வாசித்த கட்டுரைகள், சிறுகதைகள், நாவல், பேட்டிகள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து தனக்கான அசல் கதையை எழுதக்கூடிய ஒரு படைப்பாளி இயக்குநர் சசி. ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால், தற்போது அவர் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் மூலக் கதை, அவருடையது அல்ல! கடந்த 2015-இல் வெளியான ‘எவ்ரிடே ஐ லவ் யூ’ என்ற பிலிப்பைன்ஸ் நாட்டுத் திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
அந்தப் படத்தின் இந்தியத் தழுவல்தான் இந்தப் படம். முறைப்படி கதையை உரிமையை வாங்கிப் படமாக்கியிருக்கிறார்கள். இதைப் படத்தின் டைட்டிலிலேயே போட்டு விடுகிறார்கள். தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘ராமாயணா’, ‘சீன்’, ‘மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய படங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று பெட் - அப் ஆவதை விட்டுவிட்டு ஜீ5 ஓடிடியின் ஒரிஜினல் உள்ளடக்கங்களின் வரிசையில் தீபாவளி வெளியீடாக வந்திருக்கும் சசியின் ‘நூறு கோடி வானவில்’ படத்தைப் பார்க்கலாமா என்று அலசலாம்.
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படக் காலத்திலிருந்து நாம் பார்த்து வரும் முக்கோணக் காதல் கதை. ஆனால், நான்காவதாக, இப்படத்தின் கதைக் களமான கோவாவையும் நம்மைக் காதலிக்கும்படி செய்துவிடுகிறார்கள் இயக்குநர் சசியும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரும். படத்தை ஃபிரெஷ் ஆக உணர வைப்பதில் மும்பை - கோவா காட்சிகளுக்குப் பெரும்பங்கிருக்கிறது.
மும்பையில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள தனியார் தொலைக்காட்சியில் வினோத் (ஹரிஷ் கல்யாண்) ஒரு துடிப்பான இளம் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர். நிர்வாகம் அவரை கோவா அலுவலகத்துக்குப் பணிமாற்றல் செய்துவிடுகிறது. தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வினோத், வேறு வழியில்லாமல் கோவா வருகிறான். அங்கே சுற்றுலா வழிகாட்டியாகவும் டிவி தொகுப்பாளராகவும் இருக்கும் பென்னியின் (சித்தி இத்னானி) இயல்பையும் அவளது பின்னாலுள்ள சோகத்தையும் அறிந்து வினோத் உருகிப்போகிறான்.
பென்னியின் காதலன் ரிச்சி (ரினில்) விபத்தொன்றில் சிக்கி கோமாவில் இருக்க, அவனை குணமாக்குவது ஒன்றையே லட்சியமாகக் கொண்டு அவள் ஓடியாடி உழைத்துக் கொண்டிருக்கிறாள்.
பென்னி - ரிச்சியின் உண்மைக் கதையை ஒரு ‘ஸ்கூப்’ நிகழ்ச்சியாக உருவாக்க பென்னியிடம் பேச, காதலனுக்கான தொடர் சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுவதால் அவளும் ஒப்புக்கொண்டு அவனுடன் நிகழ்ச்சித் தயாரிப்பில் பங்கேற்கிறாள். இந்தப் பயணத்தில் ரிச்சிக்கு நினைவு திரும்பும்போது யார் மனதில் யார் என்கிற கேள்விக்குப் பதில் சொல்கிறது படம்.
ரிச்சி நிறைவேற்றியிருக்க வேண்டிய பென்னியின் கனவுகள் வினோத் வழியே ஒவ்வொன்றாக நிறைவேறிக்கொண்டே வரும்போது பார்வையாளர்களுக்கு டென்சன் ஏற்றும் முயற்சியில் சசி தன்னுடைய திரைக்கதை ஜாலத்தைக் காட்டியிருக்கிறார்.
மாண்டவன் மீண்டு வரமாட்டான் என மனம் தாவும்போது உருவாகும் சிக்கல், பல படங்களில் பல கதைகளில் பார்த்ததுதான் என்றாலும் இதில், காதலில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறி நிற்பவர்களுக்குத் தனது பாணியில் தீர்வைக் கொடுத்திருக்கிறார் சசி. அவர் தரும் தீர்வு ஏற்றுக்கொள்ளும் படியாகவும் இருக்கிறது.
முக்கோணக் காதல் கதையைக் கையாள்வதில் கதாபாத்திர எழுத்திலும் எழுதியதை முதன்மைக் கதாபாத்திரம் ஏற்ற நடிகர்களிடம் வேலை வாங்கிய விதத்திலும் தன் கவித்துவமான வசனங்களாலும் எப்போதும்போல் ஈர்க்கிறார். என்றாலும் முதல் பாதிப் படத்தை இவ்வளவு மெதுவாக நகர்த்தியிருக்க வேண்டுமா என்ற எண்ணத்தை உருவாக்கிவிடுகிறார். இரண்டாம் பாதியில் வேகமாக நகர்ந்தாலும் அதில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கிய திருப்பங்கள் எளிதாக யூகிக்கும் விதமாக அமைந்துவிட்டன.
2019-இல் எடுத்த படம் என்பதால் இதில் துறுதுறுவென்றிருக்கும் ஹரீஷ் கல்யாணைப் பார்க்க முடிகிறது. ‘ட்ரோன்ஸ்’ படத்தில் டிஸ்னி ஏஞ்சல் போன்ற ஃபாண்டஸி கதாபாத்திரத்தில் வந்து அசத்திய சித்தி இதானி இவர்தானா என ஆச்சர்யப்பட வைத்துவிடுகிறார். காதலின் திரிசங்கு முக்கோணத்தில் மாட்டித் தத்தளிக்கும் காட்சிகளில் அடித்து ஆடியிருக்கிறார் இதானி.
நடிப்பில் ஹரிஷ் கல்யாண் - ரினில் இரண்டு பேரையுமே இதானி முந்திச் சென்றுவிடுகிறார். சித்தி இதானியின் அற்புதமான நடிப்பைப் போலவே நம் மனதுள் நுழைந்து விடுகின்றன சித்துகுமாரின் 3 பாடல்களும் காதலுக்காகவே கடைசிவரை இழையும் பின்னணி இசையும்.
துணைக் கதாபாத்திரங்களில் வரும் கோவை சரளா, தம்பி ராமையா, விஜே பார்வதி, சின்னி ஜெயந்த் ஆகியோரில் சரளாவும் சின்னி ஜெயந்த்தையும் ஒரு கால இடைவெளிக்குப் பிறகு பார்க்கிறபோது காதலுக்குக் கைகொடுப்பவர்களாக அசரடிக்கிறார்கள்.
ஓர் எளிமையான முக்கோணக் காதல் கதையைத் தனக்கே உரிய ஃபீல் குட் ட்ரீட்மெண்ட் மூலம், கோவா என்கிற கதைக் களத்தையும் சித்துவின் இசையையும் துணைக்கு வைத்துக்கொண்டு அழகான காதல் வானவில் வரைந்து காட்டியிருக்கிறார் சசி.