வடலூர் சத்திய ஞான சபையில் நேற்று சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
கடலூர்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 155-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான வள்ளலார் பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (பிப்.1) ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, 155-வது ஆண்டு ஜோதி தரிசன விழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது.
காலை 7.30 மணிக்கு தரும சாலையில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, வள்ளலார் பிறந்த ஊரான மருதூர் வள்ளலார் சந்நிதியில் கிராம மக்களால் கொடியேற்றப்பட்டது.
பின்னர், பார்வதிபுரம் கிராம மக்கள் பழங்கள், சீர்வரிசைப் பொருள்களுடன், வள்ளலார் பயன்படுத்திய பொருள்களை பல்லக்கில் வைத்து, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சத்திய ஞான சபை வளாகத்துக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், சன்மார்க்க அன்பர்கள் வள்ளலாரின் பாடல்களைப் பாடினர். காலை 10 மணியளவில் சன்மார்க்கக் கொடியேற்றம் நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு சத்திய ஞானசபையில் முதல் ஜோதி தரிசனம் நடைபெறும்.
தொடர்ந்து, காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, நாளை (பிப்.2) காலை 5.30 மணிக்கு 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
வரும் 3-ம் தேதி மேட்டுக்குப்பத்தில் சித்திவளாக திருஅறை தரிசனம் நடைபெறும். கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.