மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. படங்கள்: நா.தங்கரத்தினம்.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (ஏப்.28) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்.30-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலையிலும் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் 8-ம் நாள் (ஏப்.26) இரவு மணியளவில் நடைபெற்றது.
அப்போது மீனாட்சி அம்மன் வைர ராயர் கிரீடம், நவரத்தின செங்கோலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒன்பதாம் நாளான நேற்று (ஏப்.27) மீனாட்சி அம்மனுக்கு திக்கு விஜயம் நடைபெற்றது. பத்தாம் நாளான இன்று (ஏப்.28) சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன் பிரியாவிடை சுந்தரேசுவரர் நான்கு மாசி வீதீகளில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினர்.
திருக்கல்யாணத்தில் பங்கேற்க திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இருந்து புறப்பட்ட சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் இன்று அதிகாலையில் கோயிலை வந்தடைந்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் ஆடி வீதியில் திருக்கல்யாண மேடை 10 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
திருக்கல்யாண மேடைக்கு முதலில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலை 8.07 மணிக்கு மேடையில் எழுந்தருளினர். பின்பு பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் காலை 8.09 மணிக்கு கல்யாண மேடையில் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் 8.17 மணியளவில் மேடையில் எழுந்தருளினர். பவளக்கனிவாய் பெருமாள் காலை 8.20 மணியளவில் மேடையில் எழுந்தருளினார்.
பின்னர் காலை 8.30 மணியளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க விநாயகர் பூஜை ஹோமத்துடன் திருக்கல்யாணம் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்தனர். பூஜைக்கு பின்பு காலை 8.43-மணிக்கு சுவாமி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. காலை 8.45 மணியளவில் பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்க்கும் வைபவம் நடைபெற்றது. காலை 8.49 மணியளவில் மாலைகள் மாற்றும் வைபவம் நடந்தது.
கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி, அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது. காலை 8.54-க்கு சுந்தரேசுவரர் மங்கல நாண் அணிவிக்க திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பின்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் போது திருமணமான பெண்கள் புது திருமாங்கல்ய கயிறு அணிந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண உற்சவம் முடிந்த பின்னர் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காலை 9.36 புறப்பட்டு, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இவ்விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, எம்எல்ஏக்கள் செல்லூர் கே.ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆகியோர் பங்கேற்றனர்.
நாளை (ஏப்.29) காலை 6.30 மணிக்கு திருத்தேரோட்டம் நான்கு மாசி வீதிகளில் நடைபெறும். நாளை மறுநாள் 12-ம் நாள் (ஏப்.30) தீர்த்த பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் நா.சுரேஷ், அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.