

மம்தா பானர்ஜி
கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மம்தா பானர்ஜி தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி முகாம் அறிவித்துள்ளது. மேலும், தங்களின் அணியே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என்று பிரகடனப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, மம்தாவுக்குப் பதிலாக மூத்த சட்டமன்ற உறுப்பினர் அரூப் ராயைப் புதிய தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது.
கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இந்த அதிருப்தி குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரிதாபிரதா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தற்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், மாவட்டத் தலைவர்கள், கவுன்சிலர்கள் என 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றதாக தெரிகிறது. இக்கூட்டத்தில், மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் படங்கள் மேடையில் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருந்தன.
கட்சி விதிமுறைகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய செயற்குழு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும், கடந்த 2022 பிப்ரவரிக்குப் பிறகு இந்த அமைப்பு புதுப்பிக்கப்படாததால் கட்சியில் அரசியலமைப்பு சட்டச் சிக்கல் எழுந்துள்ளதாக ரிதாபிரதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் ஹவுரா சென்ட்ரல் தொகுதி எம்.எல்.ஏ அரூப் ராய் கட்சியின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய ரிதாபிரதா பானர்ஜி “நாங்கள் கட்சியின் விதிமுறைகளின்படியே இந்தச் சிறப்பு அமர்வைக் கூட்டியுள்ளோம். இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் முறைப்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். எது சரி, எது தவறு என்பதை ஆணையமே தீர்மானிக்கும். மம்தா பானர்ஜி விரும்பினால், எங்களின் புதிய அமைப்பின் முதன்மை ஆலோசகராக இருக்க தாராளமாக வரலாம்" என்று கூறினார்.