திருப்பதி: திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் நேற்று நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் தலைமையில் உயர்மட்ட தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் அனில்குமார் சிங்கால் பேசியதாவது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனையின்படி, நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில் கட்டப்படுகிறது. தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஏழுமலையான் கோயில் கட்ட தமிழக அரசு நிலம் ஒதுக்கி உள்ளது. இங்கு மிக விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். இதேபோன்று, அசாம் மாநிலம் குவாஹாட்டி, பிஹாரில் பாட்னா, கர்நாடக மாநிலம் பெல்காம் உள்ளிட்ட பகுதிகளிலும் அந்தந்த மாநில அரசுகள் நிலம் ஒதுக்கி உள்ளன.
சென்னையில் கட்டப்படும் ஏழுமலையான் கோயிலுக்கு தேவையான வரைபட ஒப்புதல், கோயில் நிர்வாக ஒப்புதல் போன்ற அனுமதிகளை சம்பந்தப்பட்ட அரசுகளிடமிருந்து பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இதர கோயில்களில் அன்னபிரசாதம் விநியோகத்தில் மாற்றம் செய்யப்படும். தற்போது ஏழுமலையான் கோயில் தவிர மீதமுள்ள 56 கோயில்களில் ஒருவேளை மட்டும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இனி, வரும் மார்ச் மாதம் முதல் 60 தேவஸ்தான கோயில்களில் மதியம் மற்றும் இரவு என இரு வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இவ்வாறு அனில்குமார் சிங்கால் கூறினார்.