ஓடிடி விமர்சனம்

GARGI: ஒற்றைக் கேள்வியில் நியாயத் தீர்ப்பு எழுதிய கார்கி | திரை தேவதைகள் 28

பாரதி ஆனந்த்

“இச்சமூகத்தில் மிக எளிதில் பாதிக்கப்படக் கூடிய குழந்தைகளுக்கு வன்முறையும், பயமும் இல்லாத வாழ்கையை வழங்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்” - நெல்சன் மண்டேலா.

சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்னர் நெல்சன் மண்டேலா முன்வைத்த கருத்து இது. அப்போதும், அதற்கு முன்னரும், இதோ இன்றும்கூட போர், கடத்தல், சைபர் செக்ஸுவல் துன்புறுத்தல்கள், பாலியல் வன்கொடுமைகள், காலநிலை மாற்றம் என்று பல்வேறு விதங்களில் உலகம் முழுவதும் குழந்தைகளின் உரிமை சுரண்டப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

அதுவும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு இணையம் பெருந்தீணி போட்டுக் கொண்டிருக்கிறது.

அப்படியிருக்க, மண்டேலா சொன்னதுபோல், குழந்தைகளுக்கு வன்முறையும், பயமும் இல்லாத வாழ்க்கையை வழங்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். இதுவொரு கூட்டு சமூகப் பொறுப்பு. அதை நாம் எத்தனை பேர் நேர்மையாகச் செய்கிறோம்.

ஆனால், அப்படி ஒருத்தி செய்தாள். அவள்தான் கார்கி. “ஒரே ஒரு முடிவு உலகையே மாற்றுமெனில், அது முடிவல்ல... தொடக்கம்” என்று படத்தின் என்ட் கிரெடிட்ஸில் ஒரு வாசகம் தோன்றும். அந்த வகையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு நியாயக்குரல் எழுப்புவதில் திரையில் கார்கி ஒரு தொடக்கப்புள்ளி. நிஜத்தில் நமக்கு அவள், என்ன நேர்ந்தாலும் நியாத்தின் வழி செல்ல வேண்டும் என்று நம் மனசாட்சியை உலுக்கும் நீதி தேவதை.

2022-ல் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி, சரவணன், ஆர்.எஸ்.சிவாஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கார்கி’. சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

கார்கி என்ற பெயருக்கு வேத கால தொடர்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அதன் மீதான ஆராய்ச்சிகளை சுருக்கிக் கொண்டு, தற்கால கார்கி, தனது பார்வையால், பேச்சால், உள்ளுணர்வுகளால், நிதானத்தால் எப்படி அதிகார வட்டங்களை உடைத்து நீதியை நிலைநாட்டினாள் என்பதை அவளுடன் பயணித்துக் காண்போம் வாருங்கள்.

கார்கியின் அறிமுகம் அவள் வேலை செய்யும் பள்ளிக்கூடக் காட்சிகளில் இருந்து தொடங்கும். பொறுப்பான ஆசிரியை என்று புரிந்து கொள்ளலாம். தனிப்பட்ட வாழ்வில் அவள் எப்படிப்பட்டவள் என்பதையும் அதிகம் மெனக்கிடாமல் ஆரம்பக் காட்சிகளிலேயே கடத்தியிருப்பார் இயக்குநர்.

அவளது காதலன், ‘உன்னை திருமணம் செய்துகொள்ள எங்கள் வீட்டில் ஒரு இனோவா காரும், ரூ.15 லட்சம் காசும் கேட்கிறார்கள்’ என்றவுடனேயே, “என்ன பழநி, எங்க அப்பாவால் எப்படி முடியும்?” என்பாள். அவளுக்கு காதலைவிட குடும்பம் முக்கியம்.

அதேபோல், ஸ்டாஃப் ரூம் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க, அதில் வரும் சிறுமி மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்த செய்தி பற்றிய விவாதங்களின் நீட்சியாக கார்கி தனது ஃப்ளாஷ்பேக்கை ஓட்டிப் பார்க்கையில், 5-ம் வகுப்பு படிக்கையில் அவளுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்த நினைவுகள் சில விநாடிகள் அச்சுறுத்திச் செல்லும்.

பிஞ்சு மனங்களில் பதியும் பாலியல் சீண்டல் ரணங்கள் எளிதில் ஆறுவதில்லை. ஒருவேளை வளர்ந்த பின்னர் அவர்கள் அதைக் கடந்து சென்றாலும் கூட அது ஏற்படுத்திய வடு கூட மீண்டும் அவர்களைக் காயப்படுத்திவிடும்.

ஓர் அழுகிய பிரேதம் கடத்தும் துர்நாற்றம் போன்றது அந்த நினைவுகள்.

கார்கியின் நேர்கொண்ட பார்வை, நிதானம், முற்போக்கு எல்லாவற்றையும் அவ்வப்போது துளி நிமிடமாவது அசைக்கக்கூடியதாகவே அந்த துர்நினைவு இருக்கும். அதனாலேயே தனது சின்னஞ்சிறு தங்கையின் பாதுகாப்பில் அவ்வளவு குறியாக இருப்பாள் கார்கி.

கடுமையான உழைப்பைச் செலுத்தும் தாய், நீண்ட இடைவேளைக்குப் பின்னர் பிறந்த தங்கை, அந்நியோன்யம் காட்டிக் கொள்ளாத பெற்றோர், சப்போர்ட் சிஸ்டமாக அவள் என்று ஒரு லோயர் மிடில் க்ளாஸ் குடும்பத்தின் சாயல்கள் கார்கியின் வீடு தொடங்கி வீட்டில் வசிப்பவர்கள் வரை பிரதிபலிக்கும்.

வாழ்க்கை கொடுக்கக் கூடிய எல்லாத் துன்பங்களிலும் இருப்பவன், இல்லாதவனைவிட அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ மையாகக் கிடக்கும் நடுத்தர வர்க்கம்தான். ஒட்டுப்போட முடியாது உடைந்த கண்ணாடி தான் அவர்களின் வாழ்க்கைத் தரம்.

ஆனால், அந்தத் துயரத்தை பெருஞ்சுமையாகக் கருதாமல் ஓடிக் கொண்டிருப்பது நடுத்தர வர்க்கத்துக்கே உரித்தான மீள் தன்மை.

அத்தகைய மீள் தன்மைக்கு பழக்கப்பட்ட கார்கியின் வாழ்க்கைக்கு ஒரே ஒரு சம்பவம் சீனப் பெருஞ்சுவர் ரேஞ்சுக்கு சவால்விடுவதும், அதை அசாத்திய திறனோடு சமாளிப்பதும்தான் மீதிக் கதை.

தன் தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் அவள் காலையில் தொலைக்காட்சியில் பார்த்த பரபரப்பாக பேசப்பட்ட சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில். ஆய்வாளர் பெனிக்ஸ் ஜெயராஜ் தொடங்கி, குடும்ப நண்பரும் வழக்கறிஞருமான பானுபிரகாஷ் வரை ‘பத்திரமா இரு மா’, ‘மீடியா கண்களில் பட்டுடாத’, ‘ஊரை காலிசெய்திடு’ என விதவிதமான அறிவுரை வழங்குகிறார்கள். அவள் நிலைமையைப் புரிந்து கொள்வதற்குள்ளதாகவே சிக்கல்கள் அடுத்தடுத்தக் கட்டங்களை எட்டிவிடுகிறது.

தன் வாழ்க்கையின் எல்லா வயதிலும் ஆணாதிக்க படிநிலையை எதிர்த்து வாள் சுழற்றிக் கொண்டேதான் இருக்க வேண்டியுள்ளது பெண்களுக்கு. மவுனிகளாக இருந்தவர்கள் இப்போது போராளிகளாக பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறார்கள். அதில் நம் கார்கியும் ஒருத்தி.

தந்தை மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வலுவாக இருப்பதாக காவல் துறை கூறுகிறது. சிறுமி கேங் ரேப்பில் ஈடுபட்ட நபருக்கு ஆஜரானால் பிழைப்பு கெட்டுவிடும் என்று மறுக்கிறார் வழக்கறிஞர் பானுபிரகாஷ்.

“உன் அப்பா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியது நம் காதலை பாதிக்காது. வீட்டை நான் சமாளிச்சுக்குறேன். அம்மா, தங்கையை கூட்டிட்டு வா, வெளியூர் போய்விடலாம்” என்கிறான் காதலன்.

இப்படி எல்லோரும் அவளைக் கைவிட, தாய்ப்பறவை போல் சிறகுகளுக்குள் தாயையும், தங்கையையும் பாதுகாக்கிறாள்.

ஒரு பிரச்சினையை எதிர்த்து நிற்கையில் சமூகம் அந்த நபரை ஆண் / பெண் என்று பிரித்துப் பார்க்கும். ஆனால் கார்கி தன்னை எந்த முன்முடிவுக்குள் மூழ்கடிக்காமல் ஒரு சட்டப் போராட்டத்துக்கு தயாராகிறாள்.

சமூக அவலங்களுக்கான பட்டியல் முடிவற்றது. அதில் ஒன்று ‘ஊடக அச்சுறுத்தல்’ (மீடியா மெனாஸ்). ஒரு பிரபலம் இறந்துவிட்டால் அங்கு அஞ்சலி செலுத்த வருவோரிடம் ‘நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க’ தொடங்கி பாலியல் வன்கொடுமை வழக்குகளை உணர்வற்று அணுகுவது வரை நிறைய இருக்கிறது.

கார்கியை டார்கெட் செய்யும் ஊடகங்களும் அதை அவள் கையாளும் விதமும் நிச்சயம் சாட்டையடிதான். ஆனால் அதையெல்லாம் ’துப்பினால் தொடச்சுக்குவோம்’ வகையில் தான் ஊடகங்கள் சமாளிக்கின்றன என்பது வேதனை.

கார்கியின் சட்டப் போராட்டத்துக்கு துணைக்கு வரும் வழக்கறிஞர் இந்திரன்ஸ் பெருமாள் (காளி வெங்கட்) நாம் இதன்முன்னர் பார்த்திராத மெச்சூரிட்டியை தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பார்.

ஒரு ஹை ப்ரொஃபைல் வழக்கு, தன்னைப் போன்ற பேச்சில் திக்கும் சவால் கொண்டவருக்கு இது அரிய வாய்ப்பு என்பதையெல்லாம் தாண்டி ஒரு தார்மிகக் கடமையோடு, சக மனுஷியின் தவிப்பை உணர்ந்தவனாக உதவிக்கு வருவது வாழ்க்கை நம்மை எத்தனை கொடியநிலைக்குத் தள்ளினால் காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கையை தரும்.

நாம் அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே, குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுப்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்று சொல்லியிருப்போம்.

அதன்படி ஒரு சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை தட்டிக் கேட்பதில் ஸ்டேக்ஹோல்டர்ஸான காவல் துறை, ஊடகம், நீதித்துறை, குடும்ப அமைப்பின் செயல்பாட்டை ‘கார்கி’ ஒரே படத்தில் மிக அழுத்தமாக நிறுவியிருக்கும்.

காவல் ஆய்வாளர் பெனிக்ஸ் ஜெயராஜுக்கு இந்த கேஸை கிராக் செய்து பெயரை நிறுவுவதில் அத்தனை அவசியம். டிஆர்பிக்காக சென்சேஷனல் நியூஸ் பிரேக் செய்வது அகல்யா வேலை செய்யும் (ஐஸ்வர்யா லக்‌ஷ்மி) ஊடக நிறுவனத்துக்கு அத்தனை அவசரம், வழக்கை சீக்கிரம் முடித்தால்போதும், அதுவும் மாற்றுப்பாலின நீதிபதி அமர்வில் விசாரணைகளை விரைந்து நிறைவு செய்ய பப்ளிக் ப்ராஸிக்யூட்டருக்கு அருவருப்பு கலந்து அலட்சியம்.

என் தந்தை எனக்கு நேரவிருந்த பாலியல் சீண்டலை தடுத்தவர். ‘எப்போது யார் இப்படிச் செய்யத் துணிந்தாலும் என்னை நினைத்துக் கொள். துணிச்சல் வரும்’ என்று சொன்னவர் இப்போது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறார். அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கார்கிக்கு கண்மூடித்தனமான பாசம்.

அதனால்தான் வழக்கு நிமித்தமாக காளி வெங்கட், கார்கியின் அம்மாவிடம் “உங்கள் கணவர் அடிக்கடி ஏன் வேலை மாறினார்?” என்ற வழக்குக்கு உதவக் கூடிய கேள்வியைக் கூட கேட்க விடாமல் தடுத்துவிடுவாள். அவளைப் பொறுத்தவரை அவளது தந்தை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்.

ஒவ்வொருவருமே தத்தம் பொறுப்புகளை உணராதவர்களாகவே இருக்கின்றனர். ஆனால், படத்தின் திரைக்கதை ஒவ்வொருவரையும் அவரவர் பொறுப்பு நோக்கி நகர்த்துகிறது.

குடும்பம் தொடங்கி கோர்ட் வரை ஆணாதிக்கம் ஊடுருவாத அமைப்பு ஒன்று இருக்கிறதா என்ன?!

மாற்றுப் பாலின நீதிபதி தன் மீதான விமர்சனத்துக்கு, “ஒரு பெண்ணுக்கு எங்கு வலியிருக்கும். ஓர் ஆணுக்கு எங்கே திமிர் இருக்கும் என்று என்னைவிட யாருக்கும் தெரியாது. என்னைவிட இந்த வழக்குக்கு சரியான நீதிபதி யாரும் இருக்க முடியாது” என்று சொல்லும் பதில் அதற்கு உதாரணம்.

போக்சோ வழக்குகளை ஒரு விக்டிமின் சார்பில் இருந்தே அணுகவேண்டும். விக்டிம் மேலும் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடாமல் கவனமாகக் கையாள வேண்டும் என்று நீதிபதி வாயிலாக சொன்னது பாராட்டுக்குரியது.

தந்தைக்கான நீதியைப் பெறும் போராட்டத்தில் கார்கி ஒரு போலீஸைப் போல ஆதாரங்களைத் தேடி அலைபவள் ஆவாள்.

ஊர்பக்கம் ஒரு சொலவடை உண்டு, ‘சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழலாம்’ என்று. அப்படித்தான் கார்கியும் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கே செல்வாள்.

சிறுமியின் தந்தை சரவணன், கார்கி, காளி வெங்கட் சந்திப்பு அதன் பின்னர் வழக்கின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களை, கார்கிக்கு சாதகமாக நடக்கும் சில நகர்வுகளை திரையில் காணும்போது அதன் அழுத்தம் பூரணமாக வாசகர்களைச் சேரும்.

“நீதிமன்றத்துக்கு சாட்சியங்களே முக்கியம். சாட்சியம் என்பது கண்ணால் காண்பது அல்ல. நிரூபிக்கப்படுவது” - படத்தின் மிக அழுத்தமான வசனம் இது.

கார்கியின் தந்தையை பரேடில் குழந்தை அடையாளம் காட்டியதன் பின்னணியில் குழந்தைக்கு தரப்பட்ட மன அழுத்தத்துக்கான அடல்ட் டோஸ் மருந்து இருந்தது. குழந்தையின் முடிவை தந்தை இன்ஃப்ளூயன்ஸ் செய்தார் என்று காளி வெங்கட் சாட்சியங்களோடு நிரூபிக்க, கார்கிக்கு தந்தை நிபந்தனை ஜாமீனில் கிடைப்பார்.

ஆனால், கார்கியின் வெற்றி அத்துடன் முடியவில்லை. தனது தந்தையை கொல்ல கத்தியுடன் வந்த சரவணன் அதைச் செய்யாமல் செல்லும்போது, கார்கிக்கு தன் சமூகப் பொறுப்பில் எங்கோ விலகியதாகத் தோன்றும்.

அது தன் தந்தையின் நண்பர் லிவிங்ஸ்டன் போதையில் சம்பவத்தன்று பரந்தாமன் வேலை செய்த அப்பார்ட்மென்டில் போதையில் தூங்கிவிட்டதாகச் சொல்லும்போது எல்லா உண்மையும் புலப்படும்.

நீதிமன்றத்துக்கு சாட்சியங்கள் தானே முக்கியம். அதனால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் செல்வாள் கார்கி. இறுதியில் காவல் நிலையத்தில் தந்தையிடம் ஒரே ஒரு கேள்வி கேட்பாள், “அப்பா, நவம்பர் 14 மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை எங்கிருந்த?” என்று.

நவம்பர் 14 குழந்தைகள் தினம். அன்றுதான் சாந்தி அபார்ட்மென்ட்ஸில் ஒரு குழந்தையின் உலகம் கொடூரமாக சிதைக்கப்பட்ட தினம்.

தனது தந்தை சரியான நேரத்தில் வந்ததால்தான் ஒரு பாலியல் வன்கொடுமையில் இருந்து மீண்டிருந்தாலும் கூட, தனது தந்தை சரியான மனிதனாக இன்னொரு பெண் குழந்தைக்கு இல்லாததால் ஒற்றைக் கேள்வியால் நியாயத் தீர்ப்பு எழுதிடுவாள் கார்கி.

“ஒவ்வொரு முறையும் யாரேனும் சரியானதைச் செய்யும்போதும், இந்த உலகம் வாழ்வதற்கு இன்னும் சிறந்த இடமாக மாறுகிறது.”

கார்கி பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு புதிய நம்பிக்கையைப் பாய்ச்சி, இந்த உலகம் வாழ்வதற்கு இன்னும் சிறந்த இடம்தான் என்ற நம்பிக்கையைக் கொடுத்தாள்.

குந்தைகளைப் பாதுகாப்பதில் கார்கியின் பொறுப்பு, இந்தச் சமூகத்தில் ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்க வேண்டியது.

இதுபோன்ற திரைப்படங்களும் சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடுதான். ஆனால் ஒரே ஒரு கோரிக்கை. ‘கார்கி’ ஆகட்டும், ‘சித்தா’ ஆகட்டும் இன்னும் பிற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க எடுக்கப்படும் விழிப்புணர்வுப் படங்களாக இருக்கட்டும், பாலியல் வன்கொடுமை காட்சிகளை இத்தனை உக்கிரமாக காட்சிப்படுத்த வேண்டாம். பிஞ்சு விரல்களும், ரத்தமும் கொடுமையை மறைமுகமாகக் காட்டவில்லை. பதறவைக்கிறது.

கொடூரத்தை அப்பட்டமாகக் காட்டாமல், அதேவேளையில் தாக்கத்தை கச்சிதமாக கடத்தும் வல்லமை படைத்ததுதான் திரைமொழி.

1098 - இது சைல்டு ஹெல்ப்லைன் (Child Helpline) தொடர்பு எண்.

| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.in

SCROLL FOR NEXT