கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் பக்தர்களின் வெற்றி வேல், வீரவேல் கோஷங்களுக்கு இடையே தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது. நாளை மாலை இங்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
பிரசித்திபெற்ற குடைவரை கோயிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில், 5-ம் நாளான இன்று தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு சந்தி கால பூஜை நடந்தது. காலை 10 மணிக்கு சுவாமி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, தூது சென்ற வீரபாகுவை சூரர்கள் சிறைபிடித்தனர்.
இதையடுத்து அவரை மீட்க பகல் 12 மணிக்கு சுவாமி வீரவேல் ஏந்தி மயில் வாகனத்தில் போர்க்களத்தை அடைந்தார். அங்கு கோயிலிலிருந்து சுவாமி சார்பில் நாரதர் முருகாற்றுப்படை பாடல்கள் பாடியபடி சூரபத்மனிடம் 3 முறை தூது சென்றார். தூது படலத்தில் சமரசம் ஏற்பாடாததை தொடர்ந்து தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி கழுகாசலமூர்த்தி தாரகாசூரனை சம்ஹாரம் செய்தார். அப்போது பக்தர்கள் “வெற்றி வேல், வீர வேல்” என கோஷங்கள் எழுப்பினர்.
தாரகாசூர சம்ஹாரம் வேறு எந்த முருகன் கோயிலிலும் நடைபெறாது என்பது குறிப்பிடதக்கது. பின்னர், கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு சுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவிருக்கிறார்.
6-ம் நாளான நாளை (7-ம் தேதி) மாலை 4 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 6.30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி கழுகாசலமூர்த்தி எழுந்தருளி வீதி உலா வந்து காட்சியளிப்பார். 10 மணிக்கு சஷ்டி விரதம் இருந்து வரும் பக்தர்கள் கோயில் மேல் வாசலில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து மலையை சுற்றி கிரிவலமாக வந்து கோயிலை வந்தடைவர்.
தொடர்ந்து, காலை 12 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை வழிபாடு நடகும். மாலை 3.30 மணிக்கு சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் போர்க்களம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு கோயில் தெற்கு வாசல் முன்பு சூரசம்ஹாரம் நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி மு.கார்த்தீஸ்வரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், சீர்பாத தாங்கிகள் செய்து வருகின்றனர்.