தஞ்சை பெரிய கோயிலில் நேற்று ஆஷாட நவராத்திரி தொடக்க விழாவில், இனிப்பு அலங்காரத்தில் வராகி அம்மன்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள வராகி அம்மனுக்கான ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, காலை கணபதி ஹோமம், கணபதி அபிஷேகம், வராகி அம்மன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் பரதநாட்டிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில், ஏராளமானோர் கலந்துகொண்டு, வராகி அம்மனை தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 14) முதல் 23-ம் தேதி வரை தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலிக்க உள்ளார். விழா நாட்களில் தினமும் காலை 8 மணிமுதல் 10 மணி வரை வராகி ஹோமம், காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவின் நிறைவு நாளான ஜூலை 23-ம் தேதி தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம், வாணவேடிக்கை ஆகியவற்றுடன் நான்கு ராஜவீதிகளில் வராகி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள் செய்து வருகின்றனர்.