ஓடிடி விமர்சனம்

Gangubai Kathiawadi: கருப்பு ரோஜாக்களின் உரிமைக் குரல் கங்குபாய் | திரை தேவதைகள் 17

பாரதி ஆனந்த்

இந்தத் தொடரில் இதுவரை பேரன்பு, பெருங்கோபம், அருட்கருணை, நுண்ணறிவு, அறச்சீற்றம், தார்மிகப் பொறுப்பு, மாற்றத்துக்கான சிந்தனை, மன விளாசம் என பற்பல மாண்புகளை சுமந்த திரை தேவதைகளைப் பற்றியெல்லாம் சிலாகித்து எழுதியிருக்கிறேன். ஆனால், இந்த அத்தியாயத்துக்காக கங்குவைப் பற்றி தட்டச்சும்போது என் விரல் நுனியில் கண்ணீர் வழிவதுபோன்ற கனத்தை உணர்கிறேன்...

‘எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை…

இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை…

கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது…

அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது…’

- இந்த வரிகளைக் கொண்ட ‘நாயகன்’ படத்தில் இடம்பெற்ற ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை என் அரியா வயதில் கேட்டபோதெல்லாம் தீபாவளி கொண்டாட்டப் பாடல் என்றே நினைத்திருந்தேன்.

பின்னாளில், அதே பாடலைப் பார்த்தபோது ஒரு பாலியல் தொழில் கூடத்தில் இப்படித்தான் கூத்தும், கும்மாளமுமாக இருப்பார்கள்போல என்று நானே தீர்மானித்துக் கொண்டேன். மொழிகள் கடந்து இந்திய திரைப்படங்கள் பலவும் பாலியல் தொழில் கூடத்தை இப்படி சிரிப்பு, சிங்காரம் என்றே காட்டியிருக்கின்றன.

நிழல் மட்டுமல்ல, நிஜத்திலும் மனிதர்களாகிய நாமும் அப்படித்தானே... இன்னொரு மனிதரைப் பற்றி, இன்னொரு இனம், மதம், மொழி, குழு, கலாச்சாரம் பற்றி ஏதேனும் ஒன்றை தீர்மானித்து வைத்தே அணுகுகிறோம். அதுவொரு சல்லித்தனம்!

முதன்முதலில் ‘மகாநதி’யில் சோனாகச்சி சிவப்பு விளக்குப் பகுதி எனக் காட்டப்படும் காட்சிகளும், மீட்கப்பட்ட இளம் பெண்ணின் தூக்கப் புலம்பல்களும் தான் பாலியல் தொழிலுக்குப் பின்னால் இருக்கும் சுரண்டல் பற்றி என்னை சிந்திக்க வைத்தது. அதுவரை கும்மாளக் கூட்டமாக அவர்களை நினைத்திருந்த என் மன சல்லித்தனம் நொறுங்கியது. நான் குலைநடுங்கி மவுனமாய்க் கதறினேன்! இதுவரை ‘மகாநதி’யை திருப்பிப் பார்க்கும் துணிச்சல் எனக்கு வந்ததில்லை.

அந்தப் படத்தையே பாறாங்கல் கனம் என்று நான் தவிர்த்திருக்க பனிப்பாறை கனம் கொண்ட ‘Gangubai Kathiawadi’-ஐ பார்த்தேன். ஆலியா பட் நடிப்பில் 2022-ம் ஆண்டில் வெளியான பயோகிராஃபிக்கல் க்ரைம் - டிராமா ஜானர் திரைப்படம் இது. படத்தில் அஜய் தேவ்கன், சாந்தனு மஹேஸ்வரி, விஜய் ராஸ் என்று பலரும் இருந்தாலும் மொத்தப் படத்துக்கும் ஆலியா தான் நங்கூரம். அந்த வகையில் ஆலியாவுக்கு தனிப்பட்ட முறையில் நடிப்பு அரக்கி என்று பட்டம் கொடுக்கும் வாய்ப்புகளைக் கொடுத்த படம் என்றே சொல்லலாம்.

கதைக்குள் செல்லும் முன்னர் ரியல் கங்குபாய் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் உடனே விக்கிப்பீடியாவை நாடினால் ‘கங்குபாய் ஹர்ஜீவன்தாஸ் (எ) கங்குபாய் கோத்தேவாலி குஜராத்தில் பிறந்தவர். காதல் கணவனால் வஞ்சிக்கப்பட்ட மும்பை காமத்திபுரா சிவப்பு விளக்குப் பகுதியில் விற்கப்பட்டு, பாலியல் தொழிலாளியாக மாற்றப்பட்டவர். அவர் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். மும்பை ஆசாத் மைதானத்தில் அவர் சக தொழிலாளர்களின் உரிமைக்காக, மரியாதைக்காக கொடுத்த குரல் அவருக்கு பிரதமர் நேருவை சந்திக்கும் வாய்ப்பைக் கொடுத்தது’ என்ற சிறு குறிப்பைத் தரும்.

உண்மையான கங்குபாயின் புகைப்படத்துக்குக் கீழே, அவர் ஒரு சமூக சேவகர், பாலியல் தொழிலாளி, பாலியல் தொழில் கூடத்தின் தலைவி என்ற விவரம் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இந்த வரிசைப்படுத்துதலை ரியல் கங்குபாய் விரும்பினாரோ என்று எனக்கு அதைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது.

சமூகத்தில் தேவர் அடியாள்கள் தொடங்கி நவீன காலத்தில் டேட்டிங் ஆப் வழியாகக் கனெக்ட் ஆகக் கூடிய பாலியல் தொழிலாளிகள் வரை அனைவருமே சமூகத்தால் உருவாக்கப்பட்டவர்கள் தான். ஆன்மிகமோ, மோகமோ ஏதோ ஒரு போர்வை தேவைப்படுகிறது அவர்களை உருவாக்க, சம்பாதிக்க, காரியம் சாதிக்க. கூடவே, தாம் உருவாக்கியவர்களை அடையாளப்படுத்தும் வார்த்தையைக் கொண்டே தன்னை பிடிக்காதவர்களை வசைபாட!

இணையத்தில் இன்னும் ஆழ்ந்து தேடினால், கங்குபாய் 1960-களில் காமத்திபுராவை கலக்கிய பாலியல் தொழிலாளி, அந்தப் பகுதியில் அக்காலத்தில் மாஃபியா கிங் ஆக இருந்த கரீம் லல்லாவின் ஆதரவோடு கங்குபாய் மாஃபியா குயின் ஆனார். இளம் வயதிலேயே காமத்திபுரா பாலியல் கூடங்களுக்கு தலைவியானார்.

ஆனால், பாலியல் தொழிலுக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்படும் பெண் குழந்தைகளை மீட்டவர், ஆதரவற்ற குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டவர், பாலியல் தொழிலாளிகளுக்கு வார விடுமுறை வேண்டும், அவர்கள் பொது இடங்களில் அவமதிக்கப்படக் கூடாது, அவர்களுக்கு வாழ்விடம் வேண்டும் என்று குரல் கொடுத்தவர் என்ற குறிப்பும், கங்குபாயின் ஒருபக்கம் மட்டுமே இணையத்தில் மிகுந்திருக்கிறது, ‘Gangubai Kathiawadi’ படத்துக்குப் பின்னர் அது இன்னும் மகிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும் கங்குபாய் செய்வது சேவை அல்ல; அது சட்டப் புத்தக்கத்தில் குற்றம்தான் என்ற வாதங்களும் காணக் கிடைக்கும். ரியல் கங்குபாயை நியாயப்படுத்தவோ, மறுதலிக்கவோ நான் முயலவில்லை. திரை கங்குபாய் சொல்லும் சேதிதான் நம் பகுப்பாய்வுக் களம்.

நடிகையாக வேண்டும் என்ற கனவுகளைச் சுமந்த கங்காவாகத் தான் ஆலியா நமக்கு அறிமுகமாகிறாள். காதலன் ராம்னிக் லால் அவளை காமத்திபுராவில் பாலியல் புரோக்கர் ஷீலாவிடம் ரூ.1000-க்கு விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறான். கிட்டத்தட்ட ஒரு வார காலம் அன்னம், ஆகாரமின்றி அடி உதைகளையும் வாங்கியும் சத்தியாகிரஹம் செய்து பார்க்கிறாள். ஒருகட்டத்தில் ஷீலாவின் வலையில் விழுகிறாள். முதன்முதலாய் ப்ராத்தல் ஹவுஸ் வாசலில் அரைகுறை ஆடை, அலங்காரம் என்று பதுமைபோல் அவள் நிற்கையில், ஒட்டியிருந்த உயிரையும் பறிக்க உன் விரல்களை நீட்டி ‘உஸ்-உஸ்’ என்று சத்தம் கொடு என்று சக தொழிலாளி சொல்லித்தர, அந்த ஓசையில் கங்காவை முழுக்க காற்றோடு கரைத்துவிட்டு தனது பெயரையும் கங்கு என்று மாற்றிக் கொள்வாள்.

‘வேண்டாம் வேண்டாம்...’ என்று வெறுத்த தொழிலில் கங்கு கைதேர்ந்தவளாகி இருப்பாள். அவள்தான் வேண்டும் என்று வரும் வாடிக்கையாளர்களும், காசும், கூடவே பரிசுப் பொருட்களும் குவிய, கங்கு இது என் தொழில், அதில் நானே சிறந்தவள் என்று கர்வம் கொள்பவள் ஆவாள். அவளை வாங்கிய தலைவி ஷீலாவிடமே கெத்து காட்டுவாள்.

“இன்று ஞாயிற்றுக்கிழமை. நாங்கள் கஸ்டமர்களை ஏற்கமாட்டோம். இதுவும் ஒரு தொழில்தான். ஒருநாள் விடுமுறை வேண்டும். உங்களுக்கு நட்டம் ஏற்பட்டால், தொழிலில் லாப - நட்டம் இயல்பு என்று ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி தனது சகாக்களை கங்கு சினிமாவுக்கு அழைத்துச் செல்வதுதான் அவளுடைய முதல் உரிமைக் குரல்.

உரிமையிழந்தவரிடம் இருந்து எழும் உரிமைக் குரல் சமூகத்தின் காதுகளைப் பிளக்கும். எப்படித் தெரியுமா? செவுளில் ஓங்கி அறைந்து மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

உரிமைக் குரல் எழுப்பி வார விடுமுறையை வாங்கிக் கொண்டு திரையரங்குக்கு தோழிகளுடன் செல்லும் கங்குவை அங்கேயும் ஆடவர் சீண்டிப் பார்க்க, “நான் பாலியல் தொழிலாளிதான். ஆனால் நான் பொது இடத்துக்கு வந்தாலும் மக்களில் ஒருத்தி” என்று செவுளில் அறைந்து தன் உரிமையை நிலைநாட்டுவாள்.

கங்கு சக பெண்களுக்கு ஒரு சகோதரி போல் ஆகிவிடுவாள். அங்குள்ள பெண் ஒருத்தி தன் தந்தைக்கு கடிதம் எழுதச் சொல்ல, ஒவ்வொரு வரியையும் அங்குள்ள ஒவ்வொரு பெண்ணும் சொல்லும்போது சமூகம் அவர்களை எத்தகைய வஞ்சகத்துக்குள் தள்ளிவிட்டு அவர்கள் குழந்தைமையை வாழ்க்கையையும் களவாடியிருக்கிறது என்ற வேதனை நமக்குள் பாயும். பாலியல் தொழிலாளிகள் பலரும் தங்களை தங்கள் தந்தை, காதலன், சகோதரன், கணவன் என்ற யாரேனும் ஒருவர் தான் இந்தத் தொழிலுக்குள் தள்ளியதாகக் கூறுகின்றனர் என்கிறது புள்ளிவரம்.

ப்ராத்தல் ஹவுஸ் தலைமையின் சுரண்டல், வாடிக்கையாளராக வரும் அரக்கர்களின் கொடுமைகள் என ஒவ்வொன்றாக உடைக்கும் கங்கு, தொழிலில் ஆதிக்கம் கொண்டிருந்தாலும் அதில் இருப்பவர்களுக்கான சீர்திருத்தங்கள் என்று தான் தீர்மானித்ததைப் பெற முயற்சிப்பாள்.

ஷீலா மறைவுக்குப் பின் தொழிலை தன் கட்டுக்குள் கொண்டு வரும் ஆலியா, போலீஸ்காரரிடம் பேரம் பேசும் காட்சி, அவள் ஈகோவை வருடிக் கொள்ளும் ரகம்தான் என்றாலும் நம்மை ரசிக்க வைக்கும்.

தங்களைப் போன்ற பாலியல் தொழிலாளிகளை மோகக் கழிப்பிடமாகவும், கமிஷன் லாபச் சுரங்கமாகவும் பார்க்கும் ஆண்களை அவர்களின் பலவீனங்கள் / பதவிகள் கடந்து தனது காலில் விழவைத்து ரசிக்கும் கங்குவின் மேலோட்ட வில்லப் புன்னகை அவள் ஆழக் காயங்களுக்கான களிம்புபோல் எனக்குத் தெரிந்தது.

கங்கு தன் சக பாலியல் தொழிலாளிகளுக்கு சுயமரியாதையுடன் வாழுங்கள் என்று அறிவுரை சொல்கிறாள். உங்களுக்கு தலைமை தாங்கும் கும்பல் தலைவி, உங்களுக்கான தரகர், நீங்கள் எதிர்கொள்ளும் அதிகாரி, அரசியல்வாதி என யாருக்கும் பயப்படாதீர்கள் என்கிறாள்.

சுய மரியாதையும், துணிச்சலும் தான் பெண்ணியத்தின் பிறப்பிடம்.

இவற்றுடன் கங்குவுக்கு அரசியல் அதிகாரமும் தேவைப்படுகிறது. தன்னை எதிர்த்து காமத்திபுரா பிரெசிடென்ட் பதவிக்குப் போட்டியிடும் மாற்று பாலினத்தைச் சார்ந்த ரஸியா பாய்-க்கு எதிராக கங்கு விடும் சவால்களும் அதை முறியடிக்கும் விதங்களும் மாஸ் ஹீரோ பட அனுபவத்தைத் தரும். உண்மையில் உரிமையை நிலைநாட்ட கங்குவைப் போல்தான் சுழன்றடிக்க வேண்டும்.

காமத்திப்புரா கோத்தாவாலியின் மகளுக்கு திருமணம் செய்து வைத்து தனது ஸ்டார்டம்மை சக தொழிலாளிகள் மத்தியில் உயர்த்திக் கொள்வாள் கங்கு. அதற்காக அவள் தன் காதலை தியாகம் செய்வாள். ஒரு கனத்த கதையில் தென்றல் போல் வீசிச் செல்லும் அவள் காதல் எபிசோட் இறுக்கத்துக்கு இடையே ப்ரீத்தர். கவிதை போல் நம் மனதை வருடுவார்கள் ஆலியாவும், சாந்தனு மஹேஸ்வரியும். அந்த டீட்டெய்லிங்குக்குள் சென்றால் நம் நாயகியின் சீற்றம் நீர்த்துப் போகும்.

காமத்திப்புரா பஞ்சாயத்து தலைவராகிவிட்ட கங்குவுக்கு பாலியல் தொழிலாளிகளின் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. அடுத்த தலைமுறை பாலியல் தொழிலாளியாகக் கூடாது என்பதிலும், வலுக்கட்டாயமாக யாரும் பாலியல் தொழிலுக்கு வரக் கூடாது என்பதிலும் அவள் உறுதியாக இருக்கிறாள்.

தன் பகுதி பெண் பிள்ளைகளுக்காக சீட் வேண்டி பள்ளிக் கூட முதல்வரான பாதிரியாரிடமும், கன்னியாஸ்திரியிடமும் கங்குபாய் வாக்குவாதம் செய்யும் காட்சி நீங்கள் நிச்சயம் திரையில் காண வேண்டியது.

அங்குதான் அவளுக்கு பத்திரிகையாளர் ஃபைஸியின் (நடிகர் ஜிம் ஷர்ப்) அறிமுகம் கிடைக்கும். கங்குவின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு அவளை ஒரு கவர் ஸ்டோரிக்காக அணுகும் ஃபைஸிக்கு, பள்ளிக்கூடத்திலிருந்து துரத்திவிடப் பெண்களுடன் கங்கு கொடுக்கும் போஸும், அவர்கள் கல்வி கற்க வேண்டும் என்று கூறுவதும் பெருஞ்செய்தியாகிப் போகிறது.

உரிமைக் குரல்களுக்கு ஊடக வெளிச்சம் எவ்வளவு முக்கியம். நியாயமான நேர்மையான பாரபட்சமற்ற ஊடக வெளிச்சம் என்ன செய்யும் என்பதற்கு உதாரணம் தான் கங்குவின் ஆசாத் மைதான் உரை.

“ஒரு சமூகம் பண்பட்டதாக இருக்க எங்களைப் போன்ற பாலியல் தொழிலாளிகள் அவசியம். எல்லைகளைக் காக்கும் போர்வீரர்களால் தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். வக்கிரங்களுடன் அன்றாடம் போராடும் நாங்கள் தான் குடும்பங்கள் சிதையாமலும், தெருக்களில் பெண்கள் பாதுகாப்பாக நடமாடவும் உதவி செய்கிறோம். முற்போக்கான நகரம் என்று சொல்லிக் கொள்ளும் மும்பை எங்களை ஏன் வெறுத்துப் புறக்கணிக்கிறது” என்று பேசுவாள் கங்கு.

அவளது பேச்சு அவளுக்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தருகிறது. வரலாற்றிலும் நிஜ கங்குபாய் 1957-ல் பிரதமர் நேருவை சந்தித்து காமத்திபுரவை அப்புறப்படுத்தக் கூடாது என்று கோரி வென்றார். 1922-ல் அப்பகுதிக்கு அருகமையில் அமைந்த செயின்ட் ஆண்டனிஸ் பள்ளி, காமத்திபுரா விடுதியை அப்புறப்படுத்த நீதிமன்றத்தை அணுகியபோதுதான் கங்கு பிரதமரைப் பார்த்து அந்த இடத்துக்கான உரிமையை வென்றதாக குறிப்புகள் சொல்கின்றன.

திரையில், கங்கு பாலியல் தொழிலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோருவது போல் காட்சிகள் இருக்கும். அப்போது அவளிடம் பிரதமர் சிவப்பு ரோஜாவைத் தர, “நீங்கள் கருப்பு ரோஜாக்களை பார்த்திருக்கிறீர்களா. இல்லாவிட்டால், என்னுடன் காமத்திபுரா வாருங்கள். அங்கே ஆயிரமாயிரம் கருப்பு ரோஜாக்கள் இருக்கின்றன” என்பாள்.

உலகின் பழமையான தொழில்களில் ஒன்றாகவே பாலியல் தொழில் அறியப்பட்டாலும் கூட, அதை ஏற்றுக் கொள்ளும் முதிர்ச்சியும், அதை சட்ட வரம்புக்குள் கொண்டுவந்து கடத்தலையும், சுரண்டலையும் தடுக்கும் நடவடிக்கையும், பாலியல் தொழிலாளிகளையும் மனிதர்களாகப் பார்க்கும் மனமும் இன்னும் இங்கு ஏற்படவில்லை.

ஸ்விட்சர்லாந்து, டென்மார்க், ஹாங்காங், இத்தாலி, ஜெர்மனி, பிரேசில் என 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாலியல் தொழில் சட்ட அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்தியாவில் லிமிடட் லீகாலிட்ட என்ற வரையறுக்கப்பட்ட சட்டப்பூர்வத்தன்மைக்குள் அடங்குகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் புள்ளிவிவரங்களின் படி இந்தியாவில் சுமார் 30 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

இவர்கள் கங்குபாய் காலத்தில் அனுபவிக்கப்பட்ட இன்னல்களுக்கு சற்றும் குறைவில்லாமலேயே இன்றும் அனுபவிக்கின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். செக்ஸுவல் ஹெல்த் பற்றிய விழிப்புணர்வுகள், பாலியல் தொழிலாளிகள் மனம் மாறி வேறு தொழிலுக்குச் செல்ல விரும்பினால் அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தருதல், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்தல் என்று சில என்ஜிஓக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் இந்தத் தொழில் இன்னமும் ஆள்கடத்தலையும், சுரண்டலையும், கிரிமினல் கும்பல்களையும் வளர்க்கும் கூடாரமாகவே இருக்கிறது. அதனாலேயே இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் சட்ட அங்கீகாரம் கோருகின்றனர். சட்ட அங்கீகாரம் தந்தாலும் அது இன்னும் பல பெண்களை இதற்குள் தள்ளும் நியாயமான நேர்மையான உழைப்பை கைவிட்டு குறுக்குவழிக்கு உந்தும் என்றும் சிலர் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

கங்குபாயை கொண்டாடி எழுதுவது யாரும் பாலியக் தொழிலை ஒரு ஆப்ஷனாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. வெகு நிச்சயமாக ஒரு பெண்ணுக்கு அது இருண்ட உலகத்துக்கான வாசப்படியாக மட்டுமே இருக்கும். ஆனால், பாலியல் தொழிலாளிகளாக ஆனவர்களை, ஆக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமல் அவர்களை பொதுச் சமூகத்தில் நம்மைப் போன்ற மனிதர்களாகக் கருதலாமே என்பதற்காகத் தான் இந்த அத்தியாயம். அந்தவகையில் கருப்பு ரோஜாக்களின் உரிமைக் குரல்... கரையை கடந்து எழுந்த அலை... கங்குபாய்!

| தேவதைகள் இன்னும் வலம்வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

SCROLL FOR NEXT