தமிழ் ஓடிடி சூழலில், ‘விலங்கு’, ‘சுழல்’ போன்ற தொடர்கள் ஏற்படுத்திய தாக்கத்துக்குப் பிறகு, சீரியசான கிரைம் த்ரில்லருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. அந்த காத்திருப்புக்கு நல்வரவாக வந்திருக்கிறது ‘லிங்கம்’ வெப் தொடர். எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளியாகியிருக்கும் 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடர், 1987 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் நடந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவி உருவாகியுள்ளது.
திறமையான கபடி வீரரான லிங்கம் (கதிர்), போலீஸ் வேலை பெற்றுத் வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்ற கனவோடு வலம் வருகிறார். ஆர்டருக்காக காத்திருக்கும் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்புமுனையாக, ஒரு கொலை வழக்கில் தவறாக குற்றம் சாட்டப்படுகிறார். செய்யாத குற்றத்துக்காக சிறைக்கு சென்று திரும்பும் அவரது வாழ்க்கை முற்றிலுமாக திசை மாறுகிறது. சிறைவாசம் அவரது போலீஸ் கனவை உடைப்பதுடன், அவரை முற்றிலும் வேறு ஒரு மனிதனாகவும் மாற்றுகிறது.
விதியின் விளையாட்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நினைக்கும் லிங்கம், மெல்ல ரவுடியாக உருவெடுக்கிறார். போலீஸ் ஆக விரும்பிய ஓர் இளைஞன் எப்படி ஊரையே கதிகலங்க வைத்த ரவுடியாக மாறுகிறான் என்பதை நட்பு, காதல், துரோகம் என பல விஷயங்களுடன் பேசுகிறது ‘லிங்கம்’.
ஓர் எளிய மனிதன் கேங்க்ஸ்டராக மாறும் கதைகள் தமிழ் சினிமாவுக்கு புதியதல்ல என்றாலும், அதை இயன்றளவு நம்பகத்தன்மையுடனும், நேர்த்தியாகவும், விறுவிறுப்பு குன்றாமலும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் லட்சுமி சரவணகுமார்.
முதல் எபிசோடில் வரும் இரண்டு சிங்கிள் ஷாட் காட்சிகளிலேயே பார்ப்பவர்களை நிமிர்ந்து உட்கார வைத்து, அடுத்தடுத்த காட்சிகளில் உள்ளிழுத்து விடுகிறது திரைக்கதை. இயக்குநரின் வாய்ஸ் ஓவரில் தொடங்கும் தொடர், கதாபாத்திரங்களின் அறிமுகத்துக்கு வெகுநேரம் எடுத்துக் கொள்ளாமல் முதல் எபிசோடிலேயே இதை நோக்கித்தான் தொடர் செல்லப் போகிறது என்பதை அழுத்தமாக சொல்லிவிடுகிறது.
ஆரம்ப எபிசோடுகளில் கட்டமைக்கப்படும் பதற்றமும், கதிர் எதிர்கொள்ளும் சிக்கல்களும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை எகிறச் செய்து விடுகின்றன. ஒவ்வொரு எபிசோடின் இறுதிக் காட்சியும் எழுதப்பட்ட விதம், நம்மை அங்கிங்கு நகரச் செய்யாமல் ஒரே ‘சிட்டிங்கில்’ முழு தொடரையும் பார்க்க வைத்து விடுகிறது. ஒவ்வொரு எபிசோடும் 30 நிமிடங்கள் அளவு மட்டுமே இருப்பது கூடுதல் பலம்.
இந்தத் தொடரின் முக்கிய தூண் கதிர் தான். ஆரம்ப எபிசோடுகளில் கபடி விளையாடும்போது காட்டும் எனர்ஜியும், சுற்றி இருப்பவர்கள் தன்னை பயன்படுத்திக் கொள்வதை அறியும்போது முகத்தில் அவர் காட்டும் வலி, ரவுடியாக மாறும்போது அவரிடம் ஏற்படும் மாற்றம் என தனது கதாபாத்திரத்தின் பரிணாமத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். திரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யாவும் தனது பாத்திரத்தின் கனத்தை அறிந்து சிறப்பான நடிப்பை தந்துள்ளார்.
போஸ் வெங்கட், பூர்ணிமா ரவி உள்ளிட்டோரும் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர். தொடரின் ஆரம்பத்தில் காட்சிகளின் சூழலுடன் பொருந்தாமல் தோன்றும் திவ்யபாரதி கூட அடுத்தடுத்த எபிசோடுகளில் தன் நடிப்பால் வசீகரித்து விடுகிறார். எனினும் அவருடைய டப்பிங்கில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். சில காட்சிகளில் லிப் சிங்க் சுத்தமாக ஒட்டவே இல்லை.
தினேஷ் குமார் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு, குமரியின் நிலப்பரப்பையும், அந்த காலகட்டத்துக்கான நம்பகத்தன்மையையும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளது. டோனி பிரிட்டோவின் இசை, காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.
குறைகள் என்று பார்த்தால் லிங்கம் ரவுடி ஆவதற்கான பின்னணி இன்னும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதேபோல ஒரு காட்சியில் நல்ல நண்பர்களாக இருக்கும் லிங்கமும் திருவும் அடுத்த காட்சியிலேயே திடீரென முட்டிக் கொள்வதாக காட்டுவது ஏற்கும்படி இல்லை. லிங்கம், திரு மோதல் தான் அடுத்த சீசனுக்கான மையப்புள்ளி என்று இருக்கும்போது அதை இன்னும் அழுத்தமாக காட்சிப்படுத்தி இருக்கலாம்.
சத்யா - பூர்ணிமா காதல் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் சிறப்பாக இருந்தாலும் இந்த கதைக்கும் அதற்கும் பெரிய தொடர்பு இல்லாதது போல அந்த காட்சிகள் மட்டும் துண்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சில குறைகளையும் தாண்டி தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதையால், பெரிதாக எதையும் யோசிக்கவிடாமல் கட்டிப் போட்டு விடுகிறது லிங்கம்.
தரமான த்ரில்லர் கதையை விரும்புவர்கள் ’பிங்கே-வாட்ச்’ செய்ய தாரளமாக பார்க்கலாம். ஜியோஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது. கண்டிப்பாக 18 வயதுக்கு உட்பட்டோர் பார்க்க உகந்ததல்ல.