வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசிய அருட்தந்தை.
நாகப்பட்டினம்: கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியதை யொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். நடப்பாண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப். 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். தவக்காலத்தின் முதல்நாள் சாம்பல் புதன்கிழமையாக அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நேற்று காலை சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பின்னர், கிறிஸ்தவர்களின் நெற்றியில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத் தந்தை அற்புதராஜ் உள்ளிட்ட அருட்தந்தைகள் சாம்பல் பூசி, நாற்பது நாட்கள் தவக்காலத்தை தொடங்கிவைத்தனர்.