ஆன்மிகம்

சபரிமலையில் ‘விருந்து’ பாணியில் அன்னதானம்: ஐயப்ப பக்தர்கள் அதிருப்தி

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கான அன்னதான உணவு, விருந்து போன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சாம்பார், ரசம், பாயாசம், அப்பளம், கூட்டு உள்ளிட்ட பல பதார்த்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சில நாட்களில் நடை சாத்தப்பட உள்ள நிலையில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை சந்நிதானத்தின் மாளிகாபுரம் கோயிலுக்குப் பின்னால் அன்னதான மண்டபம் உள்ளது. மண்டல கால வழிபாடு தொடங்கியதில் இருந்து இங்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை உப்புமா, கொண்டைக் கடலை குழம்பு, சட்னி, சுடு தண்ணீர் வழங்கப்படுகிறது. மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மசாலா கலவை சாதம், பருப்பு குழம்பு, ஊறுகாயும், இரவு உணவாக மாலை 6.45 மணி முதல் கோயில் மூடப்படும் வரை கஞ்சி மற்றும் வாழைக்காய், தட்டாம்பயறு கூட்டும் வழங்கப்படுகிறது.

தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு உணவருந்தி வருகின்றனர். இந்த உணவு வெளிமாநில பக்தர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. எனவே ‘விருந்து பாணியில்’ அன்னதானம் வழங்கப்படும் என்று தேவசம் போர்டு அறிவித்தது. ஆனால் இரண்டு முறை அறிவித்தும் உணவு மாற்றம் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில் நேற்று (டிச.21) முதல் அன்னதான உணவில் மாற்றம் செய்யப்பட்டது.

இதன்படி சாப்பாடு, பருப்பு சாம்பார், ரசம், அவியல், ஊறுகாய், அப்பளம், கூட்டு, பாயாசம் ஆகியவற்றுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது. தேவசம் போர்டு நிர்வாக அதிகாரி பிஜு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். சந்நிதான சிறப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மண்டல வழிபாடு தொடங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் சில நாட்களில் நடை சாத்தப்பட உள்ளது. ஆரம்பத்திலே இதுபோன்ற அன்னதானம் வழங்கி இருந்தால் லட்சக்கணக்கான பக்தர்கள் பயன்பெற்று இருப்பர். டிச.27-ல் நடை சாத்தப்பட நிலையில் கடைசி நேரத்தில் உணவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஒருநாள் விட்டு ஒருநாள் தான் இந்த உணவு என்பது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதேபோல் பெரியபாதையில் வரும் பக்தர்களுக்கு தரிசன முன்னுரிமை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறி விட்டு தேவசம்போர்டு பின் வாங்கி விட்டது. இதுகுறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் கூறுகையில், வழக்கமான உணவுகளுடன் அன்னதானம் செய்ய ஏற்கனவே ஒப்பந்தம் விடப்பட்டதால், புதிய உணவுக்கான மாற்றம் செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருந்தது. பக்தர்களின் வருகை அதிகம் உள்ளதால் தரிசன முன்னுரிமை திட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

SCROLL FOR NEXT