ஆனி திருமஞ்சனத்தையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவகாம சுந்தரி சமேத நடராஜர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா நேற்று நடைபெற்றது.
உலக பிரசித்திப்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆனி திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்புமிக்கது.
ஆண்டுக்கு 2 முறை கோயிலின் 2-ம் பிரகாரத்தில் இருந்து புறப்பட்டு 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். அதன்படி, ஆனி திருமஞ்சனத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம் இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்று ஆயிரம் கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் எழுந்தருளினார். இந்நிலையில், நேற்று ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், 5-ம் பிரகாரத்திலிருந்து திருமஞ்சன கோபுரம் வழியாக சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சென்று மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயிலில் நடராஜர் புறப்பாடு மட்டும், திருமஞ்சனம் கோபுரம் வழியாக மட்டுமே நடைபெறுவது தனி சிறப்பாகும்.