ஆன்லைன் பங்கு முதலீடு என கூறி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.10 கோடி பறிப்பு: சென்னையில் 2 பேர் கைது

ஆன்லைன் பங்கு முதலீடு என கூறி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.10 கோடி பறிப்பு: சென்னையில் 2 பேர் கைது
Updated on
2 min read

சென்னை: ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீடு என்ற பெயரில் ஆசை வார்த்தை கூறி தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.10 கோடி பறிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மனைவி சமூக வலைதளத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில், முதலீடு செய்த பணத்துக்கு பல மடங்கு வட்டி உடனடியாக கிடைத்து விடும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர், முதலீட்டு வர்த்தக விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தபடி வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் இணைந்துள்ளார்.

அந்த குழுவில் மோசடி நபர்கள் அனுப்பிய லிங்க் மூலமாக முதலீட்டு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தும் அதில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்று சந்தேக நபர்கள் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பியும் அவர்கள் சொன்னபடி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தேதிகளில் ரூ.10 கோடியே 27 லட்சத்து 6,364-ஐ செலுத்தியுள்ளார்.

அவர் செலுத்திய பணத்திற்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது போலவும் மோசடி பேர்வழிகள் அந்த செயலியில் காண்பித்துள்ளனர். அதன்பின் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது அவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறி மேலும் பணம் கேட்டு வற்புறுத்தி உள்ளனர். அதன் பிறகே அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, தொழிலதிபர் மனைவி இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக மோசடிக் கும்பலைச் சேர்ந்த சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்த ராஜேஸ் ராம் (36), கே.கே.நகரைச் சேர்ந்த சீனிவாசன் (43) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தொழிலதிபர் மனைவியிடம் பண மோசடிக்கு பயன்படுத்திய 3 செல்போன்கள், 2 ஆதார் கார்டுகள் மற்றும் பான்கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த மோசடி கும்பல், ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீடு மோசடி செய்வதற்காக பல்வேறு நபர்கள் மற்றும் போலியான நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் கணக்குகள் ஆரம்பித்து பல்வேறு நபர்களை ஏமாற்றி மோசடியாக பணம் பெற்று அந்த பணத்தை மலேசியாவிலுள்ள ஏஜென்டுகளுக்கு அனுப்பியுள்ளது புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மலேசியாவிலிருந்து மோசடிக்கு மூளையாக செயல்பட்ட நபர்களை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சமீப காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடி மற்றும் ஆன்லைன் பகுதி நேர வேலை தொடர்பாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்கள் மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என தெரிவித்து போலியான பங்கு வர்த்தக செயலிகள், லிங்குகள், வலைதளங்களை அனுப்பியும் பொய்யான டிமேட் கணக்குகளை துவக்கியும் பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை பெற்று மோசடி பேர்வழிகள் பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். எனவே, இதுபோன்ற மோசடிகளில் யாரும் ஏமாந்து விடாமல் விழிப்புடன் இருக்கும்படி சென்னை காவல் ஆணையர் அருண் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in