தற்போது ஓடிடி தளங்களில் கிளாசிக் என்ற அந்தஸ்தை பெற்ற பல்வேறு தொடர்கள் கரோனா காலக்கட்டத்துக்கு பின்னர் வெளியானவையாக இருக்கக் கூடும். ஆனால் கரோனாவுக்கு முன்பே உலகம் முழுவதும் வெப் தொடர் ரசிகர்களைக் கட்டிப்போட்டது 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'.
4 சீசன்கள் பெற்ற வரவேற்பை அடுத்து தற்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, ஐந்தாவது சீசனின் முதல் தொகுதி இப்போது வெளியாகியுள்ளது. டஃபர் சகோதரர்கள் உருவாக்கிய இந்தப் பயணம், ஹாக்கின்ஸ் நகரத்தின் இறுதிப் போருக்கான பரபரப்பை இந்த சீசனில் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
முந்தைய சீசன்களை விட மிகுந்த டார்க் தன்மைக்கும் உணர்வுபூர்வமாக காட்சிகளுக்கும் படக்குழுவினர் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ஹாக்கின்ஸில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை ஏற்கெனவே நான்காவது சீசனிலேயே சொல்லப்பட்டு விட்டாலும், இதில் அதையும் தாண்டி பல்வேறு முடிச்சுகள் அவிழத் தொடங்கி இருக்கின்றன.
இந்த சீஸனின் மிகப் பெரிய திருப்பம் என்றால் கதைக்களம் முழுக்க முழுக்க வில் பையர்ஸுக்கு (நோவா ஷ்னாப்) முழுமையாக மாற்றியிருப்பதுதான். இதுவரை எலவன் (மில்லி பாபி பிரவுன்), மைக் (ஃபின் உவ்ஃப்ஹார்ட்) உள்ளிட்டோரைமையப்படுத்திய கதை, இப்போது வில்லின் மூலப் பிரச்னையை நோக்கித் திரும்பி உள்ளது.
1983-இல் வில் காணாமல் போன ஆரம்பக் காட்சிகளை, புதிய கோணத்தில் மீண்டும் காட்டுகிறார்கள். அதன் பிறகு விரியத் தொடங்கும் காட்சிகள் எங்கும் நிற்காமல் பந்தயக் குதிரை போல பறக்கிறது.
இந்த சீசனில் மைக்கின் குடும்பம் முழுவதும் பிரச்னைகளுக்குள் சிக்குவதாக காட்டி இருப்பது ரசிக்கும்படி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்ற ஸ்டீவ் - டஸ்டின் கூட்டணிக்கான காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
வெறும் ஹாரர் ஃபேண்டசி தொடர் என்பதைத் தாண்டி, கதாபாத்திரங்களின் உணர்வுகளை பேசும் ஒரு தொடராகவே ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இருந்து வந்திருக்கிறது. அதை இந்த சீசனிலும் டஃபர் சகோதரர்கள் தக்கவைத்துள்ளனர்.
எபிசோட்களின் நீளம் ஒரு குறையாக தெரிந்தாலும், திரைக்கதையின் பரபரப்பு அதனை மறக்கச் செய்கிறது. இந்த சீசனின் முதல் நான்கு எபிசோட்களை மட்டுமே வெளியிட்டு ரசிகர்களை காக்க வைத்திருக்க வேண்டாம்.
கிட்டத்தட்ட இறுதி எபிசோட் ஒரு ரோலர்கோஸ்டரை போல கூஸ்பம்ப்ஸ் மாஸ் காட்சிகளுடன் முடிந்து, அடுத்த தொகுதிக்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டி இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் காணக் கிடைக்கிறது.