படம்: ம.பிரபு
சென்னை: புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெருமாளுக்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. குறிப்பாக, இம்மாதத்தில் வரும் சனிக்கிழமையன்று விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பது சகல விதமான நன்மைகளையும் வழங்கும் என்பது ஐதீகம். அந்த வகையில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 'கோவிந்தா, கோவிந்தா' என பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மூலவர், உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானக் கோயிலில் மூலவர் வெங்டேசப் பெருமாள் தங்க அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு துளசி அர்ச்சனை செய்து, சிறப்பு நைவேத்தியங்கள் படைக்கப்பட் டன. மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
புரசைவாக்கம் சீனிவாசப் பெருமாள் கோயிலில் கோ பூஜையுடன் வழிபாடுகள் தொடங்கின. மாலையில் பக்தர்களின் விஷ்ணு சகஸ்ர நாம் பாராயணம் நடைபெற்றது. பெருமாள் நின்ற, அமர்ந்த, சயன மற்றும் நரசிம்ம அவதாரம் என நான்கு திருக்கோலங்களில் காட்சியளிக்கும் திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோயிலில் பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. இங்கு தற்போது கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடந்து வருகின்றன. எனினும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், உலகளந்த பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் - வரதராஜப் பெருமாள், திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள், திருமழிசை ஆழ்வார், பொன்னேரி - திருஆயர்பாடி கரிகிருஷ்ணப் பெருமாள், தேவதானம் ரங்கநாதர், மீஞ்சூர் வரதராஜப் பெருமாள், திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் உட்பட பல்வேறு கோயில்களிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.