திருஉத்தரகோசமங்கை கோயிலில் சந்தனக் காப்புடன் ஆருத்ரா தரிசன கோலத்தில் காட்சியளித்த மரகத நடராஜர்.
கடலூர் / ராமநாதபுரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘சிவ சிவ’ என்ற முழக்கத்துடன் நடராஜப் பெருமானை தரிசனம் செய்தனர்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாயத் தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 25-ம் தேதி தொடங்கியது.
முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பின்னர் மதியம் 3.20 மணிக்கு ஆயிரங்கல் மண்டபத்தில் இருந்து ஸ்ரீநடராஜரும், சிவகாமி சுந்தரி அம்பாளும் சித்சபைக்கு சென்றனர். ஏராளமான பக்தர்கள் ‘சிவ சிவ’ முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத சிறப்பு நிகழ்வின் தொடர்ச்சியாக இன்று (ஜன.4) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலா, நாளை (ஜன.5 ) ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.
திருஉத்தரகோசமங்கை கோயில் ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் உலகின் முதல் சிவாலயமாக கருதப்படும் மங்களநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு பச்சை மரகதக் கல்லால் ஆன மரகத நடராஜருக்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா மிகவும் சிறப்பு பெற்றது. ஆருத்ரா தரிசனம் நடைபெறும் தினத்தன்று நடராஜர் சிலைக்கு சந்தனக்காப்பு சாத்தப்பட்டு, ஆண்டு முழுவதும் பாதுகாக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 25-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை மூலவர் நடராஜப் பெருமானுக்கு சந்தனம்படி களைதல் நடைபெற்றது. தொடர்ந்து, 33 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அப்போது, நடராஜர் சந்தனக் காப்பின்றி மரகத திருமேனியாய் காட்சியளித்தார். ஆண்டில் ஒருநாள் மட்டும் சந்தனக் காப்பின்றி நடராஜர் காட்சியளிப்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு கூத்தர் பெருமான் கல்தேர் மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு வரை நடராஜரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நள்ளிரவு மூலவர் நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது.
நேற்று (ஜன.3) அதிகாலை 4.30 மணியளவில் அருணோதய காலத்தில் நடராஜருக்கு சந்தனக்காப்பு சாத்தப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து, சோடச உபசார அலங்கார தீபாராதனை நடைபெற்றது. காலையில் கூத்தர் பெருமான் வீதி உலாவும், மாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், இரவு மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நடராஜரை தரிசனம் செய்தனர்.