பத்மாவதி தாயார் கோயில்
திருப்பதி: ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வரும் டிசம்பர் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றிரவு சின்ன சேஷ வாகனத்தில் தாயார் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
டிசம்பர் 11-ம் தேதி காலை சர்வ பூபாள வாகனமும், மாலை தங்க தேரோட்டமும், இரவு கருட வாகன சேவையும் நடைபெறுகிறது. 7-ம் நாளான டிசம்பர் 12-ம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை, 8-ம் நாளான டிசம்பர் 13-ம் தேதி காலை தேர்த்திருவிழாவும், அன்றிரவு அஸ்வ வாகன சேவையும் நடத்தப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து நிறைவு நாளான டிசம்பர் 14-ம் தேதி காலை கோயில் வளாகத்தில் உள்ள பத்ம குளத்தில் பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று மாலை பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
இந்த பிரம்மோற்சவத்தையொட்டி, கோயிலில் மராமத்து பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவ விழாவினையொட்டி டிசம்பர் 1-ம் தேதி மற்றும் 5 ம் தேதி முதல் 16-ம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம், குங்குமார்ச்சனை உட்பட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.