ஆன்மிகம்

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நாளை மாலை மீண்டும் நடை திறப்பு: தயார் நிலையில் சந்நிதானப் பகுதிகள்

என்.கணேஷ்ராஜ்

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை மீண்டும் நடைதிறக்கப்பட உள்ளது. இதற்காக தயார்நிலையில் சந்நிதானப் பகுதிகள் வைக்கப்பட்டுள்ளது. வனப்பாதையில் பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்று இரவு நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் ஜன.14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக நாளை (டிச.30) மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார்நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து ஆழிக்குண்டத்தில் ஜோதி ஏற்ற உள்ளார். பின்பு விபூதி, பிரசாதம் வழங்கப்படும். அன்று பூஜைகள் எதுவும் இன்றி இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.

தொடர்ந்து நாளை அதிகாலை 3 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும்.நாளை நடை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு சந்நிதானத்தை தயார் செய்யும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு அனைத்து இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டது.

தடுப்புமருந்து புகை மூலம் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டன. மகரபூஜைக்கு தேவைப்படும் மருந்துகள் தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி டாக்டர் வி.எஸ்.விஷ்ணு தெரிவித்தார்.

நாளை நடை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு சத்திரம், அழுதகடவு, முக்குழி வனப்பாதையில் பக்தர்கள் காலை 7 மணி முதல் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகரபூஜைக்காக 3 நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடை திறக்கப்பட உள்ளதால் ஏராளமான பக்தர்கள் இன்று மதியம் முதலே பம்பை, வனப்பாதைக்கு வந்துள்ளனர்.

SCROLL FOR NEXT