பழநியில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி எடுத்து வந்து ஆடிப்பாடி மகிழ்ந்த பக்தர்கள்.
பழநி: பழநியில் தைப்பூசத் திருவிழாவின் 6-ம் நாளான இன்று (ஜன.31) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. முக்கிய விழாவான தைப்பூசத் தேரோட்டம் நாளை (பிப்.1) மாலை நடைபெறுகிறது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி ரத வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் 6-ம் நாளான இன்று (ஜன.31) இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வாக தைப்பூச தினமான நாளை (பிப்.1) மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக, காலை 5 மணிக்கு மேல் முத்துக்குமார சுவாமி தோளுக்கினியானில் சண்முகநதிக்கு எழுந்தருள் கிறார். காலை 11.15 மணிக்கு மேல் தேரேற்றம் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மேல் ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 4-ம் தேதி காலை 9 மணிக்கு திருவூடல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மேல் தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.
அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி, பழநியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.