ஆன்மிகம்

முருகன் மாநாடு நினைவாக பழநியில் 15 அடி உயர பிரம்மாண்ட வேல் நிறுவல்: பிப்.8 கும்பாபிஷேகம்

ஆ.நல்லசிவன்

பழநி: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நினைவாக, பழநி முருகன் கோயிலில் 15 அடி உயரத்தில் பிரம்மாண்ட ‘வேல்’ வியாழக்கிழமை (ஜன.29) காலை கிரேன் உதவியுடன் நிறுவப்பட்டது. பிப்.8-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநி பழனியாண்டவர் கல்லூரியில் 2024ம் ஆண்டு ஆக.24, 25ல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது. அதில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிலைத்த அடையாளமாக முத்தமிழ் முருகன் ஆய்வு மையம், பழநியில் ‘தமிழர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்’ அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். மாநாடு நினைவாக பழநியில் ‘வேல்’ நிறுவப்படும் என்பது உட்பட மொத்தம் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

          

அந்த தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு நினைவாக, பழநி மலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் படிப்பாதை தொடங்கும் மங்கம்மாள் மண்டபத்திற்கும், மயில் மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வேல் நிறுவுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, முருக பக்தரான சிவபிரதீப், தீப்தா ஆகியோர் மூலமாக ரூ.17.5 லட்சம் செலவில் 7 டன் எடைக் கொண்ட கருங்கல்லில் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 15 அடி உயரத்தில் பிரம்மாண்டமான வேலை உருவாக்கும் பணி சில வாரங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அப்பணிகள் நிறைவடைந்து, வேல் பிரதிஷ்டை செய்ய தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை (ஜன.29) காலை கிரேன் உதவியுடன் பிரம்மாண்ட வேல் நிறுவப்பட்டது. இப்பணிகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி செயற் பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் முத்துராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.

வரும் பிப்.8-ம் தேதி வேலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பிப்.7-ம் தேதி மாலை முதல் வேள்வி பூஜைகள் தொடங்க உள்ளன. பிப்.8-ம் தேதி 2ம் கால வேள்வி பூஜை முடிந்து, காலை 7 மணிக்கு மேல் வேலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT