்கு முன்னாள் பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றது. பேராலயத்தில் உள்ள பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. மாலையில் சிறப்பு திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
ஆகஸ்ட் 4-ம் தேதி 10-ம் நாள் திருவிழாவில் இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறுகிறது. அன்னையின் பெருவிழா தினமான ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. அன்று மாலை 7 மணியளவில் நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் ஜான் செல்வம், உதவி பங்குத்தந்தை ஜெரால்டு, அருட்சகோதரர் மைக்சன் மற்றும் பங்கு பேரவையினர், இறைமக்கள் செய்துள்ளனர்.