லாடனேந்தலில் முள்படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பெண் சாமியார் நாகராணி.

 
ஆன்மிகம்

திருப்புவனம் அருகே முள்படுக்கையில் அருள்வாக்கு கூறிய பெண் சாமியார்!

செய்திப்பிரிவு

திருப்புவனம்: திருப்புவனம் அருகே 7 அடி உயர முள்படுக்கையில் படுத்து பெண் சாமியார் ஒருவர் அருள்வாக்கு கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் மண்டல பூஜை கார்த்திகை 1-ம் தேதி தொடங்கியது.

இதையொட்டி, தினமும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் நிர்வாகியும் சாமியாருமான நாகராணி காப்புக்கட்டி விரதம் இருந்தார். நேற்று முன்தினம் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

நேற்று காலை மண்டல பூஜையையொட்டி, முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து கோயில் எதிரே குவித்து வைக்கப்பட்டிருந்த 7 அடி உயர கருவேலம், இலந்தை, கற்றாலை உள்ளிட்ட பல வகை தாவரங்களின் முள் படுக்கையில் சாமியார் நாகராணி படுத்து தவமிருந்தார்.

அப்போது அங்கு கூடிய பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

SCROLL FOR NEXT