ஓடிடி விமர்சனம்

Spider-Noir: கருப்பு வெள்ளையில் ஒரு ‘க்ளாசிக்’ அனுபவம் | ஓடிடி திரை அலசல்

டெக்ஸ்டர்

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இன்டு தி ஸ்பைடர் - வெர்ஸ்' என்ற அனிமேஷன் படத்தில் முதன்முதலில் அறிமுகமான ‘ஸ்பைடர்மேன் நுவார்’ கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள தொடர் ‘Spider-Noir’. அந்த அனிமேஷன் படத்தில் இப்பாத்திரத்துக்கு் பின்னணி குரல் கொடுத்த நிகோலஸ் கேஜ் இதில் நாயகனாக நடித்துள்ளார்.

1930-களின் நியூயார்க் நகரில் வாழும் நடுத்தர வயது பிரைவேட் டிடெக்டிவ் பென் ரெய்லி (நிகோலஸ் கேஜ்) 'ஸ்பைடர்' என்ற சூப்பர் ஹீரோவாக குற்றம் புரிபவர்களுக்கு எதிராகப் போராடுகிறார். ஆனால் தனது காதலியின் மரணத்துக்குப் பிறகு, தனது சூப்பர் ஹீரோ பணியிலிருந்து ஓய்வு பெற்று தற்போது பிரைவேட் டிடெக்டிவ் ஆக மட்டும் செயல்பட்டு வருகிறார்.

ஆனால், நியூயார்க்கில் திடீரென அமானுஷ்ய சக்திகள் கொண்ட மனிதர்கள் உருவாகத் தொடங்குவதாலும், நகரத்தை ஆட்டிப் படைக்கும் தாதா ஒருவர் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்வதாலும், பென் ரெய்லி மீண்டும் ’ஸ்பைடர்’ அவதாரம் எடுக்கும் நிர்பந்ததுக்கு ஆளாகிறார்.

நுவார் என்பது பிரெஞ்சு மொழியில் 'கருப்பு' என்று பொருள்படும். 1940-களில் அமெரிக்காவில் உருவான ஒரு தனித்துவமான த்ரில்லர் சினிமா பாணி இது. 1940-களில் புகழ்பெற்ற ஒருவகை த்ரில்லர் ஜானர் ஆகும். இதன் கதைகள் பெரும்பாலும் குற்றங்கள் நிறைந்த ஒரு பெருநகரம், வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விரக்தியில் இருக்கும் ஒரு நாயகன் என நகரும். பகல் வெளிச்சத்தை விட இரவு நேர காட்சிகளே இதில் அதிகமாக இடம்பெறும்.

இப்படியான ’நுவார்’ த்ரில்லர் பாணியையும் சூப்பர் ஹீரோ உலகையும் இணைக்க இயக்குநர் ஓரென் உசீல் எடுத்துக்கொண்ட இந்த வினோதமான முயற்சியை பார்க்கும்போது, இது ஒரு மார்வெல் சூப்பர் ஹீரோ தொடர் என்பதையே பல இடங்களில் மறந்துவிடுகிறோம். இந்த தொடரின் ஒவ்வொரு காட்சியும் ஹாலிவுட்டின் பழங்கால த்ரில்லர் படங்களை கண்முன் நிறுத்துகிறது.

இதில் பாராட்டத்தக்க விஷயம் என்னவென்றால், எங்குமே அது செயற்கையாகவோ அல்லது திணிக்கப்பட்டது போலவோ தெரியவில்லை. ஒளிப்பதிவு, பின்னணி இசை, வசனங்கள் மற்றும் கலை இயக்கம் என அனைத்தும் ஒன்றிணைந்து, நம்மை அப்படியே எண்பது ஆண்டுகள் பின்னோக்கி ஒரு சுவாரஸ்யமான பயணத்துக்கு அழைத்துச் செல்கின்றன. இரண்டு முற்றிலும் மாறுபட்ட ஜானர்களை எவ்வளவு நேர்த்தியாக இணைத்திருக்கிறார்கள் என்பதே பெரும் வியப்பு.

இத்தொடர் கருப்பு-வெள்ளை மற்றும் கலர் என இரண்டு பதிப்புகளாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. எனினும் தொடரின் காலக்கட்டத்துக்கும் அதன் தீவிரத்தன்மைக்கும் கருப்பு - வெள்ளை பதிப்பே மிகச் சரியாக பொருந்துகிறது. தொடர் தொடங்கிய முதல் ஃப்ரேமிலிருந்தே, நம்மை அந்த இருண்ட உலகிற்குள் இழுத்துச் செல்கிறது. 

பின்னணியில் ஒலிக்கும் ஜாஸ் இசை அதற்கு மேலும் மெருகூட்டுகிறது. கூர்மையான வசனங்களும், அழுத்தமான நடிப்பும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கின்றன. ஆனால், நம்மை இறுதிவரை கட்டிப்போடுவது அதன் திரைக்கதைதான். நுவார் த்ரில்லர் படங்களுக்கே உரிய பாணியை கிறிஸ்டோபர் சென், மேகன் லியாவோ உள்ளிட்ட எழுத்தாளர் குழு மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளதால், ஒவ்வொரு எபிசோடிலும் அடுத்தடுத்த காட்சிகளை எளிதில் யூகிக்க முடிவதில்லை.

சூப்பர் ஹீரோ தொடர்கள், படங்கள் அனைத்தும் பிரம்மாண்டமான சிஜிஐ மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளை மட்டுமே நம்பியிருக்கும் வேளையில், இத்தொடர் அதற்கு முற்றிலும் மாறாக, விஎஃப்எக்ஸ் காட்சிகளைக் குறைத்து, மிக நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதையை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளது.

ஒளிப்பதிவாளர் டாரன் டியர்னனின் அசாத்தியமான லைட்டிங், க்ளோஸ்-அப் ஷாட்டுகள் இத்தொடரை முற்றிலும் ஒரு தனித்துவமான உயரத்தில் நிறுத்துகின்றன.

கிறிஸ் போவர்ஸ் மற்றும் மைக்கேல் டீன் பார்சன்ஸ் ஆகியோரின் பின்னணி இசை, பழங்கால தொனியைத் துளியும் சலிப்பற்ற முறையில் புதுமையாக கடத்துகிறது. நடிகர்களும் 1930, 40-களின் திரைப்படங்களில் இருந்த நாடகத்தனமான வசன உச்சரிப்பு பாணியை கச்சிதமாக உள்வாங்கி நடித்துள்ளனர்.

சோனி நிறுவனம் இதற்கு முன்பு எடுத்த லைவ்-ஆக்‌ஷன் ஸ்பைடர்-மேன் ஸ்பின்-ஆஃப் படங்களான ‘மார்பியஸ்’, ‘மேடம் வெப்’ போன்றவை ரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கின. ஆனால் இந்த ‘ஸபைடர்-நுவார்’ தொடரின் மூலம் ஒரு ஸ்பின்-ஆஃப் தொடரை எப்படி நேர்த்தியாக எடுக்க வேண்டும் என்கிற வித்தை சாத்தியமாகியிருக்கிறது.

பழைய ஹாலிவுட் கருப்பு வெள்ளை த்ரில்லர் படங்களையும், சூப்பர் ஹீரோ ஜானரையும் நேசிப்பவர்களுக்கு, 'ஸ்பைடர்-நுவார்' ஒரு மிகச் சிறந்த திரை அனுபவம். அமேசான் ப்ரைம் தளத்தில் தமிழிலும் காணக்கிடைக்கிறது.

SCROLL FOR NEXT