

“எங்க அப்பத்தா எனக்கு கத்து குடுத்துருக்கு... அஞ்சு சாமி கும்பிடச் சொல்லி... நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்புன்னு”. இது தன் அப்பத்தா இறப்பில் விருமாண்டி சொல்லும் வசனம். ஐம்பூதங்களை தெய்வங்களாக ஆன்மிக வழியில் ஆராதிக்கும் வழக்கம் கொண்ட கிழக்கு ஒரு பக்கம். இயற்கையின் எந்த நிலப்பரப்பையும் அடைந்து ஆதிக்கம் செலுத்திட மட்டுமே எண்ணும் மேற்கு இன்னொரு பக்கம். இவ்விரண்டு துருவங்களும் இணையம் புள்ளியே மலையேற்றங்களின் உச்சம் எனக் கருதப்படும் எவரெஸ்ட் உச்சியடைதல்.
வரலாற்றில், உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உச்சியை அடைவது மிகப் பெரிய சவாலாகவே இருந்து வந்தது. 1921 முதல் பத்துக்கும் மேற்பட்ட, உலகம் முழுவதும் உள்ள மலையேறும் குழுக்கள் இந்த சவாலை முயன்று தோற்றனர். பிறகு, 1953-ல் எவரெஸ்ட் உச்சியினை முதல் முறை அடைந்து வரலாற்று வெற்றி பெற்றவர்கள் இருவர்.
நியூஸிலந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் நார்கே. பெயர் வரிசையில் கூட, நம் பாடப் புத்தகங்கள் உட்பட வரலாறு நெடுகிலும் இதுவரை இரண்டாவது இடத்திலே குறிப்பிடப்பட்ட டென்சிங்-கின் கதையை திரைப்படங்களில் காட்டப்பட்டதில்லை. அந்த டென்சிங் நார்கே என்னும் உன்னத மலையேறியின் வரலாற்றுக்கு முதல் முறையாக திரையில் செய்யப்பட்ட மரியாதை தான் ‘டென்சிங்’ திரைப்படம். 2026 வெளியீடாக இப்படம் ஆப்பிள் டிவி ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
மலைகளில் யாக் வகை எருதுகள் மேய்க்கும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் டென்சிங். சிறுவயது முதலே மலையேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சோமுலிங்க்மா (எவரெஸ்ட் சிகரத்தின் நேபாள பெயர்) மலையேற்றம் அவருக்கு ஒரு பெருங்கனவு. வறுமையம் ஒடுக்குமுறையும் துரத்த வெவ்வேறு இடங்களில் அடைக்கலம் புகுந்து தாய், தந்தையை பிரிந்து வளர்கிறார்.
பின்னர் வெவ்வேறு வேலைகள் செய்து மலையேற்ற குழுவினருக்கு உதவியாளராக வாழ்கிறார். 1952 சுவிஸ் மலையேற்றக் குழுவின் தோல்விக்குப் பிறகு, 1953-ல் மலையேற வரும் பிரிட்டிஷ் குழுவோடு பல தடைகள் தாண்டி ஒரு பணியாளராக இணைகிறார். அக்குழுவின் முயற்சிகள், டென்சிங் எதிர்கொள்ளும் பெரிய சவால்கள், இயற்கையின் இடையூறுகளுக்கு மத்தியில் அவர்கள் மலையேற்றம் என்ன ஆனது என்பதை டென்சிங்கின் தன் வரலாற்றுப் பார்வையில் உணர்வுபூர்வமாக சொல்லப்படுவதுதான் கதை.
எல்லா சாகச வீரர்களிடமும் கெட்டப்படும் ஒரே கேள்வி - “ஏன் இந்த சாகச முயற்சி?” என்பதே. பல்வேறு விடைகள் இருந்தாலும் விட்டு விடுதலையாதலும், தன் மகிழ்ச்சியும் என்பது ஒரு முக்கிய பதில். அப்படியொரு தலையாய சாகசமான எவரெஸ்ட் சிகரத்தை பற்றி ஆவணப் படங்கள், திரைப்படங்கள் என 25-க்கும் மேற்பட்ட படைப்புகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை சாகசத்தை மட்டுமே பிரதானப்படுத்துபவை. மாறாக, இந்தத் திரைப்படம் முதல் முறை மேற்குலக மலையேற்ற சாகசத்தையும் கிழக்கின் ஆன்மிகத்தையும் அடக்குமுறைக்கு ஆளாகும் ஒரு மனந்தளராத தனி மனிதனின் பார்வையையும் இணைத்து சொல்லியிருப்பது முதல் சிறப்பு.
தெரிந்த வரலாறு என்ற போதிலும் டென்சிங் என்னும் மாமனிதனின் கனவை அவனின் வெவ்வேறு வயதுகளின் பார்வை வாயிலாக சொல்லியிருப்பது இப்படத்தின் தனித்தன்மை. “தென்றலை தீண்டியதில்லை... நான் தீயைத் தாண்டியிருக்கிறேன்” என்னும் பராசக்தி குணசேகரன் வார்த்தைகள் எழுதப் படிக்கத் தெரியாமால் வளர்ந்த டென்சிங்குக்கும் பொருந்துகின்றன.
உண்மையில் அவர் ஷெர்பா இனமல்ல. வர்க்க அடுக்கில் இன்னும் கீழேயிருந்த போட்யா இனக்குழு அவருடையது. ஷெர்பாக்களின் குழு வெறுப்பு மற்றும் பிரிட்டிஷாரின் இனப் பாகுபாடு எல்லாம் கடந்து பெரும் போராட்டத்துக்குப் பிறகே ஷெர்பா தலைமை நிலையை அடையும் பின்னணி தகவல்கள் போகிற போக்கில் சொல்லப்பட்டிருப்பது சிறப்பு.
மகாபாரத கர்ணன் போலவே எதுவும் கேட்ட சமயத்தில் கேட்ட விதத்தில் கிடைக்காத போதும், போராடும் ஒற்றைக் குணமே அவரை உச்சிக்கு அழைத்து செல்வதை பார்வையாளர்களுக்கு உணர வைத்திருப்பது இன்னொரு வெற்றி.
கதை 1953-ல் நடந்தாலும் டென்சிங்கின் வாழ்க்கையில் வெவ்வேறு காலக் கட்டங்களின் நிகழ்வை முன்னும் பின்னுமாக ஃப்ளாஷ்பேக் காட்சிகளாக சொல்லிக் கொண்டேயிருக்கிறது. அதுவே அவர் ஏன் மலையுச்சியை அடைய வேண்டும் எனும் குறிக்கோளை பார்வையாளர்களுக்கு கடத்திவிடுகிறது. இப்படி நிறைவான கதை சொல்லல் உத்திகள் படம் நெடுகிலும் கொண்டு ஒவ்வொரு நிலையாக இக்குழுவின் மலையேற்றம் எப்படி அமைகிறது என்பதை விரிவாகக் காட்டுகிறது திரைப்படம்
திரைப்படத்தின் முதல் சட்டகத்தில் காட்டப்படும் வெகு பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் சிகரம், பனி போர்த்திய அதன் கம்பீரத்துடன் நாமும் அவர்களுடன் இணைந்து பயணிக்கத் துவங்குகிறோம். பெரும் பனி மலையில் வரிசையாக எறும்புகள் போல நடந்து செல்லும் அற்புதமான காட்சிகள் கண்களில் தங்கிவிடுகின்றன. எப்படி இதை எல்லாம் படமாக்கினார்கள் என வியந்து பாராட்டும்படியாக இரண்டு மணி நேரம் நாமும் இந்த உலகை மறந்து எவரெஸ்ட் மலையில் சஞ்சரிக்கிறோம்.
உறைபனி நம் உடல் நரம்புக்குள் ஊடுருவி இது ஒரு திரைப்படம் என்பதை மறந்து, அந்த மலையேற்றக் குழுவில் நாமும் கரைந்து விடுகிறோம். மலைக்க வைக்கும் மலைத் தொடர்கள், பயமுறுத்தும் பனிச்சரிவு, சட்டென்று மாறும் வானிலை, தெரியாத நிலப்பரப்பு என படம் நெடுக வரும் காட்சிகள் பிரமாதம். இயற்கையையும் ஐம்பூதங்களையும் நம்மால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது என்பதை இந்தத் திரைப்படம் மற்றொரு முறை ஆழமாக நிறுவிவிடுகிறது.
டென்சிங்காக நேபாள நடிகர் ஜெண்டன் ஃபுன்ட்ஸ்டாக், ஹில்லாரியாக வரும் டாம் ஹிடில்ஸ்டன், குழுத் தலைவராக வரும் வில்லெம் டஃபே ஆகியோரின் நடிப்பு அபாரம்.
தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் எல்லா விதத்திலும் சிகரம் போலவே உயரத்தில் நிற்கிறது. நிலப்பரப்பை காட்சிப்படுத்திய ஸ்டீபன் டசியோ, எழுதிய லூக் டேவிஸ் உணர்வுகளை மீட்டும் ரெபேக்கா கரிஜோர்டின் மென்மையான பின்னணி இசை என அனைத்துமே கச்சிதம்.
மலையேற்றம் சார்ந்து பல ஆவணப் படங்களையம் படங்களையும் எடுத்த ஆஸ்திரேலிய பெண் இயக்குநர் ஜெனிஃபர் பீடம் பல உயரிய திரை விருதுகளுக்கு மிக்க தகுதியானவர்.
பல காட்சிகளில் பல தளங்களிலிருந்து சிறுவனாக, இளைஞனாக மத்திய வயதினனாக டென்சிங் எவரெஸ்டை தன் வாழ்நாளெல்லாம் பார்க்கிறார். படத்தின் இறுதிக் காட்சியில் மலையுச்சியில் இருந்து மத்திய வயது டென்சிங் அடிவாரத்தில் இருந்து வான்நோக்கி வியந்து பார்க்கும் சிறுவன் டென்சிங்கை பார்ப்பதாக வரும் காட்சி அற்புதம்.
திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் இருக்கிறது. “கொடுமுடியைத் தொடுவது என்பது இலக்கு அல்ல... ஆனால் அதற்கான பயணம்தான் அதனை தொன்ம நிலைக்கு உயர்த்துகிறது”. அது உண்மையும் கூட.
எவரெஸ்ட் சிகரத்தை எட்டியது வெறும் வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல. எவரெஸ்ட் சிகரத்தை பற்றி படிப்பதும், அதில் ஈடுபட்டவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதும் பார்வையாளர்களை உன்னதம் ஆக்கிவிடுகிறது. அதே உன்னத அனுபவத்தை தரும் ‘டென்சிங்’ தவறவே விடக் கூடாத திரைப்படம்.