‘மிண்டியும் பரஞ்சும்’ (Mindiyum Paranjum) மலையாளப் படத்தின் ஆரம்பத்தில் அமெரிக்க எழுத்தாளர் ஓ.ஹென்றியின் இந்த பொன்மொழியைப் பகிர்ந்தும், எண்ட் கிரெடிட்ஸின்போது இப்படம் அவரின் ‘The Gift of the Magi' சிறுகதையின் தழுவல் என்று குறிப்பிட்டும் நன்றி கூறியுள்ளது படக்குழு.
உன்னி முகுந்தன், அபர்ணா பாலமுரளி நடிப்பில் 2025-ல் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘மிண்டியும் பரஞ்சும்’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. ஃபீல் - குட் படம் தான் உங்களின் ஃபேவரைட் ஜானர் என்றால் இந்தப் படத்தைத் தவறவிடாதீர்கள்.
வாழ்க்கையின் வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் ஆயிரமாயிரம் அர்த்தங்களைக் கற்பித்துள்ள உலகம், அதை நோக்கி ஓடும் எலிகளாக மனிதர்களை மாற்றி வைத்திருக்கிறது. அந்த ‘ரேட் ரேஸை’ (Rat Race), உதறிவிட்டு அன்பால் பிழைக்க முடிவு செய்கின்றனர் இருவர். ஒருவர் மீதான இன்னொருவரின் அன்பை லீனா மற்றும் சனல் மிண்டியும் பரஞ்சும் ( தமிழில் சொன்னால் குட்டிக் குட்டிப் பேச்சுகளாலும், உரையாடல்களாலும்) எப்படி நமக்கு காதல் தரிசனம் தருகிறார்கள் என்பதே படம். அன்பை தராசு வைத்து அளக்க முடியாது என்றாலும் லீனாவை நாம் தேவதையாகக் கொண்டாடலாம். ஏனென்றால்...
அதற்கு முன்னால், ‘The Gift of the Magi' கதையை சில வரிகளில் சொல்லியாக வேண்டும். மேகியும், ஜிம்மும் இணையர். தன் கணவர் ஜிம்முக்கு கிறித்துமஸ் பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக மேகி தனது நீண்ட தலைமுடியை வெட்டி அதை விற்று 20 டாலர் மதிப்பில் ஜிம்மின் தங்கக் கடிகாரத்துக்கு ஒரு ப்ளாட்டினம் அலங்கார செயின் வாங்குகிறாள். அதேவேளையில் தன் மனைவியின் நீண்ட கூந்தலுக்கு ஆமை ஓட்டில் விலையுயர்ந்த வேலைப்பாடுகளுடன் கூடிய சீப்புகளை, தனது தங்கக் கடிகாரத்தை விற்றுவிட்டு வாங்கிக் கொண்டு வருகிறான் ஜிம். இருவரும் பரிசைப் பகிர்ந்தபோது அது அப்போதைக்கு பயன்படுத்தக் கூடியது அல்ல என்று புரிகிறது. அங்கே கோபம் எழவில்லை, அங்கலாய்ப்பு இல்லை, வருத்தமில்லை மாறாக இருவரும் புரிதலோடு இரவு உணவை சமைத்துச் சாப்பிடச் செல்கின்றனர். எல்லோருடைய வாழ்க்கையைப் போல் மேகி - ஜிம் வாழ்க்கையும், புன்னகைகளாலும் - அழுகைகளாலும் ஆனதுதான் என்றாலும், அவர்கள் அழுது மூக்குறிஞ்சாமல், அன்பை பிரதானப்படுத்துகின்றனர். அன்பு சூழ் உலகு எத்தனை அழகானது!
அப்படியே நாம் ‘Mindiyum Paranjum’ சனல் - லீனா தம்பதிக்கு வருவோம். இவர்களின் அறிமுகம் ‘சீன் ஸ்கெட்சிங்’ மூலம் நடைபெறுகிறது. சனல் ஏட்டா (Sanal etta) என்று லீனா வாஞ்சையோடு நலம் விசாரிப்பதும், மெட்ரோ, டாக்சி பயணங்கள், அலுவலக மீட்டிங் இடையே லீனாவிடம் அவன் ஃபோனில் அன்பு பாராட்டுவதாகவும் காட்டப்படுகிறது. அவர்கள் பேச்சிலிருந்து சனல் வளைகுடா நாட்டில் பிழைக்கச் சென்றிருக்கிறான் என்பதும், லீனா சொந்த ஊரில் காதல் கணவனுக்காக காத்திருக்கிறாள் என்பதும் நமக்குத் தெரிந்துவிடுகிறது. சனல் துபாயிலிருந்து ஒரு பிசினஸ் விஷயமாக சொந்த ஊருக்கு வருவதாகச் சொல்கிறான். லீனா அவன் வருகையை எதிர்பார்த்திருக்கிறாள். அவன் புறப்பட்டு வந்து சேரும் நாள் தான் நிகழ்வு. ஆனால் அந்த நாளுக்குள் அத்தனை அத்தனை ஃப்ளாஷ்பேக்குகள் விரிந்து படத்தினை நிரப்புகிறது. நிறைவாக, அழகாக!
லீனாவும், சனலின் சகோதரி ஷைனியும் கல்லூரித் தோழிகள். விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். ஷைனியின் தோழியாக அறிமுகமாகும் லீனா மீது சனலுக்கு காதல் மலர்கிறது. காதலை எந்த சினிமாத்தனமும் இல்லாமல் எந்தப் பீடிகையும் இல்லாமல், “நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதுவும் இப்போது உடனே அல்ல; படிப்பு முடிந்து, உன் வீட்டில் மாப்பிள்ளை தேட ஆரம்பிக்கும்போது திருமணம் செய்து கொள்ளலாம்” என்கிறான்.
ஒரு பெண்ணிடம் தனது அன்பைச் சொல்லும்போது அதற்கு ஓர் உத்தரவாதம் கூறுவதும், அதை ஏற்கவேண்டியவரின் சூழலில் இருந்து எதிர்காலத்தை யோசித்தலும் ஆண்மையின் வசீகரம்.
என்றாலும்.. ஏன் லீனாவை சற்று அதிகமாகக் கொண்டாடலாம் என்றால் அவள் எந்தவொரு முடிவையும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்க மாட்டாள். கல்லூரிக் கால காதல் இயல்பே என்றாலும், காதலை கண்ணியமாகவே சனல் சொல்லியிருந்தாலும், அதைப் பற்றி யோசிக்க நேரம் எடுத்துக் கொள்வாள்.
காத்திருப்புக் காலத்தில் அவனது கண்ணியத்தின் ஆழத்தை அறிந்துகொள்ள பொறுத்திருப்பாள். அவன் தான் என்று முடிவு செய்தபின்னர் அந்தக் காதலை அவனைப் போலவே எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் புன்னகையுடன் சொல்லி, ‘என்னுடன் எப்போதும் இருப்பாயா?” என்று வாக்குறுதி பெற்றுக் கொள்வாள்.
புத்தியால் இது சரியா, தவறா என்று தெரிந்து கொண்டாலும்கூட, பெண் காதல் எப்போதும் அப்படியான வாய்வார்த்தைகளில் சுவாரஸ்யம் கொண்டு, மகிழ்ச்சியின் உச்சம் தொடுகிறது. சனலும் பல்வேறு தருணங்களில் ‘நான் இருக்கிறேன்’ என்பதை வார்த்தைகளாலும் சொல்கிறான்.
லீனா - சனல் பதிவுத் திருமணம் பேசப்பட வேண்டியது. தன் வாழ்க்கை மீதான சுதந்திரத்தை தானே வைத்துக் கொள்வதும், தன் சகோதரனே ஆனாலும், தோழியே ஆனாலும் அவர்களின் தனிப்பட்ட முடிவுக்கு மரியாதை தரும் மெச்சூரிட்டியும் அருமை. கல்லூரிக் கால காதல் தடுமாற்றங்களுக்கு, லீனாவின் நிதானமும், முடிவெடுக்கும் திறமை, ஊர் சுற்றி காதலிப்பதைவிட வேலை ரொம்ப முக்கியம் என்ற யதார்த்தை வெளிப்படுத்தும் சில காட்சிகள் நல்ல ரெஃபரன்ஸ்.
லீனா - சனல் திருமணத்துக்கு தடைபோடும் தந்தை இரண்டு விஷயங்களை முன்வைப்பார். ஒன்று, ‘மதமாற்ற கிறிஸ்தவர்கள் நம் குடும்பத்துக்கு செட் ஆக மாட்டார்கள்’, இன்னொன்று ‘என் விருப்பத்தை மீறிச் சென்று குடும்ப கவுரவத்தை குலைத்துவிடாதே.. தாங்க முடியாது’ என்பது. லீனா தந்தை சொன்ன சமூக அழுத்தத்துக்கும் ஆட்பட மாட்டாள், அவரின் இமோஷனல் ப்ளாக் மெயிலுக்கும் பணிய மாட்டாள். அவள் சுயநலவாதி அல்ல; சுயமாக சிந்திக்கக் கூடியவள்.
ஒரு காட்சியில் லீனா தாய் - தந்தை கல்லறை முன்னால் நின்று, “நான் சில விஷயங்களை இன்று செய்துள்ளேன். அது நான் வளர்ந்துவிட்டேன், என்னால் முடியும் என்பதால் அல்ல. அப்படிச் செய்வது தவறில்லை என்பதால் செய்தேன். என்னுடன் நீங்கள் இருக்க வேண்டும்.” என்பாள். நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு நம்மைச் சார்ந்தோர் துணை நிற்க வேண்டும் என்பது எளிமையான, இயல்பான எதிர்பார்ப்பு. அந்த இயல்பையே கேள்விக்குள்ளாக்கும் நெருக்கடிக்குள் தான் மனிதகுலம் சுருங்கியிருக்கிறது. அப்படியான நெருக்கடிகளுக்கு சிக்காதவள்தான் நம் லீனா.
‘நீ உனக்காக முடிவெடு’ என்று துணைக்கு வருவதற்கும், ‘நீ முடிவெடு; நீயே எதிர்கொள்’ என்று கைகழுவுவதற்கும் வித்தியாசம் உண்டு. இன்றைய பெரும்பாலான உறவுகள் கைகழுவுதலில் சீரழிகையில் லீனாவின் கல்லறைக்கு முன் பேசும் வசனம், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றினாலும்கூட அன்பு எல்லாவற்றையும் சுமுகமாக முடிக்கும் என்ற போதனை.
ஆரம்ப நாட்களில் காரணங்களைச் சொல்லி காதலைக் கைவிடச் சொல்லும் தந்தை, பின்னாளில் சமாதானமாகி, ‘பழையனவற்றை மறந்து உன் கணவனை வீட்டுக்கு வரச் சொல்’, என்று சொல்லி சொத்தையும் மகள் பெயருக்கு மாற்றி வைப்பார். லீனா கல்லறையின் முன் நின்று எனக்குத் துணையாக இருங்கள் என்ற கேட்க தந்தை அளித்த இந்த நம்பிக்கைதான் காரணம். அன்பு யாரையும் புறக்கணிக்காது.
சனல் - லீனாவின் தொலைபேசி பேச்சுகளை திரைவழியாக ஒட்டுக் கேட்க நமக்கு சுவாரஸ்யமாக இருக்கும். தற்கால தொலைதூரக் காதல் கான்வர்சேஷனின் திரை வெர்ஷன் ‘Mindiyum Paranjum’ எனலாம்.
பாலைவன பூமியில் இருந்து கொண்டு சொந்த ஊரில் மழை பெய்கிறதா, ஜில்லென்று இருக்கிறதா என்று சனல், லீனாவிடம் கேட்பதெல்லாம் வேரறுந்து பிழைப்புக்காக வெளிநாட்டில் கிடப்போரின் நாஸ்டால்ஜிக் பேச்சு. அதேபோல், வெளிநாட்டில் கணவன் இருக்க தனியாக இருக்கும் இளம் பெண்ணை டாவடிக்கும் ரோமியோக்கள் பற்றி கணவனிடம், ‘என்னை உதயா பேக்கரி காரன் டாவடிக்கிறான்’ என்று லீனா சொல்வதும், அதை அவள் கையாளும் விதமும் நடைமுறை சாத்தியமான பக்குவம்.
அதேபோல், செல்லக் கோபங்களும், சண்டைகளும், போலியாக முறுக்கிக் கொள்வதும் நம் இணையர் கூட நமக்கு வரும் பிணக்குகளும் இதுபோன்றே சட்டென கடந்துபோவதாக இருக்கக் கூடாதா! என்று ஏங்கவைக்கும் ரகம். ‘அன்பு அகந்தை கொள்ளாது தானே!’. அதனால் தான் லீனாவும் - சனலும் ஒருவருக்குள் ஒருவர் அன்பில் அடங்கிப் போவார்கள்.
‘போன் பேசிக் கொண்டே கார் ஓட்டாதே’ என்ற லீனாவின் கடுமையெல்லாம் சனலுக்கு தன்னை டாமினேட் செய்வதாகவே தெரியாது. தந்தையின் மருத்துவப் பரிசோதனைகளுக்கு சனல் கூட இருக்காததற்கு கோபப்பட்டாலும், அவனின் விளக்கத்தால் லீனா சட்டென லேசாகி விடுவாள். புகைப் பிடித்தலை மட்டும்தான் லீனா கடிந்து கொள்வாள். வீடியோ காலில் கூட புகைப்பதை மறைக்க முற்படும் சனலின் செயல் ரசிக்க வைக்கும்.
இப்படியாக அன்பை மட்டுமே பரிமாறிக் கொள்ளும் சனலும் - லீனாவும் அதன் உச்சமாக செய்யும் தியாகம் நெகிழச் செய்யும்.
தான் பிறந்து வளர்ந்த இடத்தில் தன் தந்தையையும், தாயையும் பார்ப்பதாகச் சொல்லும் லீனா, இனியும் கணவன் வெளிநாட்டில் சிரமப்பட வேண்டாம் என்று அந்த நிலத்தை விற்றுக் காசாக்கி, அந்த காசோலையை கல்யாண நாள் பரிசாகக் கணவனுக்கு கொடுப்பாள். கல்யாண நாளை மறந்ததால் கணவனிடம் கோபம் கொள்ளும் க்ளீஷே காட்சிகளெல்லாம் இல்லை.
லீனா காசோலையை பரிசாகக் கொடுக்க அவளுடன் இருப்பதற்காகவே இனி வெளிநாடு செல்வதில்லை என்று விசாவை கேன்சல் செய்துவிட்டு சர்ப்ரைஸாக ஊர் திரும்பியிருக்கும் சனல், கூடுதலாக லீனாவின் பூர்விக நிலத்தில் விவசாயம் செய்ய கன்றுகளையும், நாற்றுக்களையும் வரவழைத்திருப்பான்.
தோட்டத்துக்கு தேவையானவை வந்தபோது, வாகனத்தை அனுப்பிவிட்டு தன் பரிசை அறிவிப்பான சனல். அந்தத் தருணம் இருவருமே நெகிழ்ந்து போகவோ, உருகிப் போகவோ, ஏமாந்து போகவோ மாட்டார்கள். அன்பு ஒருபோதும் தோல்வியடையாது அல்லவா. வெற்றியை அன்புக்குக் கொடுத்து இன்னும் அதிகமாக அன்பு செய்ய காலைக்கு தயாரித்த புட்டு சாப்பிடச் சென்றுவிடுவார்கள்.
கடைசிக் காட்சியில் “சனல் ஏட்டா... இந்த நிலத்தை விற்று உன் கடனை அடைத்து இங்கேயே இருக்கச் செய்ய வேண்டும் என்பதை மட்டும்தான் நீ வெளிநாடு சென்ற முதல் நாளில் இருந்தே யோசித்துக் கொண்டிருந்தேன்..” என்பாள் லீனா.
“வாத்து தன்னை இன்னும் வெண்மையாக்க மெனக்கிட வேண்டியதில்லை. நீங்களும் நீங்களாகவே இருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.” - இது ஒரு சீன பொன்மொழி.
எந்த உறவுக்கு இடையிலும் அன்பு மட்டும் இருந்தால் போதும் அது நம்மையும், நம்முடன் உறவில் இருப்பவரையும் அவரவர் சுயத்தை இழக்காமலும், அடுத்தவர் சுயத்தை மதிக்கவும் கற்றுத் தரும். அன்பினால் லீனா வென்றது இதைத்தான்.
| தேவதைகள் இன்னும் வலம் வருவர் |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in