ஓடிடி விமர்சனம்

The President’s Cake: லாமியாக்களின் கண் சிமிட்டல்களில்... | திரை தேவதைகள் 40

பாரதி ஆனந்த்

எந்தப் போரையும் குழந்தைகள் தொடங்குவதில்லை. எந்தப் போரையும் நிறுத்தும் வல்லமையும் அவர்களிடம் இல்லை. ஆனால், போரில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ குழந்தைகள் தான். அந்த வகையில் பார்த்தால், ஒவ்வொரு போருமே குழந்தைகளுக்கு எதிரான போர் தான்.

ஒரு குழந்தைக்கு அன்பான குடும்பத்தையும், வறுமையற்ற சூழலையும் விட சிறந்த நலன் வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால், இந்த உலகம் செய்யும் அரசியல், எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாவற்றையும் சமமாகக் கிடைக்க விடுவதில்லை. வளமான நாடுகளில் வசிக்கும் குழந்தைகளும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், வறுமை - உள்நாட்டுக் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வசிக்கும் குழந்தைகளும் ஒருபோதும் ஒரே மாதிரியான வாழ்க்கையைக் காண்பதில்லை.

ஒரு குழந்தையின் முன் பெற்றோர் ஆக்ரோஷமாகப் பேசிக் கொள்வதே அக்குழந்தையின் மனதில் காயத்தை உண்டாக்கும் என்கின்றன உளவியல் ஆய்வுகள். அப்படியிருக்க, கொத்துக் குண்டுகளும், ஏர் சைரன்களும், ஏவுகணைகளும் பாயும்போது அக்குழந்தைகளின் மனநிலை என்னவாக இருக்கும்? அதன் ஊடே அவர்களின் வாழ்வு எப்படி இருக்கும் என்று நாம் என்றாவது யோசித்திருக்கிறோமா?! இல்லை, போரை நடத்தும் ‘மாகணம் பொருந்திய’ அரசியல்வாதிகள் யோசித்திருப்பார்களா?

புறச்சூழலுக்கு ஏற்ப நடிக்கத் தெரியாதவர்கள்தான் குழந்தைகள். இயல்பைத் தவிர வேறேதும் அறியாத புனிதர்களின் வாழ்வை போர் என்னும் சூது கவ்வும்போது அப்பிஞ்சுகளின் வாழ்க்கை சிக்கிச் சின்னாபின்னமாவதை 2025-ல் வெளியான ‘The President’s Cake’ என்ற திரைப்படம் அத்தனை தத்ரூபமாகப் படம் பிடித்திருக்கிறது.

இந்தப் படத்தைக் காண்பவர்களுக்கு துளி அளவேனும் மனசாட்சி இருந்தால் போதும்... உலுக்கப்படுவர். ஈராக் போர் பற்றிய இந்த ஈராக்கியப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

மனிதர்கள் தங்களை ஆண் என்றும், பெண் என்றும், இனம் என்றும், சாதி என்றும், மதம் என்றும், அதற்குள்ளும் உட்பிரிவுகள் என்றும் பிரித்து, அதிலும் உயர்ந்தது தாழ்ந்தது என்று வகுத்து, அதற்காகவே அடித்துக் கொண்டு மாய்கிறார்கள். வேடிக்கை மனிதர்கள்!

1990-களில் ஈராக்கில் போர் நடந்து கொண்டிருந்த காலம் தான் கதைக்களம். அந்தப் பின்னணியை நாம் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள, ஈராக்கின் நிலப்பரப்பு மற்றும் வரலாறு பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. தெற்கு ஈராக்கில், டைக்ரிஸ் - யூப்ரடீஸ் நதிகள் சங்கமிக்கும் இடத்துக்கு அருகில் உள்ளது மெசபடோமியா சதுப்புநிலம். அங்கு வாழ்ந்து வரும் ஷியா முஸ்லிம் மக்களில் ஒருத்தி தான் நம் கதையின் நாயகி லாமியா.

இந்தச் சதுப்புநிலவாசிகள் மாஅதான் (Maʻdān) என்று அழைக்கப்படுகிறார்கள்.1991 வளைகுடாப் போருக்குப் பிறகு, ஷியா கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்ததற்காக அப்பகுதி மக்கள் தண்டிக்கப்பட்டனர். எப்படியென்றால், அவர்கள் வசித்துவந்த சதுப்புநிலங்களில் சுமார் 90%, திசை திருப்பும் கால்வாய்கள் மற்றும் அணைகளால் வற்றச் செய்யப்பட்டன என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள்.

வரலாறையும், கண்ணீரையும் சுமந்த ஈராக்கின் சதுப்பு நிலப் பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் லாமியா மற்றும் அவளுடைய பாட்டியின் குடும்பமும் ஒன்று. அங்கு எல்லா வீடுகளும் பிரம்புகளை வளைத்துப் பின்னப்பட்டவை. போக்குவரத்துக்கு வீடுகள்தோறும் சிறிய படகுகள் இருக்கின்றன. இரவு நேரத்தில் வெளிச்சம் பாய்ச்ச லாந்தர்ன் விளக்குகள், தீப்பந்தங்கள். மூன்று வேளை உணவென்பது அம்மக்களுக்கு சொகுசு. ஒருவேளை உணவைக் கூட பெரியர்கள் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்கும் அவலநிலை தான் போர் அவர்கள் மீது சுமத்திய இயல்பு.

அதிகாரத்துக்கும், அதனை செயல்படுத்தும் பதவி வெறியர்களுக்கும் சாமானிய மக்களின் உயிரும், உணர்வுகளும் எப்போதுமே துச்சம்தான்.

“இன்று மதியத்துக்கு உணவில்லை; அந்த ஆப்பிளை யாருக்கும் கொடுக்காமல் நீயே சாப்பிடு” என்று லாமியாவுக்கு சொல்லி அனுப்புகிறாள் அவளுடைய பாட்டி. அதைப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டு செல்லும் லாமியாவை வாசலிலேயே தடுத்து நிறுத்தும் ஆசிரியரான் முன்னாள் படை வீரன் அந்த ஆப்பிளை நைசாக அபகரித்துக் கொள்வதோடு அடுத்ததாக இன்னொரு ஏவுகணையைப் பாய்ச்சுகிறார்.

பள்ளியறையில் மாணவர்கள் அவர்கள் பெயரை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி ஆசிரியர் நீட்டும் தகர டப்பாவில் இடுகிறார்கள். அதை குலுக்கி எடுக்கப்படும் பெயர்கள் ‘அதிர்ஷ்டசாலிகள்...’ ஆசிரியரைப் பொறுத்தவரை!

ஈராக் அதிபர் சதாம் உசேன் பிறந்தநாளை ஒட்டி குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘அதிர்ஷ்டசாலிகள்’ செய்ய வேண்டியவற்றை ஆசிரியர் பட்டியலிடுகிறார். அதில் ஸாயீது பழங்கள் கொண்டு வர வேண்டும். லாமியா கேக் செய்து கொண்டு வர வேண்டும். ஸாயீது லாமியாவின் நண்பன்.

ஆசிரியர் பணித்த கேக் டாஸ்க் லாமியாவை பீதியில் தள்ளுகிறது. ஏனெனில் கேக் செய்யாவிட்டால் ராணுவ அதிகாரிகளிடம் லாமியா குடும்பம் பற்றி பிராது கொடுக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் ஆசிரியர் விடுத்திருப்பார்.

லாமியாவுக்கு இன்னொரு துணையும் உண்டு. அது ஒரு சேவல். அதன் பெயர் ‘ஹிந்தி’. அது அவளுக்கு வெறும் செல்லப் பிராணி மட்டுமல்ல.

லாமியாவின் உலகம் வறுமை, போர், சர்வாதிகாரத்தால் சூழ்ந்திருக்கிறது. அதில் அவளை எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் தள்ளாமல் அவள் விரும்பியபடி அரவணைப்பை தரக்கூடிய ஒரே உயிர் அவளுடைய சேவல்.

குழந்தைகள் உலகில் வன்முறையை கட்டவிழ்க்கவும், அவர்களின் அமைதியைக் களவாடவும் போர் விரும்பிகள் குற்றவுணர்வு கொள்வதில்லை. ரத்த தாகம் கொண்டவர்களுக்கு குழந்தைகள் வெறும் பொம்மைகளே.

கேக் செய்ய லாமியாவுக்கு தேவை 5 முட்டைகள், மாவு, அரை கிலோ சர்க்கரை, சிறிது பேக்கிங் பவுடர்.

1990-களில் ஈராக் மீது அமெரிக்கா, ஐ.நா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. பொருளாதாரத் தடை போரின் இன்னொரு முகம் தான். மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் சக்தி கொண்ட ஆயுதம். அந்த ஆயுதத்தின் கூர் என்னவென்று லாமியா 5 முட்டைகள், மாவு, அரை கிலோ சர்க்கரை, சிறிது பேக்கிங் பவுடருக்காக எதிர்கொள்ளும் போராட்டம் நம் முகத்தில் அறைந்து புரியவைக்கும்.

லாமியாவும், பிபியும் (பாட்டி), ஹிந்தியும் நகரத்துக்குப் புறப்படுவார்கள். படம் தொடங்கும்போது ஒரு தண்ணீர் லாரியை வைத்துக் கொண்டு அதிபர் பிறந்தநாள் பரிசு எல்லோருக்கும் ஒரு கேன் சுத்தமான தண்ணீர் என்று ரேஷன் அலந்து கொண்டிருப்பார்கள் அரசு விசுவாசிகள். அப்படியே நகர்ந்தால் கொள்ளை விலைக்கு கொஞ்சம்தக்காளி வாங்குவார் லாமியாவின் பாட்டி. அதுவும் எல்லாம் அடி வாங்கியவையாக இருக்கும்.

அப்படியென்றால் புரிந்து கொள்ள வேண்டும் கேக் செய்வதற்கான பொருட்கள் லாமியா ஊரில் எத்தனை லக்சுரி என்று.

அவர்களை ஈராக் சிட்டியில் இறக்கிவிட முன்வருவார் மெயில் மேன் ஒருவர். அவருக்கும் லாமியாவுக்குமான உரையாடல் சுவாரஸ்யம்.

“நான் மக்களை சிரிக்க வைப்பேன்; அழவும் வைப்பேன். நான் அவர்கள் இதயத்தை நொறுக்குவேன்; அதை நானே சரியும் செய்வேன். என்னை சிலர் சாத்தான் என்பார்கள், சிலர் தேவதை என்பார்கள். சிலர் என்னைக் கொண்டாடுவார்கள். சிலர் என்னை சுட்டுத்தள்ள விரும்புவார்கள். நான் அவர்களுக்கு என்ன கொடுக்கிறேன் என்பதைப் பொருத்தே எல்லாம் அமையும். அப்படியென்றால் நான் யார்?” என்று அவர் கேட்க லாமியா அத்தனை அப்பாவியாக கடவுள் என்பாள்.

முன்பு ஊரில் படகில் வீட்டுப் பாடம் பற்றி லாமியாவும் ஸாயீதும் பேசும்போது, “எல்லாம் இறைவன் பார்த்துக் கொள்வார்” என்பாள் லாமியா. அதற்கு ஸாயீது, “எனக்கு அப்படிச் சொல்வது வெறுப்பை ஏற்படுத்துகிறது. யாரேனும் அப்படிச் சொன்னால் அந்த விஷயத்தில் சிக்கல் இருக்கிறது என்றே நான் புரிந்து கொள்கிறேன்” என்பான்.

ஸாயீது சொன்னதுபோல் லாமியாவுக்கு அடுத்த நாள் கேக் செய்ய வேண்டும் என்ற கட்டளை வந்திருக்கும்.

குழந்தைகளுக்கு மதமும் விளங்குவதில்லை; அதன் பேரில் மனிதர்கள் செய்யும் போரும் புரிவதில்லை. பெரியவர்கள் கொண்டாடும் சாதி, மத, கலாச்சாரம் எல்லாமே குழந்தைகளின் மனம் என்ற திறந்த புத்தகத்தில் புகுத்துப்பட்ட கிறுக்கல் தவிர வேறொன்றும் இல்லை.

நகரத்துக்கு வந்த பின்னர் தான் லாமியாவை பிபி தத்துக் கொடுக்கப் போகிறாள் என்பது லாமியாவுக்கும் நமக்கும் தெரியும். கேக் செய்ய வழியில்லை. செய்யாவிட்டால் தண்டனை உறுதி. வறுமையில், ராணுவக் கட்டுப்பாட்டில் உயிரிழப்பதைவிட தத்துப் பிள்ளையாக பிழைத்துக் கிடக்கட்டுமே என்று பிபி முடிவு செய்வாள்.

போர் எப்போதுமே பெண்கள், பெண் குழந்தைகள் மீது பல்முனை தாக்குதல் நிகழ்த்தக்கூடியவை. உயிர், உடல், உறவுகள் என இழப்பதற்கு நிறைய அணிவகுத்திருக்கும் அவர்களுக்கு!

வசதி வாய்ப்புக்காக, சவுகரியங்களுக்காக துணையை மாற்றிக் கொள்ளும் வளர்ந்த மனிதர்கள் போல் அல்ல குழந்தைகள். அவர்களுக்கு அன்பிருக்கும் இடமே வேர். அதை இழக்கத் துணிய மாட்டார்கள்.

கேக் செய்துவிட்டு பிபியுடன் இருக்க வேண்டும் என்ற முடிவில் ஓட்டமெடுப்பாள் லாமியா அவளுக்குத் துணை அந்த சேவல் மட்டும்தான்.

ஒரு நாள் வெளியுலகம் அவளுக்கு உலகின் அத்தனை அழுக்குகளையும் காட்டிவிடும். அரைகிலோ சர்க்கரைக்காக மளிகைக்கடைக் காரன் செய்யும் அயோக்கியத்தனம், காணாமல் போன ஹிந்தியை கொடுத்துவிட்டு கசாப்புக் கடைக்காரன் செய்யத் துணியும் பாதகம், கடிகாரக் கடைக்காரன் செய்யும் மோசடி என்று லாமியா திக்கித் திணறும் போது மனம் கனத்துப் போகும்.

ஒரு காட்சியில், விரக்தியில் நடக்கும் லாமியா தலைக்கு மேல் செல்லும் போர் விமானத்தை ஏதோ காக்காவை பார்த்துவிட்டு கண் இறக்குவது போல் சகஜமாக இருப்பாள்.

வானத்து நிலவையும், நட்சத்திரங்களையும் எண்ணிக் கொண்டு, வானவில்லை ரசித்து, கொளுத்தும் சூரியனுக்கு சவால்விட்டு விளையாட வேண்டிய எத்தனை எத்தனை பிஞ்சுகள் இந்தத் தருணம் தலைக்கு மேல் பாயும் போர் விமானத்தை இப்படி சகஜமாகப் பார்க்கப் பழகியிருப்பார்கள் என்று எண்ணும்போது பதற்றம் கவ்விக் கொள்கிறது.

அதுபோல் அழுத்தம் மிகும்போதெல்லாம் லாமியாவும் ஸாயீதும் யார் அதிக நேரம் கண்களை சிமிட்டாமல் இருக்கிறார்கள் என்றொரு போட்டிவைத்து குதூகலிப்பார்கள்.

லாமியா, ஸாயீது போல் போர்ச் சூழலில் வாழும் குழந்தைகள் எத்தனை முறை கண் சிமிட்டினாலும் உயிருடன் இருக்கிறோம் என்பதைத் தாண்டி வேறேதும் மாறப் போவதில்லை.

எல்லா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் லாமியாவும், ஸாயீதும் ஒரு நாள் முழுவதும் சுற்றித் திருந்து 5 முட்டைகள், கொஞ்சம் மாவு, அரை கிலோ சர்க்கரை தேற்றிவிடுவார்கள். ஆனால் பிபி-யின் உயிர் பிரிந்திருக்கும்.

பாட்டி உடல் நல்லடக்கத்துக்கு உதவுவார் மெயில் மேன். அதன் பின்னர் ஸாயீது தாய் அரவணைப்பில் இரவுப் பொழுது அமையும். அங்கே அவளுக்காக கேக் செய்வாள் ஸாயீத்தின் தாய்.

ஒரு குழந்தைக்கு பிரிவுத் துயரை எப்படி கடப்பதென்று தெரியாது. போர்ச் சூழலில் வாழும் குழந்தைகள் எதற்கும் பிடிவாதம் பிடிப்பதில்லை. அவர்களுக்கு நாளை என்ற நம்பிக்கையும் இல்லை, நேற்று குறித்த வருத்தமும் இல்லை. லாமியா தேவதையானது இதனால் தான்.

லாமியா பாட்டியின் மறைவுக்கு கதறி அழவில்லை. உயிருடன் இருக்கும்போதே அவளை பிபி தயார்படுத்தியிருந்தாள். “நமக்குப் பிடித்தமானவர்கள் இல்லாமல்போகும் போது அவர்கள் முகத்தை நீரில் பார்க்கலாம்” என்று பிபி லாமியாவிடம் சொல்லி வைத்திருப்பாள். எத்தனை மகத்தான உளவியல் ஆலோசனை!

போர்ச் சூழலில் பெண்களுக்கு குழந்தைகளை, வாரிசுகளை, உற்றார் உறவினரை மரணத்துக்கு, பிரிவுக்கு தயார்படுத்தும் பொறுப்பும் சேர்ந்து கொள்ளும்போல!

பள்ளியில் ஆசிரியர், ஸாயீத் கொண்டுவந்த பழங்கள், லாமியா கொண்டுவந்த கேக் என்று வரிசையாக சுவைப்பார். அப்போது ஏர் சைரன் ஒலிக்கும். அதை மூளைக்குள் கடத்தும் முன்னரே குண்டு விழுந்து பள்ளி வகுப்பறை நடுநடுங்கிப் போகும். ஸாயீத்தும், லாமியாவும் மேஜைக்கு அடியில் அடைக்கலம் புகுவர்.

அங்கே சாயீத்தும் லாமியாவும் கண் சிமிட்டாமல் ஒருவரை ஒருவர் பார்ப்பார்கள். லாமியாவின் கண்கள் குளமாகும். அவளால் சிமிட்டுவதைத் தவிர்க்க முடியாமல் போகும். ஸாயீது வழக்கம்போல் கண் சிமிட்டாமல் இருப்பான். இறுதியில் லாமியாவின் கண் சிமிட்டல்களில் இருள் திரை நிரப்பும்.

நாம் இதை வாசித்துக் கொண்டிருக்கும்போதும் லாமியாக்கள் கண் சிமிட்டல்களில்... பூமியில் வாழும் உரிமை பறிபோயிருக்கலாம்.

போர்கள் யாருக்காக எதற்காக நடத்தப்படுகின்றன?! எல்லைகளை வகுத்து, அதிகாரத்தை கையில் வைத்து தலைவன் என்று மார்தட்டிக் கொண்டு எந்தப் போர்வையில் நிகழ்த்தினாலும் போர் வன்முறையே!

லாமியா என்றால் பிரகாசம் என்று அர்த்தமாம். குழந்தைகள் ஒளிர வேண்டியவர்கள்.

| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

‘திரை தேவதைகள்’ முதல் 25 அத்தியாயங்கள் இப்போது புத்தகமாக வெளியாகி இருக்கிறது. நூலை வாங்க விரும்புவோருக்கான இணைப்பு > திரை தேவதைகள்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT