ஹங்கேரிய இயக்குநர் ஜியோர்ஜி பால்ஃபி உலக சினிமாவில் ஒரு தனித்துவமான ஆளுமை. பிற படங்களின் இருந்து நூற்றுக்கணக்கான காட்சிகளை வெட்டி ஒட்டி உருவாக்கிய ‘ஃபைனல் கட்: லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்’, ஒரு முக்கியக் கதாபாத்திரம் படம் முழுக்க விக்கல் எடுத்துக்கொண்டே இருக்கும் ‘ஹக்கிள்’ என தனது வழக்கதுக்கு மாறான படைப்புகளால் உலக சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியவர்.
அவரது சமீபத்திய படைப்பாக வெளியான ‘ஹென்’ (Hen) சற்று மெயின்ஸ்ட்ரீம் கமர்ஷியல் சினிமா போலத் தோன்றினாலும் ஒரு காட்சியில் கூட கிராபிக்ஸ் எதுவுமே பயன்படுத்தாமல், மனிதர்கள் ஒருவரையொருவர் மிருகங்களைப் போல நடத்தும் கொடூர உலகை ஒரு கோழியின் பார்வையில் அட்டகாசமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
மனிதக் கடத்தல், உறவுச் சிக்கல்கள் என சீரியஸான துணைக்கதைகளைக் கொண்டிருந்தும் கூட, இப்படம் மிகவும் இலகுவான தொனியிலேயே பெரும்பாலும் நகர்கிறது.
படம் தொடங்குவதே ஒரு கோழியின் பின்புறத்தில் இருந்து முட்டை வந்து விழுவதில் இருந்துதான்.அந்த முட்டையிலிருந்து வெளிவரும் கருமை நிறக் குஞ்சு தான் (உண்மையாகவே) படத்தின் கதாநாயகி. அந்த கோழியின் பார்வையில்தான் மொத்த படமும் பயணிக்கிறது. ஒரு பண்ணையில் ஆயிரக்கணக்கான மஞ்சள் நிற ப்ராய்லர் கோழிக்குஞ்சுகளுக்கு இடையே தன் வித்தியாசமான நிறத்தால் தனியாகத் தெரியும் இந்தக் கோழியை, லோடுமேன் நிராகரிக்கிறார். அதைத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று சூப் வைக்க அவர் முடிவெடுக்க, அங்கிருந்து கோழி தப்பிக்கிறது. இங்கிருந்து படம் சூடுபிடிக்கிறது.
தப்பிக்கும் வழியில் அது ஒரு நரியிடம் மாட்டிக்கொள்கிறது. (அந்த நரியும் கிராபிக்ஸ் அல்ல, மிகச் சிறப்பாக பயிற்சிவிக்கப்பட்ட அசல் நரி). சாலைக்கு ஓடும் கோழியைத் துரத்தும் நரி காரில் அடிபட்டு இறக்க, கோழி புத்திசாலித்தனமாக தப்பிக்கிறது.
கடைசியில் ஒரு கடலோர உணவகத்தைச் சேர்ந்த முதியவரிடம் இந்த கோழி தஞ்சமடைகிறது. ஆனால், அங்கிருக்கும் பிற கோழிகளால் அது வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதோடு, தன் கூட்டைக் கட்டுப்படுத்த நினைக்கும் சேவலாலும் கொடுமைப்படுத்தப்படுகிறது. மனிதர்களின் உலகமும் இதற்கு விதிவிலக்கல்ல. அந்த முதியவரின் மகளுடைய காதலன், சட்டவிரோதமாக அகதிகளைக் கடத்தும் கும்பலுடன் சேர்ந்து, அவர்களை இருண்ட அறைகளில் அடைத்து வைக்கிறார்.
படத்தின் தொடக்கத்தில் நாம் பார்த்த பண்ணைக் கோழிகளின் கொடூர நிலையையே அந்த அகதிகளின் நிலையும் நினைவூட்டுவது அட்டகாசமான குறியீடு.
ஒரு கோழியை வைத்துக் கொண்டு எந்தவித கிராபிக்ஸும் இன்றி இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கும் இயக்குநரை எப்படி பாராட்டினாலும் போதாது. அந்த நரி, கோழியை துரத்தும் காட்சி ஒரு அற்புதமான மாஸ்டர்கிளாஸ்.
ஜார்ஜோஸ் கர்வேலாஸின் ஒளிப்பதிவில் கோழியின் பார்வையில் இயங்கும் கேமரா, அதன் விருப்பங்கள், மனிதர்களின் இருண்ட உலகத்திற்கு நடுவே அது சந்திக்கும் சவால்கள் என அனைத்தையும் நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளது.
படத்தின் இறுதியில் எதிர்பாராத வன்முறைகள் இடம்பெற்றாலும், நேர்த்தியான திரைக்கதை மற்றும் எடிட்டிங்கால் ‘ஹென்’ ஒரு சிறந்த சினிமா அனுபவத்தைத் தருகிறது.
படத்தின் வசனங்களை ஒரு ஏ4 ஷீட்டில் எழுதிவிடலாம். சற்றே பொறுமையுடன் நகர்ந்தாலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாத படைப்பு. எந்தவொரு போதனையும் இன்றி ஒரு வித்தியாசமான திரையனுபவத்தை இயக்குநர் வழங்கி வெற்றி பெற்றுள்ளார். அமேசான் ப்ரைம் தளத்தில் வாடகை முறையில் காணக் கிடைக்கிறது.