கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள 7 சிவன் கோயில்களில் மாசி மகத்தையொட்டி கொடியேற்றம் இன்று (பிப்.21) நடைபெற்றது.
கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக விழாவுக்கு சிறப்புப் பெற்ற 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மாசி மகாமகம்.
நிகழாண்டு மாசி மக விழாவை யொட்டி மங்களாம்பிகையம்மன் உடனாய ஆதிகும்பேஸ்வரர், காசி விசாலாட்சி உடனாய காசிவிஸ்வநாதர், சோமசுந்தரி உடனாய சோமேஸ்வரர், சவுந்தரநாயகி உடனாய கவுதமேஸ்வரர், அமிர்தவள்ளி உடனாய அபிமுகேஸ்வரர், ஞானாம்பிகை உடனாய காளஹஸ்தீஸ்வரர், கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாதர் சுவாமி ஆகிய 7 சிவன் கோயில்களில் இன்று (பிப்.21) கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக கொடிமரத்துக்கு பல்வேறு வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு விமரிசையாக கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது 7 கோயிலில் உள்ள பஞ்சமூர்த்தி சுவாமிகள் கொடி மரத்தின் முன்பு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர். வரும் மார்ச் 23-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா நடைபெறுகிறது.
ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பிப்.24-ம் தேதி 63 நாயன்மார்கள் வெள்ளி பல்லக்கில் வீதியுலாவும், பிப்.25-ம் தேதி இரவு ஒலைச்சப்பரமும், பிப்.28-ம் தேதி விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் ஆகிய 4 திருத்தேரோட்டமும், மார்ச் 1-ம் தேதி சண்டிகேஸ்வரர் தேரோட்டம், மார்ச் 1-ம் தேதி மாலை காசிவிஸ்வநாதர், கெளதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய 3 கோயிலின் தேரோட்டம் மகாமக குளத்தை சுற்றிலும், காலஹஸ்தீஸ்வரர் மற்றும் சோமேஸ்வரர் கோயில்களின் தேரோடும் வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.
இதேபோல் கம்பட்ட விஸ்வநாதர் கோயிலில் திருப்பணிக்கான பாலாலயம் நடைபெற்றுள்ளதால், இந்தக் கோயிலை தவிர மற்ற நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடிஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர், ஆகிய 5 சிவன் கோயில்களில் ஏக தின உற்சமான தீர்த்தவாரிக்கு மகா மக குளக்கரையில் எழுந்தருளுகின்றனர். இதைத் தொடர்ந்து மார்ச் 2-ம் தேதி 11 சிவன் கோயில் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு, வீதியுலாவாக மகா மககுளக்கரையில் எழுந்தருளி மகல் 12 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
மார்ச் 3-ம் தேதி இரவு ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சுவாமி அம்பாள் திருக்கோயில் உட்பிரகாரத்தில் 6 முறையும், வீதியில் ஒரு முறை என 7 முறை வலம் வருதலும், 4-ம் தேதி இரவு சுவாமி அம்பாள் ஏகாசனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. இதே போல் சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில்களில் நாளை (பிப்.22) கொடியேற்றம் நடைபெறுகிறது. வரும் மார்ச் மார்ச் 1-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா நடைபெறுகிறது. பிரதான நிகழ்ச்சியான மாசி மகமான மார்ச் 2-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
சாரங்கபாணி சுவாமி கோயிலில் பிப்.25-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை ப்ரஹார புறப்பாடும், ஸ்ரீ சடாரி திருமஞ்சனமும், மார்ச 2-ம் தேதி காலை பெருமாள் உபயநாச்சியாருடன் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் வீதியுலா, தொடர்ந்து பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவமும், தீர்த்தவாரி, இரவு 11 மணிக்கு பெருமாள் உபயநாச்சியாருடன் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் உயபதாரர்கள் செய்து வருகின்றனர்.