ஆன்மிகம்

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

செய்திப்பிரிவு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் அமர்ந்து, அருள்பாலிக்கிறார் மாசாணி அம்மன்.

அம்மன் வழிபாட்டில் மிகமுக்கியமானது மயான தேவதையான மாசாணி அம்மனின் வழிபாடு. வழக்கமாக அம்மனின் உருவம் நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ கோயில்களில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

17 அடி நீளத்தில் சயன நிலையில் அம்மன் காட்சி தருவது இங்கு மட்டுமே. ஆற்றில் மிதந்து வந்த, அரசனின் தோட்டத்தில் விளைந்த மாங்கனியை உண்டதால், மன்னன் உத்தரவுபடி கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணை மயானத்தில் சமாதிப்படுத்தி, அதன்மீது அந்தப் பெண் போன்ற ஓர் உருவத்தை உருவாக்கி, மக்கள் வழிபடத் தொடங்கினர்.

மயான மண்ணில் சயனித்த நிலையில் அமைத்து, ‘மாசாணி’ என்ற பெயரில் நாளடைவில் வழிபடத் தொடங்கினர். ‘மயான சயனி’ என அழைக்கப்பட்டு பின்னர் ‘மாசாணி’ ஆகிவிட்டது.

சீதையைத் தேடி ராமர் தெற்கு நோக்கி பயணித்தபோது, ஆனைமலை உம்பாற்றின் கரை மயானத்தில் ஆதிபராசக்தி அருட்கோலம் கொண்டு ஆட்சி புரிவதை கண்டு, அங்கு மேடை அமைத்து அம்மனை வழிபட்டு, அருள் பெற்றார் என்கிறது தலபுராணம்.

அம்மன் நீதி தேவதையாக அருள் புரிவதால், நம்பிக்கை துரோகம், பொருள் திருட்டு போனவர்கள், எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், இங்குள்ள நீதி கல்லில் மிளகாய் அரைத்து பூசி தனக்கு நீதி கிடைக்க அம்மனிடம் முறையிடுவர். முறையீடு நியாயமானதாக இருந்தால், தவறு செய்தவர்களை அம்மன் தண்டிப்பார் என்பது இந்த நீதிக்கல்லின் மகிமை.

SCROLL FOR NEXT