“மழை மட்டுமா அழகு... சுடும் வெயில்கூடத் தான் அழகு...” என்ற திரைப் பாடல் வரியை நீங்கள் கேட்டுக் கடந்திருக்கக் கூடும். அந்தப் பாடல் வரி போன்றதே வாழ்க்கையும். சில நேரங்களில் நமக்கு அது தரும் கடும் கசப்பு மருந்தே வாழ்தலை இதமாக்கும் அருமருந்தாக அமைந்துவிடும்.
‘இதை எப்படி கடக்கப் போகிறோம்!?’ என்று நாம் அஞ்சி நடுங்கிய பிரிவை காலப்போக்கில் நினைவுப் பெட்டகத்திலிருந்தே துடைத்தெறியும் ஜென் நிலையை அடைந்திவிடுவோம். அதற்கு முதற்படி, மனித வாழ்க்கையின் இயல்பான அங்கமான துயரத்தை ஏற்றுக் கொள்ளப் பழகுதலே!
‘அப்படியென்றால், துன்பங்களைக் கடக்க முயற்சிக்கக் கூடாதா?’ என்று நீங்கள் கேட்கலாம்.
துன்பம் என்னதென்று இனம் கண்டு, அதை ஏற்றுக்கொள்ளும்போதே, அதற்கான தீர்வுகளை ஆப்ஷன்களோடு கடைவிரிக்க ஆரம்பித்திருக்கும் நம் மனம்.
நமது நாயகி மய் செய்யும் தேர்வும் அந்த ரகம்தான். அவளது பிரேக்-அப் முடிவால் காதல் கைகூடாவிட்டாலும், ஓர் அழகான எதிர்காலத்துக்குள் அவள் பிரவேசிப்பாள். ஒரு தனித்து வாழும் பெண்ணின் காதலும், அவளது பிரேக்-அப் பற்றியும் கூடவே சில சமூக பிரச்சினைகளையும் உணர்வுப்பூர்வமாக பேசும்படம்தான் 2024-ம் ஆண்டு வெளியான வியட்நாமீஸ் மொழிப் படம் ‘மய்’ (MAI). ரொமான்டிக் டிராமா ஜானரில் அடங்கும் இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
காதல் என்பது இன்றைக்கு பல பரிமாணங்களில் பூத்துக் கிடக்கிறது. ஆண் - பெண் மட்டுமல்ல, தன்பாலின உறவு, லிவ்-இன் உறவு என புதிய முகங்களில் மிளிர்கிறது. இரண்டு உயிர்கள் இணையும் ஓர் உறவில் பாலினங்கள் மாறினாலும், வயது பேதங்கள் இருந்தாலும்கூட அன்பு, காமம், கோபம், ஏமாற்றம், வருத்தம் என உணர்வுகள் ஒரேமாதிரியானவை தானே!
அந்த வகையில் மய் - டுவோங் இடையேயான காதலையும், மய்-யின் மகள் பின் மின்-னின் தன்பாலின காதலையும் இந்தப் படம் பதிவு செய்த விதம் சலனமில்லா நீரோட்டம் போல் ரம்மியமானது.
வியட்நாமீஸ் படங்களில் அண்மைக் காலங்களில் அதீத வசூல் செய்த படம் ‘மய்’. அதனாலேயே அதற்கான ஹைப் உலகளவில் எகிறியது. வியட்நாமின் நகர்ப்புற வாழ்வியலை ஒட்டியே இந்தக் கதை பின்னப்பட்டு இருக்கிறது.
நாயகன் டுவோங், ‘பார்ன் வித் ஏ சில்வர் ஸ்பூன்’ ரகம். வாழ்க்கையை எக்ஸ்ப்ளோர் செய்கிறேன் என்று சில பணக்கார வாரிசுகள் விட்டேத்தியாகச் சுற்றுவார்கள் அல்லவா. நாயகனை அதில் வகைப்படுத்தலாம். அபார்ட்மென்ட் வாசம், மது போதையில் சஞ்சாரம், அழகான பெண்களுடன் சுகவாசம் என்று வாழ்க்கையைக் கழிக்கும் 30 வயது இளைஞன்.
அவன் வசிக்கும் அதே அபார்ட்மென்ட்டில், வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வைத் தேடி குடியேறுபவள்தான் மய். 37 வயதான அவள் வசீகரத் தோற்றம் கொண்டவள். அந்த வசீகரம், அவள் ஆழ்மனதின் ஆறாத ரணங்கள், தந்தையின் சூதாட்டப் பழக்கத்தால் அவள் தோளில் பாரமாக இருக்கும் கடன் சுமையை மறைத்துவிடும்.
ஆனாலும், அவளது மகளின் எதிர்காலத்தை பற்றிய எண்ண ஓட்டங்கள் மட்டும் அவள் புன்னகை கடந்தும் துருத்திக் கொண்டிருக்கும். எல்லா உணர்வுகளையும் பொட்டலமாகச் சுமந்து கொண்டு நகர்ப்புற வாழ்வு பொருளாதார முன்னேற்றத்தை, நல்லதொரு வாழ்க்கையை தருமென்று நடைபோடும் நம்பிக்கை நாயகி அவள்.
புதிய நகரில் மசாஜ் தெரபிஸ்டாக அவள் திறம்பட இயங்க, அங்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் மய் சர்வீஸ்தான் வேண்டும் என்கிறார்கள். இது சக பெண் பணியாளர்கள் மத்தியில் அவள் மீது பொறாமையை உண்டாக்க, அவளுக்கு வாடிக்கையாளர்கள் வழங்கும் டிப்ஸ்-க்கு பின்னால், அவளது பாலியல் சேவைகள் இருக்குமென்று பரிகாசம் செய்கிறார்கள்.
நம் மீது வைக்கப்படும் அபத்தமான விமர்சனங்களை நாம் மறுத்துப் பேசாமலும், எதிர்த்து சண்டையிடாமலும் உதாசீனப்படுத்துவது எதிராளியை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தும் ஆயுதம்.
பணியிடத்திலும், குடும்பத்திலும் பெண்கள் இந்த ஆயுதத்தை எவரும் ரெடியாக வைத்துக் கொள்ளுதல் மன நிம்மதியை உறுதிப்படுத்தும். மய் அதைச் சிறப்பாகச் செய்வாள்.
அது ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த ப்ரிஸ்க்ரிப்ஷன் என்றால், சமூக அபத்தங்கள் ஒப்பீட்டளவில் பெண்கள் மீதும் மாற்றுப் பாலினத்தவர் மீதும்தான் இன்றளவும் அதிகமாக சுமத்தப்படுகின்றன. மய்-யின் இந்த ஆயுதம் மட்டுமல்ல, அவள் மசாஜ் சென்டருக்கு வரும் ஆண்களின் அத்துமீறல் முயற்சிகளை தடுத்து தற்காத்துக் கொள்ளும் விதமும் சிறப்பு.
கட்டுமானப் பணி தொடங்கி கார்ப்பரேட் பணி வரை பாலியல் சீண்டல்கள், சுரண்டல்கள் புரையோடிப் போய்த்தான் இருக்கின்றன. அதை எதிர்த்து குரல் கொடுப்பது மிகவும் அவசியம். இருப்பினும், பாலியல் சீண்டலுக்கு எதிரான முதல் நடவடிக்கை, அதை முளையிலேயே கிள்ளி எறிவது. அது ஒரு கலை. அதை மய் எத்தனை நேர்த்தியாகச் செய்கிறாள் என்பது படத்தைக் காணும்போது உங்களுக்குப் புரியும்.
மய் பணியிட வாடிக்கையாளர்களில் அவளுக்கு இருவர் நெருக்கமாவார்கள். அதில் ஒருவர் நம் நாயகன் டுவோங். இன்னொருவர், மத்திய வயது பணக்கார பெண்மணி. இந்தப் பீடிகையிலேயே, கதையில் இவர்களின் முக்கியத்துவத்தை நீங்கள் ஓரளவு ஊகித்திருக்கக் கூடும்.
எப்போதும் அழகான பெண்களை தன் இச்சைக்கு வசப்படுத்தியே பழக்கப்பட்ட நாயகன், மய்-யிடமும் பாலியல் ரீதியான எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறான். ஆனால் அவனுக்கும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு தரும் அதே வைத்தியத்தை தந்து எச்சரிக்கிறாள்.
இருந்தாலும், அவள் வீட்டருகேயே இருப்பது அவனுக்கு இன்னும் தோதாகிவிடுகிறது. அவளை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறான். அவள் வருகை அவன் பார்வையில், பேச்சில், அணுகுமுறையில் மாற்றம் செய்கிறது. மீண்டும் மீண்டும் அவளிடம் பேசுகிறான். “நான் கெட்டவனாகத் தான் இருந்தேன், உன்னைப் பார்க்கும்வரை” என உண்மை சொல்கிறான்.
அபார்ட்மென்ட்டில் அவளுடன் வசிக்கும் எல்லோருமே அவளை பாலியல் தொழிலாளியாக, தங்கள் கணவரை வசியப்படுத்தக் கூடியவளாக வசைபாட, டுவோங் மட்டுமே அவளை அன்புடன் அணுகுவது அவளுக்கும் இதமாக இருக்கிறது. அதனால், அவனை மதுபானம் அருந்துகையில் சியர்ஸ் சொல்லும் நண்பனாக அனுமதிக்கிறாள். அவனிடம் காதல் கொப்பளிப்பதை உணர்ந்து ‘உன்னைவிட எனக்கு 7 வயது அதிகம், எனக்கொரு வளர்ந்த மகள் இருக்கிறாள்’ என்று சொல்லி, பவுண்டரி ஃபிக்ஸ் செய்கிறாள்.
ஆனால், அவனோ “நான், உன் வாழ்வில் இருந்தால் அது அழகாகும்” என்றுருகி அந்த பவுண்டரியை உடைக்க முயற்சிக்கிறான்.
டுவோங் - மய் மது அருந்திக்கொண்டே காதலிப்பதைப் பற்றிப் பேசும் காட்சிகள் ஆழமானவை.
“நீ என்னை காதலித்தால் என்னுடன் எனது மகளையும் சேர்த்து நீ பராமரிக்க வேண்டியிருக்கும்” என்று சொல்வாள் மய். சற்றும் யோசிக்காமல், “பரவாயில்லை கைக்குழந்தை என்றால்தான் சிரமம். வளர்ந்தவள் தானே, நாங்கள் நட்புடன் இருப்போம். எனக்கு நண்பர்கள் பிடிக்கும்” என்பான். அதற்கு மை, “வளர்ந்துவிட்டால் மட்டும் பிள்ளைகளால் பிரச்சினையிருக்காது என்றில்லை. அவள் வயதுக்கேற்ற பிரச்சினைகளுடன் வருவாள்” என்பாள்.
“இதுவரை நான் சுயநலவாதியாகவே இருந்துவிட்டேன். எனக்கு நேசிக்கும், யாரையாவது பார்த்துக் கொளும் பொறுப்பு கொடு” என்பான்.
கைவிடல், விவாகரத்து, கணவனை இழத்தல் என்று சூழ்நிலைகளால் தனித்து வாழும் ஒரு பெண்ணுக்கு, அதுவும் தாயானவளுக்கு காதல் எளிதில் வாய்ப்பதில்லை. அப்படியே அவளுக்கு யார் மீதாவது காதல் வந்தாலோ அல்லது அவள் மீது யாராவது காதல் இருப்பதாகத் தெரிவித்தாலும் அடுத்த நொடியே அவளுக்கு தன் பிள்ளையின் எதிர்காலம் பற்றிய அச்சம் வந்துவிடும், சிலருக்கு தனது பழைய துயரம் பயமுறுத்தி சந்தேகத்தை ஏற்படுத்தும். இன்னும் சிலருக்கு இரண்டுமே!
‘சிங்கிள் மதர்’-களின் எதிர்பார்ப்பு காதல், காமத்தை தாண்டி, இணையாக வருபவரின் பொறுப்பேற்றுக் கொள்ளுதலில்தான் உருகும்.
டுவோங்கிடம் உருகி மையல் கொள்வாள் மய். காதலுக்கு டுவோங் தரும் உத்தரவாதம் போலவே, தன் தாய்க்கு தனிப்பட்ட வாழ்க்கை அவசியம் என்றுணர்ந்து செயல்படும் மகள் பின் மின்-னின் அன்பும் உன்னதம்!
“நீ சீக்கிரம் காதல் வயப்படு. உன்னை நான் தனியாக வசிக்க அனுப்பிவைத்தது நீ உனக்கொரு துணை தேடத்தான். உன்னை நீயே வதைத்தது போதும். உனக்கு அந்த இளைஞனை பிடித்திருந்தாள் முன்னேறிச் செல்” என்றெல்லாம் பேசும் காட்சி நெகிழ்ச்சியின் உச்சம்.
தான் ஒரு தன்பாலின உறவாளர் என்பதை பின் மின் கேஷுவலாக அன்னையிடம் பேசுவது, மய் அதை எந்த முன்முடிவுமின்றி ஏற்றுக் கொண்டிருப்பாள் என்பதை நமக்கு உணர்த்தும். LGBTQ+ உறவாளர்களை சமூகம் இப்படித்தான் ஆர்ப்பாட்டமில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான பாடம்.
மொத்ததில் “மகள்களைப் பெற்ற தாய்க்குத் தான் தெரியும் அவளொரு வாழ்நாள் தோழி” என்று கவிதை வடிக்கத் தகுதியானதாக இருக்கும் மய் - பின் மின் உறவு.
டுவோங்கின் பொறுப்புணர்வும், மகளின் அக்கறையும் அவளை காதல் வானில் பறக்கவிடும். அவள் சுவாசிக்கும் முதல் காதல் அது.
தமிழ், இந்தி, வியட்நாமீஸ்... மொழி எதுவாக இருந்தால் என்ன... காதலுக்கு முதல் எதிரி வருங்கால மாமியார்தான் போல!
அப்படியாக, டுவோங்கின் தாயுடனான சந்திப்பு மய்-க்கு எட்டிக்காயை ஊட்டும். காரணம், மசாஜ் சென்டரில் மய்-க்கு இருவர் நெருக்கம் என்று ஆரம்பத்தில் சொன்னோம் அல்லவா. அதில் ஒருவர்தான் அந்த நடுத்தர வயது பெண்மணி டுவோங்கின் தாய்.
அங்கே, ஒரு மூத்த சகோதரிபோல் மய்-க்கு காதல் ஆலோசனைகள் வழங்கியவர், மய்-யின் மகளுக்கும், தந்தைக்கும் வேலை போட்டுக் கொடுத்தவர், அவளுடைய காதலன் தன் மகன் என்றவுடன் சுயத்தைக் காட்ட ஆரம்பிக்கிறாள்.
மனிதர்களுக்கு பல முகங்கள், பற்பல நாக்குகள் உண்டு. அதைச் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்ளும் வித்தையும் அறிந்தவர்கள். அதுதான் ஆறாம் அறிவு! அதிலும் நாசுக்காக பேசும் நாக்கு இருக்கிறதே, அது மொத்தத் தவறையும் எதிர்ப்பக்கம் திருப்பி அவர்களை குற்ற உணர்ச்சிக்குள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும்.
டுவோங்கை பிரிய வேண்டும் என்ற முடிவை மய்-யை எடுக்க வைக்கும் அவனது தாயின் நாசுக்குப் பேச்சும் அப்படியானதே!
ஆனாலும், டுவோங் உறுதியாக மய்-க்கு ஆதரவாக நிற்பான். அவள் அவனைப் புறக்கணித்தாலும்கூட பொறுப்பான துணையாக இருக்க அவனுடைய மெனக்கிடல்கள் அவளை ஈர்த்துவிடும்.
முதலில் நல்ல மாதிரியாக பேசிய டுவோங்கின் தாய், பின்னர் ‘உன் மகளுக்கு ஸ்விட்சர்லாந்தில் கல்வி, உன் தந்தையின் முழுக் கடனையும் அடைக்கிறேன், மாறாக என் மகனை எனக்குக் கொடு’ என்று வில்லத்தனமான டீல் பேசுவாள்.
அந்தக் காட்சிகளில் மய்-யின் நடிப்பு பாராட்டத்தக்கது. தன்னை சிறு வயதில் கடனுக்காக விற்ற தந்தை, இப்போது மீண்டும் அதே கடனுக்காக தனது வீக்னஸை டுவோங் தாயிடம் சொல்லி விற்க முயற்சித்ததை அறிந்து எரிமலைபோல் வெடிப்பாள். அவளுடைய அத்தனை துன்பங்களுக்கும் அவளது தந்தையே காரணம் என்பதை நாம் அறியும் காட்சியும் அதுதான்.
ஆனாலும், அத்தனை துரோகத்தைத் தாண்டியும் தந்தைக்கு கருணை காட்டியிருப்பாள் மய்.
தகுதியற்ற உறவுகளுக்கு கருணை காட்டுவது நம் அன்பு உள்ளத்தை குப்பைத் தொட்டியில் வீசுவதற்கு நிகர். அது அன்பின் மீது துர்நாற்றம் பூசும்.
டுவோங் வீட்டில், ஒரு பிரளயமே நடந்தேற, மய் சில தீர்க்கமான முடிவுகளை எடுப்பாள். அதில் முக்கியமானது தனது தந்தையை நிரந்தரமாக விட்டொழிப்பது. இரண்டாவது தன்னை துன்புறுத்திய அபார்ட்மென்ட் வாசிகளுக்கும், பணியிட இம்சைகளுக்கும் அடி கொடுப்பது.
மய் வசிக்கும் அதே குடியிருப்பில் இன்னொரு பெண்ணும் இருப்பாள். அலங்காரத்திலும், ஆணவத்திலும் குறைவில்லை என்பதுபோல் நடந்து கொள்வாள். அவள் மய்-யிடம் இடம் பேசும்போது, “பெண்ணாகப் பிறப்பதே சாபம்தான். அதில் நீ எல்லோருடைய ஏச்சுக்களையும் ஏன் ஏற்கிறாய். உன் வாழ்க்கையை வாழ். நான் உன் இடத்தில் இருந்திருந்தாள் என்னை சீண்டுவோருக்கு செமத்தியாகத் தருவேன்” என்பாள்.
ஏளனப் பேச்சுக்களை கண்டும் காணாமல் கடக்கும் மவுனம் ஓர் உத்தி என்றால், மீண்டும் மீண்டும் சீண்டுவோருக்கு தக்க பதலடிதான் சரியான உத்தி என்று புரிந்துகொண்டு மய் ‘மாஸ்’ காட்டுவாள்.
இவ்வாறாக தந்தை, பணியிடப் பிரச்சினைகளைத் தொடர்ந்து காதலிலும் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பாள்.
ஓர் ஆழமான காதல் ஒருவொருக்காக இன்னொருவரை எந்தச் சூழலிலும் நிற்க வைக்கும். அதேபோல்தான் ஓர் ஆழமான காதல், அதைத் தொடர்வதா, முறிப்பதா, எது இருவருக்குமே அதிகப்படியான நன்மை தரும் என்பதையும் நிதானமாக அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கவும் வைக்கும்.
“எனக்கு காதல் போதும். நான் சோர்ந்துவிட்டேன். உன் தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நாம் இந்த உறவை இன்னும் நீட்டிப்பது சுயநலமாகும். நீ 30 வயது இளைஞன். எனக்காக உன் தாயை மோசமாக நடத்தாதே. நாம் தவறான காலத்தில் சந்தித்துவிட்டோம். எனக்காக நீ காத்திருக்காமல் வாழ்க்கையில் முன்னேறு” என்ற அவளின் பிரேக்-அப் வார்த்தைகள் எத்தனை முதிர்ச்சியானவை.
கைகூடாத காதலும் ‘மய்’ சொல்லும் பிரேக்-அப் பாடமும் காதலிலும், உறவிலும் தேவையான மன முதிர்ச்சியைப் பற்றியதுதான்.
இன்ஸ்டாவில் அறிமுகமாகி இன்ஸ்டன்ட்டாக எல்லாவற்றையும் எக்ஸ்ப்ளோர் செய்துவிட்டு தொடரவும் முடியாது, விடவும் இயலாது தவிப்பர்கள் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்.
அடுத்த அத்தியாயத்துக்காக ஆயத்தமான மய், மனதில் ஓடும் வாசகங்களை சப்டைட்டிலாக வாசிக்கும்போதே இதமாக இருக்கும். இவர்கள் பிரிந்துவிட்டார்களே என்ற ஆதங்கத்தைத் தவிர்த்து, அவரவர் பாதையில் வெற்றி காணட்டும் என வாழ்த்தச் சொல்லும்.
மீண்டும் அவர்கள் சந்திக்கும்போது, டுவோங் கர்ப்பிணி மனைவியோடு இருப்பான், மை தொழிலில் வெற்றி பெற்றவளாக, அவளுடைய மகள் அவளது வாழ்க்கையில் வெற்றிகரமாகப் பயணிப்பதில் மகிழ்ச்சி கொண்டவளாக இருப்பாள்.
டுவோங்கிடம், “எனக்காக நீ காத்திருக்கவில்லை... அதில் எனக்கு மகிழ்ச்சி” என்பாள்.
நீண்ட பிரிவுக்குப் பின்னர் சந்திக்கும் மய்-யை தழுவிக்கொள்ள டுவோங் முற்படுகையில், அவனை கண்ணியமாக தடுத்துவிட்டு. “ஒருவரின் பிரிவால் யாரும் இறந்துவிடுவதில்லை” என்று கூறி விடைபெறுவாள்.
எத்தனை ஆழமான உண்மை. யாரைப் பிரிவதாலும் யாரும் இறந்துபோகப் போவதில்லை. அப்புறம் ஏன் சோகங்களும், அழுத்தங்களும்!
வந்த, வரும் பிரிவுத் துயரை ஏற்றுக் கொண்டு கடக்கப் பழகுவோமாக.
அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் ஹைன்லைனின் அறிவியல் புனைவு நூலில் வரும் ‘Stranger in a Strange Land’-ல் “Love is that condition in which the happiness of another person is essential to your own” வரிகள் நினைவுக்கு வருகின்றன.
“அன்பு என்பது மற்றொருவரின் மகிழ்ச்சி, உங்கள் சொந்த மகிழ்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கும் ஒரு நிலை” என்பதே அதன் அர்த்தம்.
‘மய்’ படத்தைப் பார்த்தபோது, டுவோங் தாயின் மகிழ்ச்சி, மய்-யின் மகிழ்ச்சிக்கு இன்றியமையாததாக இருந்ததுபோல் நான் உணர்ந்தேன். நீங்களும் பார்த்துப் பகிருங்கள்.
| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in