ஓடிடி விமர்சனம்

Good Luck to You, Leo Grande: பேரிளம் பெண்ணின் காமமும், நான்சிக்கு கிட்டிய புரிதலும் | திரை தேவதைகள் 26

பாரதி ஆனந்த்

கலைக்கு எப்போதும் பேராற்றல் உண்டு. அதுவும் புரட்சிகரமான கலை என்பது மனித மனம் கொண்ட தயக்கங்களை சட்டென வெட்டி வீழ்த்தும். அப்படியோர் உன்னத படைப்புதான் என்னை ‘திரை தேவதைகள்’ தொடரில் இதுவரை பேசப்படாத ஒரு விஷயத்தை ஆழமான புரிதலோடு அணுகி, அதை எழுத்தில் பிரதிபலிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. இதைச் செவ்வனே செய்வது சற்று சவாலானதே. மேலும், இது கலாச்சாரக் காவலர்களில் வாய்களுக்கு அவல் கொடுக்கும் காரியம். இருந்தாலும், அந்தச் சவாலை ஏற்கும் துணிவையும் அந்தப் படைப்பே தந்தது. அதனால் தான் முதல் வரியிலேயே சொன்னேன் ‘கலைக்கு எப்போதும் பேராற்றல் உண்டு’ என்று. அத்தியாயத்தின் தலைப்பிலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும், இது வயது முதிர்ந்த பெண்ணின் காம உணர்வு பற்றியது என்று.

பொதுவாகவே, காமத்தின் மீது சமூகத்துக்கு இரட்டை நிலைப்பாடுதான் இருக்கிறது. அதில் இந்தியச் சமூகம், மேற்கத்திய சமூகம் என்று வேறுபடுத்திப் பார்க்க வேண்டியதில்லை. பரந்துப்பட்டு இரட்டை நிலைப்பாடுதான் நிலவுகிறது.

ஓர் ஆண் தனது பாலியல் இச்சைகளைப் பற்றி வெளிப்படையாக பேசுவது, பாலுறவில் இணையரிடம் ஏதேனும் ஒன்றை எதிர்பார்ப்பது, ஏன் அவளிடம் கேட்காமலேயே கூட தன் இச்சையை சோதித்துப் பார்ப்பது அவனுடைய ஆண்மையின் அடையாளம் என்று பார்க்கப்படுகிறது. ஆனால், அப்படியாக ஒரு பெண் தன் பாலியல் இச்சைகளைப் பேசினால், அது பெண்மையின் அடையாளம் என்று ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை. மாறாக, அவள் ‘காமுகி’ என்று முத்திரை குத்தப்படுகிறாள்.

மலையாளத்தில் ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ என்றொரு படம் வந்தது. அதில் மனைவி தன் கணவனிடம் கரடுமுரடான உறவால் எனக்கு அசவுகரியமாக இருக்கிறது. என்னை உறவுக்கு தயார்படுத்தலாமே என்று ‘ஃபோர் ப்ளே’ பற்றி பேச, கணவனின் முகம் சட்டென மாறும். பின்னொருநாளில் “உனக்கு மற்றதெல்லாம் தெரியும், ஆனால் இந்த வேலை தெரியாது” என்று அவளது காமத் தேவையை குத்திக்காட்டிப் பேசுவான்.

காமம் என்று வந்தால், ஆணின் இன்பத்தை மவுனமாக அனுமதிக்கும் வடிகாலாகவே பெண்கள் இருக்கின்றனர்.

ஆணுக்கு காமம் ‘இன்பம். பெண்ணுக்கு காமம் ‘சந்ததி விருத்தி’க்கான செயல்பாடு. இப்படியான இரட்டை நிலைப்பாடுதான் நிலவுகிறது.

அதுவும் குழந்தைகள் பெற்ற பின்னர் அவளுக்கு காமம் தேவையற்றது என்று நினைப்போரும் உண்டு. அதுதான் உண்மையென்று நம்பி வாழ்வோரும் உண்டு.

பாலுறவுக்கான 18+ வயதை அடைந்த பின்னர் மனிதனின் காமத்துக்கு காலாவதி தேதி இல்லை. அதுபோலவே காமம் வாங்கிக் கொள்வதிலும், கொடுப்பதிலும் இல்லை. அது இருவர் இடையேயான ‘பார்டிசிபேடிவ் பெர்ஃபார்மன்ஸ்’.

‘குட் லக் டூ யூ, லியோ கிராண்ட்’ (Good Luck to You, Leo Grande) திரைப்படத்தின் நாயகி நான்சி ஸ்டோக்ஸ் (எம்மா தாம்ஸன்) 31 ஆண்டுகள் மண வாழ்க்கையில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்து, பணிக் காலமெல்லாம் ஒழுக்க விழுமியங்களை இறை நம்பிக்கையின் ஊடே போதித்து, 2 ஆண்டுகளுக்கு முன்னதாக கணவனையும் இழந்து நிற்பவள்.

தட்டையான வாழ்க்கை, அவளை ஒரு தேடலுக்கு உந்துகிறது. ஆயிரமாயிரம் கேள்விகளுடன், தயக்கங்களுடன் அந்தத் தேடலுக்குள் ஒரு தாபப் பூவாய் பிரவேசிக்கிறாள். அவளை வரவேற்கிறான் இளைஞன் லியோ கிராண்ட் (டேரில் மெக்கார்மேக்). அவர்களுக்குள் நிகழும் உரையாடல்களும், உல்லாசத் தருணங்களும் தான் மீதிப் படம். 2022-ல் வெளியான காமெடி டிராமா ஜானர் திரைப்படமான இந்தப் படம், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

இனி படத்துக்குள் செல்வோம். நான்ஸி ஸ்டோக்ஸ் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்யும் இயல்புடையவள். அறைக்குள் நுழைந்ததும் தான் அணிந்துவந்த செருப்பை அதன் ரேக்கில் வைத்துவிட்டு, அறைக்குள் அணியும் காலணியை எடுத்து மாட்டிக் கொள்வாள்.

இதை இப்படித்தான் செய்வேன் என்று அடம் பிடிப்பவர்களை நாம் நிறைய பார்த்திருப்போம். சிலர் எந்த அளவுக்கு செல்வார்கள் என்றால், நந்தினிக்கு அம்பி எழுதிய காதல் கடிதத்தில் மார்ஜின் வரைந்தும், பேஜ் டர்ன் ஓவர் என்று குறிப்பிட்டதையும் போல தேவையற்ற ரூல்ஸுடன் இருப்பார்கள்.

நான்சி ஸ்டோக்ஸ் ஆசிரியராக இருந்தவர். பதின்மவயது பெண் பிள்ளைகளிடம், ‘உங்கள் பாவாடை உயரம் குறைந்தால் உங்களை நீங்களே கடைவிரிக்கிறீர்கள் என்று அர்த்தம்’ என்று கடுமை காட்டியவர். தனிப்பட்ட வாழ்விலும் கணவனின் காமத் தேவைக்கு மட்டுமே தன்னை படைத்துப் பழகியவள். கணவானால் இல்லறத்தில் சுவாரஸ்யங்கள் ஏற்படாத போதிலும், அதை வெளிப்படையாகச் சொல்லியவள் இல்லை. இப்படியாக தான் பிறரை, சமூகத்தை முன்னிலைப்படுத்தி அதன் கற்பிதங்களுக்குள் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே மிகவும் நேர்மையானது என்று நம்பியவள்.

அப்படிப்பட்ட நான்சிக்கு தனக்கு கற்பிக்கப்பட்ட, தான் கற்பித்த அத்தனை ஒழுக்க விழுமியங்களையும் கடந்து தனது பாலியல் ஆசைகளை இந்த வாழ்வில் ஒருமுறையாவது பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்ற தீவிரம் உருவாகிறது. அதுவும், தனக்கு வயதாகிவிட்டாலும் தன்னுள் ஏற்பட்ட காமத்தைக் கடக்க ஓர் இளைஞனே வேண்டும் என்று முடிவு செய்து பாலியல் தொழிலாளியான லியோ கிராண்டின் ப்ரொஃபைலை, அவனது சேவைகளுக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்துப் படித்து தேர்வு செய்கிறாள்.

இருவருக்கும் காமத்தின் மீதான புரிதலும், பார்வையும் நேரெதிராக இருக்கிறது. காமத்தினால் உருவாகும் ஆசைகளை ‘ஃபேன்டஸி’ என்கிறான் லியோ. ‘அதை அத்தனை உயர்வாகச் சொல்ல வேண்டாம், வெறும் இச்சைகள்தான்’ என்கிறாள் நான்சி.

அவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசம், நான்சியை அவனிடம் ஒரு டீச்சர் தன் மாணவனிடம் கேள்விகள் கேட்பதுபோல் அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்க வைக்கிறது.

‘நீ ஏன் பாலியல் தொழிலுக்கு வந்தாய்? நீ குழந்தையாக இருக்கும்போது கடத்தப்பட்டாயா? உன்னை சமூக விரோதிகள் இந்தத் தொழிலுக்குள் தள்ளினார்களா? நீ பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டவனா? நீ தாய், தந்தை தெரியாமல் காப்பகத்தில் வளர்த்தவனா?’ என்றெல்லாம் கேள்விகளை அடுக்குகிறாள் நான்சி. கூடவே அவனுடைய ஆங்கில சொல்வளத்தை அவ்வப்போது பாராட்டிப் புகழ்கிறாள்.

டீச்சர் ஆட்டிட்யூட் ஒருபுறம் இருக்க, மறுபுறம் நான்சியின் உள்ளம் தனக்கு என்ன தேவை Vs தான் எதைக் கேட்டுப் பெற அனுமதி இருக்கிறது என்பதற்கு இடையே ஊசலாடுகிறாள். தான் பார்த்த தொழிலுக்கும், தனது வயதுக்கும், இரண்டு வளர்ந்த பிள்ளைகளின் தாய் என்ற பொறுப்புக்கும் இடையே தன் தேவை அவளுக்கு ஒரு பாவமாகத் தெரிகிறது. ஆனால் அதைச் செய்தே ஆக வேண்டும் என்ற தீர்மானமும் இருக்கிறது.

நான்சியாக நடித்த எம்மா தாம்ப்ஸனிடம், “நீங்கள் ஏன் இந்த கதாபாத்திரத்துக்கு ஒப்புக் கொண்டீர்கள்?” என்று வினவப்பட்டது. அதற்கு அவர், “நான்சியில் நான் பல பெண்களின் தவிப்பைப் பார்த்தேன். நான்சி - லியோவைப் போல் நிஜ வாழ்வில் யாரையும் அறிந்ததில்லை. ஆனால் அவர்கள் படம் நெடுகிலும் மேற்கொள்ளும் உரையாடல்கள் பாலியல் இன்பம் குறித்த ஆண், பெண் அனுபவங்களைப் பற்றிய ஆழமான விவாதங்களை உருவாக்குவதாக இருந்தன” என்று கூறியிருப்பது இங்கே மேற்கோள் காட்டத்தக்கது.

‘விடவேண்டும் அச்சத்தை; தொடவேண்டும் உச்சத்தை’ என்று காமம் பற்றி கவிதை பாடியவர்கள் புனிதப்படுத்திவைத்த விஷயம்தான் பாலுறவு க்ளைமாக்ஸ்.

‘ஆத்மார்த்தமான, அன்பான உறவில் அப்படியான உச்சங்கள், மிச்சங்கள் எல்லாம் உப்பு, புளிப்பு, காரம் போல் உச்சுகொட்டி உணரப்படுவதில்லை. அது மனம் விரும்பி கலவியில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் திருப்தி மனநிலை’ என்கின்றனர் பாலுறவு சார்ந்த வல்லுநர்கள்.

கணவனை இழந்து தனித்து வாழும் நான்சி தன் பாலியல் தேவைகளை, அதில் தான் காண விரும்பிய உச்சங்களை அனுபவிக்க நினைப்பதில் இருக்கும் தயக்கங்களை லியோ பேசிப் பழகி தகர்க்கும் விதம் கலையம்சம்.

ஒரு பெண் காமத்தில் உச்சம் காண்பது என்பது, சம்பந்தப்பட்ட ஆண், அவளை திருப்திபடுத்திவிட்டதாக கருதும் மகிழ் உணர்வாக இருப்பதுதான் பிரச்சினை. அது ஒரு பெண்ணின் உணர்வாக மதிக்கப்படாமல், ஆணின் பெருமித அடையாளமாக இருக்கிறது.

இந்தப் பார்வையில் மாற்றம் தேவை என்பது ஆணுக்கு மட்டுமல்ல, பெண்ணுக்கும்தான் என்பதை நான்சி மூலம் பேசுகிறது இப்படம்.

நதிகள் கடல்களிலும், கடல்கள் சமுத்திரத்திலும் சங்கமிப்பது போன்றதே கலவி. இந்தச் சங்கமத்தில் அவை நான் உன்னைக் கொண்டேன், நீ என்னை வென்றாய் என்றெல்லாம் சிலாகிக்காதிருப்பது இயற்கையென்றால், பெண்ணின் ஆர்கஸத்தை ஆணின் வீரம் என்றும், அவள் ஒருவேளை ஆர்கஸத்தை விரும்பினால் அதை பெர்வர்ஷன் (பிறழ் மனநிலை) என்று வகைப்படுத்தாமல் இருப்பதும் இயற்கை.

நான்சி - லியோவுடனான முதல் சந்திப்பிலேயே ‘என்னுடைய திருமண வாழ்வில் காம உச்சங்களை நான் கண்டதில்லை. அதை என நிகழ்த்தும் சாகசங்களை நீ செய்யாதே’ என்று தெளிவுபடுத்துவாள்.

அவர்களுக்குள் 4 சந்திப்புகள் நிகழ்கிறது. முதல் சந்திப்புக்குப் பின்னர் நான்சிக்கு அவளுள் இருந்த தயக்கங்கள் விலகியிருக்கின்றன. இரண்டாம் சந்திப்பில் எனக்கு இதெல்லாம் தேவை என்று பேப்பரில் பட்டியலிட்டுக் கொடுக்கிறாள்.

அன்று அவர்களின் உல்லாசத் தருணங்களுக்கு முந்தைய உரையாடல் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது அவசியமா என்பதில் நீள்கிறது.

“என்னுடைய க்ளையன்ட்களின் தேவைகள் வித்தியாசமானவை. பெரும்பாலும் அவை ஆபத்தில்லாதவை. வெகு சில நேரங்களில் ஆபத்தானவர்களாக இருந்துள்ளனர். பாலின்பம் எல்லோரும் பெறக் கூடியதுதான். ஆனால் அது பலருக்குக் கிடைப்பதில்லை. என்னுடைய ஒரு க்ளையன்ட் மாற்றுத்திறனாளி. அவரை நான் குளிப்பாட்டுவதும், அப்போதும் காமம் ததும்பிய பேச்சுகளை முன்னெடுப்பதுமே அவரது இன்பம்.

இன்னொரு க்ளையன்ட் இருக்கிறார். அவருக்கு நான் அவருடன் கைகளைப் பிடித்துக் கொண்டு டிவி பார்க்க வேண்டும்.

இப்படியானோருக்கான இன்ப வடிகாலாக நான் இருக்கிறேன். அதை நான் வேண்டி விரும்பித்தான் செய்கிறேன். என்னால் என் க்ளையன்ட்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். என்னைப் போன்றோரால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள், வக்கிரங்கள் குறையலாம்” என்கிறான்.

அதுவரை பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று தனது மாணவிகள் எழுதிக் கொடுத்ததையெல்லாம் கடுமையாக கண்டித்த நான்சி, தனது பார்வையை இந்த விவாதத்துக்குப் பின்னர் மாற்றுகிறாள். இதன் நிமித்தமாக பரந்துபட்ட விவாதங்கள் வேண்டும் என்கிறாள். பாலியல் தொழிலுக்கு சில நாடுகள் சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுத்திருக்கின்றன.

மூன்றாவது சந்திப்பும் நிகழ்கிறது. நான்சியும் லியோவும் மனதளவிலும் ஒரு கம்ஃபர்ட் ஜோனுக்குள் வந்திருப்பதாய் நாம் உணர்வோம். லியோ தனது ஆசைகளை நிறைவேற்றுபவனாக இருந்தாலும் கூட அவனை இந்தத் தொழிலில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று நான்சிக்கு தோன்றுகிறது.

அதனால், அவனுடைய இயற்பெயரை தெரிந்து கொண்டதைக் கூறுகிறாள். அது லியோவுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்துகிறது. தொழில்முறை உறவாக இருக்க வேண்டிய உறவில் நான்சி தனிப்பட்ட விவகாரத்தில் மூக்கை நுழைத்ததாக உணர்கிறான். அவளை வசைபாடுகிறான். அங்கிருந்து ஆவேசத்துடன் வெளியேறுகிறான். மீண்டும் வந்து அழுது உடைகிறான். அதுவரையுமே லியோவின் தொழிலை முழுமனதாக ஏற்றுக்கொள்ள முடியாத நான்சியால் அவனுடைய தொழிலை, அவனுடைய நியாயங்களை ஏற்றுக்கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு முறையும் லியோவும் நான்சியும் சந்திக்கும்போது அங்கு காமம் மட்டுமே அரங்கேறவில்லை. பாலியல் இன்பம், குறிப்பாக பெண்ணின் பாலியல் இன்பம் சார்ந்தும், பாலியல் தொழில் குறித்தும், சமூக அமைப்புகள் குறித்த ஆரோக்கியமான பேச்சுகள் இடம்பெறுகின்றன.

4-வது சந்திப்புதான் படத்தின் இறுதிக்கட்டம். நான்சி தனது வாழ்வில் தான் கண்ட ‘ஒரே சாகசம்’ லியோ தான் என்று வர்ணிக்கிறாள். அவனை பிறருக்கும் பரிந்துரை செய்வேன் என்கிறாள். தொழில் ரீதியாக அவை தனக்கான அங்கீகாரம் எனக் கருதுகிறான் லியோ.

அதுமட்டுமல்லாத நான்சி ஆரம்பத்தில் இருந்த குழப்ப மனநிலையில் இருந்து விடுபட்டவளாக இருக்கிறாள்.

ஒரு பெண்ணின் ஆசைகள் ‘பாவம்’ அல்ல. அவளது தேவைகள் ‘பலவீனம்’ அல்ல. தனது பாலியல் இன்பத்தால் தன்னை யாரும் குறை மதிப்பிடலாம் என்று ஒரு பெண் அஞ்சத் தேவையில்லை.

இந்தப் புரிதல்கள் நான்சிக்கு ஏற்படுகிறது. அந்தப் புரிதலைத்தான் லியோவுடனான உறவில் அவள் பெறுகிறாள்.

தனது உடலைப் பற்றி அவமானகரமான உணர்வுகளைக் கொண்ட நான்சி, கண்ணாடியில் தனது உடலைக் கண்டு ரசிக்கிறாள்.

உண்மையில் தன்னைத் தானே நேசித்தல் என்பது தனது உடலையும் சேர்த்துதான்.

நிர்வாணக் காட்சியில் நடித்ததைப் பற்றி எம்மா தாம்ஸன் ஒரு பேட்டியில், “நாம் நிர்வாணமாகப் பார்க்கும் பெண் உடல்கள் அதற்காக ஒப்பனை செய்யப்பட்டவையாகவே பெரும்பாலும் இருக்கின்றன. அல்லது இதுதான் ஐடியல் என்று கற்பிதம் செய்யப்பட்ட தோற்றம் கொண்டவையாக இருக்கின்றன. அதனால்தான் பெண்களில் பலர் தங்கள் முழு உருவத்தை கண்ணாடியில் பார்ப்பதைப் புறக்கணிக்கின்றனர். ஆனால் நான்சியின் புரிதல்களை என்னை அந்தக் காட்சியில் நிர்வாணமாக நிற்கச் செய்தது. அவளை அப்படிப் பார்ப்பது அவளுடைய முடிவாக இருந்தது.

அந்தக் காட்சியில் நான் நடித்தபோது என்னைச் சுற்றி ஆண்களே அதிகம் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், ‘ஆதியில் ஏவாள் எப்படி இருந்தாள்? அவள் தனது நிர்வாணத்தை ஒரு பொருட்டாகக் கருதியிருக்க மாட்டாள் அல்லவா?’ என்று யோசித்து நிர்வாணமாக நின்றேன்” என்று கூறியிருப்பார்.

பெண்கள் தங்களின் நிர்வாணத்தை காண்பதும், ரசிப்பதும் தவறு என்பதும், அவர்களின் உடல் அவர்களின் இன்பத்துக்காக என்ன செய்யும் என்பதைத் தெரிந்து கொள்வது குற்றம் என்பதும், அவர்கள் உடல் இன்னொரு நபரின் இன்பத்துக்கானது என்ற கற்பிதமும் உடைக்கப்படுகிறது ‘Good Luck to You, Leo Grande’ திரைப்படத்தில்.

ஒரு பேரிளம் பெண்ணான நான்சி ஸ்டோக்ஸின் காமம், அதைச் செய்து காட்டுகிறது.

| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

SCROLL FOR NEXT