படம்: எல்.சீனிவாசன்

 
ஆன்மிகம்

சென்னை பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கு ரூ.500 கட்டணத்தில் 1,800 பேர் அனுமதி!

அமைச்சர் சேகர்பாபு தகவல்

செய்திப்பிரிவு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து வைணவ கோயில்களிலும், சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அனைத்து சிறப்பு கட்டண தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், டிச.30-ம் தேதி நடைபெறும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு ரூ.500 கட்டணத்தில் 1,800 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.

வைகுண்ட ஏகாதசி விழாவில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு பணிகளில் 1,500 காவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள், 6 மருத்துவக் குழுக்கள், 3 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்படும்.

வைகுண்ட ஏகாதசி அன்று, 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் சிறப்பு தரிசனத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT