திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றப்படும் நாளன்று பக்தர்கள் மலை ஏறுவதற்குத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ.15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி போதிய முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவுக்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீப திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவில் ஒரு கூட்டமும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலும் கூட்டம் நடைபெற்றது. தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நவ.24-ம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமான பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாக தீபம் ஏற்றப்படும் தீப திருநாள் அன்று தீபம் ஏற்றுபவர்கள் மட்டுமே மலை மீது செல்ல அனுமதிக்கப்படுவர். கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் பக்தர்கள் மலை ஏறுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி மலை ஏறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல கலசப்பாக்கம் அடுத்த பருவத மலை மீது ஏறவும் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீப திருவிழாவுக்காகக் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவீதம் சிறப்புப் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு கிரிவலப் பாதையில் ஏஐ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய 1000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 12 ட்ரோன்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன” என்றார்.