ஆன்மிகம்

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி

செய்திப்பிரிவு

திருப்போரூர்: திருப்போரூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கந்தசுவாமி கோயில், தமிழகத்தின் முக்கிய முருகன் திருத்தலங்களில் ஒன்றாகும்.

இந்த கோயிலில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கான கருத்துரு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. கந்தசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதற்கு முன்பாக, அதனுடன் தொடர்புடைய வேம்படி விநாயகர், வேண்டவராசி அம்மன், முள்ளச்சி அம்மன் ஆகிய துணைக் கோயில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதன்படி, இந்த மூன்று கோயில்களிலும் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதில் கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் மாதவன், ஆய்வாளர் பாஸ்கரன், மேலாளர் வெற்றிவேல், கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT