ஓடிடி விமர்சனம்

Dahaad: சாதிய, பாலின பேதத்துக்கு எதிராக கர்ஜிக்கும் காவல் அதிகாரி அஞ்சலி | திரை தேவதைகள் 06

பாரதி ஆனந்த்

இந்தியாவில் உருவாக்கப்பட்ட வெப் சீரிஸ்களில் ஒன்று முதன்முறையாக பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது என்றால், அது 2023-ல் இந்தியில் வெளியான ‘Dahaad’ (தஹாத்) தான். போலீஸ் க்ரைம் டிராமா ரகத்தில் பொருந்தும் ‘தஹாத்’ அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் காணக் கிடைக்கிறது.

மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘களம்காவல்’ பார்த்திருந்தீர்கள் என்றால், நிச்சயமாக ‘தஹாத்’ மிஸ் செய்யக் கூடாத சீரிஸ். அதற்கு முன்னோடி என்பதுடன், ஒப்பீட்டு அளவில் அதைவிட பரந்துபட்ட வீச்சைக் கொண்டது.

பொதுவாகவே, இதுபோன்ற போலீஸ் க்ரைம் டிராமாக்கள் ஆடியன்ஸை சீட் நுனியில் அமரவைக்கவே ஸ்க்ரிப்ட் செய்யப்படும். அந்த பரபரப்பு சற்றும் குறையாத வகையிலும், அதற்கு நிகரான வெயிட்டேஜில் சமூக பிரச்சினைகளை பலவற்றையும் ‘தஹாத்’ பேசியிருப்பதே கூடுதல் பலம். அந்த பலத்தை கச்சிதமாக காட்சிகளில் கடத்தியிருக்கிறார் காவல் துறை துணை ஆய்வாளராக வரும் அஞ்சலி பாட்டி (Anjali Bhatti) ஆக நடித்துள்ள சோனாக்‌ஷி சின்ஹா. ஒட்டுமொத்த சீரிஸையும் நங்கூரமிட்டு நிறுத்தியிருக்கிறார் எனலாம்.

          

பட்டியலின வகுப்பிலிருந்து கல்வியால் முன்னேறியவர் அஞ்சலி. அவரது தந்தை சொல்லுக்கு இணங்க தனது சாதிப் பெயரான மேக்வாலை துறந்து பொதுவான பெயரான ‘bhatti’ என்பதை பின்னொட்டாக இணைத்துக் கொள்கிறாள். ஆனால், அது மட்டுமே அவளது சாதிய அடையாளத்தை அழித்துவிடுகிறதா?, படித்து காவல் துணை ஆய்வாளர் ஆனதால் மட்டுமே திருமண நெருக்கடி இல்லாமல் போய்விடுகிறதா?, சுயமாக சிந்தித்து, செயல்படும் பெண்களை இந்த சமூகம் என்ன மாதிரியாகப் பார்க்கிறது என்பதற்கெல்லாம் சாட்சியாக நிற்கிறாள் அஞ்சலி.

‘தஹாத்’ என்றால் கர்ஜனை என்று பொருள். உண்மையில் தன் பணியில் சிங்கத்தின் கம்பீரத்தைக் காட்டும் அஞ்சலி, கூடவே சாதிய, பாலின பேதம், வரதட்சிணைக் கொடுமை, திருமணத்துக்காக பெண்கள் நிர்பந்திக்கப்படுவது என பல்வேறு சமூகச் சிக்கல்களுக்கு எதிராக கர்ஜித்துள்ளார். அவரது கர்ஜனைகளை அலசுவோம்.

சீரிஸின் இன்ட்ரோ காட்சியே பெண் ஒருவர் பொதுக் கழிப்பிடத்தில் இறந்து கிடப்பதில் இருந்து தொடங்குகிறது. ஆனால், அடுத்தக் காட்சி வேறு ஒரு தளத்துக்குச் சென்றுவிடுகிறது.

ராஜஸ்தான் குக்கிராமங்களில் ஒன்று மண்டாவா. அங்கே உள்ள காவல் நிலையத்தில் அஞ்சலி (காவல் துணை ஆய்வாளர்), அவரது உயரதிகாரி தேவி சிங் (காவல் ஆய்வாளர்) பணிபுரிகின்றனர். அந்த காவல் நிலையத்துக்கு ஒரு ஹை ப்ரொஃபைல் கேஸ் வருகிறது. ஊரின் இந்து உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த அரசியல் பின்புலம் கொண்ட பணக்காரரின் மகள், முஸ்லிம் இளைஞருடன் காதல்வயப்பட்டு வீட்டைவிட்டுச் சென்றுவிடுகிறார். மகளைத் தேடித்தர வேண்டும் என்ற புகார் தரப்படுகிறது.

அதே வேளையில், அதே காவல் நிலையத்தில் பல நாட்களாக காணாமல் போன தனது தங்கை பற்றி ஒரு எஃப்ஐஆர் பதிவதற்காக காத்திருக்கிறார் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

தனது புகாரை காது கொடுத்துகூட கேட்காத காவல் நிலையம், தான் வந்து சென்றாலே ஊதுவத்தி ஏற்றி தூய்மை செய்யும் காவல் நிலையம், ஓர் உயர்சாதி பணக்கார அரசியல்வாதி, ‘லவ் ஜிகாத்’ என்று அரசியல் பேசி வழக்கை பதிய நிர்பந்திக்கிறார் என்பதை பார்க்கும்போது சாதியும், மதமும் இந்த சமூகத்தில் எத்தனை கோரத் தாண்டவத்தை ஆடிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணரலாம்.

நடப்பதைக் கண்டு பட்டியலின இளைஞர் திகைத்துப் போய், “என் தங்கையையும் காணவில்லை, நான் இந்து, என் தங்கையை கூட்டிச் சென்றவன் ஒரு முஸ்லிம்” என்று சொல்லும்போது மதத்துக்குள் சாதி அடங்கி, அவனது புகார் பதியப்பட, உதவி கிடைக்கிறது. ஊதுவத்தி ஏற்றியவரும் அழுத்தம் உயர் சாதியிலிருந்து வந்ததால் ஏற்றுக் கொள்கிறார்.

அந்தப் பட்டியலின இளைஞர் கொடுத்த புகார் மீதான விசாரணையை ஆரம்பிக்கிறாள் அஞ்சலி.

மகள் காணாமல் போனது பற்றிய பெரிய கவலை இல்லாத தாய், “அவள் இருந்திருந்தால் திருமணத்துக்கு வரதட்சிணை கொடுக்க வேண்டியிருந்திருக்கும். அவள் எங்கோ போய்விட்டாள். திருமணமாகியிருக்கும்,” என்று கூறும்போது வெளிப்படும் உண்மை இதுதான்...

திருமணம் - வரதட்சிணை ‘நெருக்கடி’ யானது பெண்களை, குறிப்பாக சமூகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களை பாலியல் வன்முறை, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாக மாற்றிவிடுகிறது.

பின்வரும் காட்சிகள் ஒன்றில், திருமணத்துக்காக தன்னை நச்சரித்துக் கொண்டிருக்கும் அம்மாவிடம், “உன்னைப் போன்ற அம்மாக்கள் திருமணத்துக்கு நெருக்கடி கொடுத்ததால் தான் 29 இளம் பெண்கள் ஒரு கொடூர கொலையாளியிடம் சிக்கிக் கொண்டனர்,” என்று காட்டமாகச் சொல்வாள் அஞ்சலி.

அஞ்சலியின் அந்த பதிலால், அவள் காட்டும் புகைப்படங்களால் அதிர்ந்துபோகும் அவளது தாய் அமைதியாக நகர்வாள். அந்தக் காட்சி, திருமணத்தை திணிப்பவர்களுக்கு ஒரு பாடம்.

இப்படியாக ஒரு பாலியல் குற்றத்தை உள்ளடக்கிய சீரியல் கில்லர் வழக்கை சீரிஸ் நெடுகிலும் சமூகப் பொறுப்போடு அணுகுகிறாள் அஞ்சலி.

இத்தனை கொலைகளையும் செய்வது ஆனந்த் ஸ்வர்ணகர் (விஜய் வர்மா ) என்ற ஒரு கல்லூரி ஆசிரியர். அறிவானவர், விடுமுறை நாட்களில் கூட கிராமங்களுக்குச் சென்று பாடம் எடுக்கக் கூடியவர் என்று சமூகத்தில் அந்தஸ்து மிக்க நபர்.

தான் நிகழ்த்தும் கொலைகளுக்கு ஒரு பாணி வைத்திருக்கிறான் ஆனந்த். அதாவது, சமூகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திருமணம் ஆகாத 25 வயது முதல் 35 வயது வரையிலான பெண்களைக் குறிவைக்கிறான். அவர்களுடன் ஆசை வார்த்தைகள் பேசி காதல் என நம்பவைத்து அவர்களை வீட்டைவிட்டு அழைத்துச் செல்கிறான். அவர்களுடன் பாலுறவு கொண்டுவிட்டு அவர்களிடம் இருக்கும் சொற்ப பணம், நகையை அபகரித்துக் கொண்டு சயனைடு தடவிய கருத்தடை மாத்திரைகளைக் கொடுத்து அவர்களைக் கொன்றுவிடுகிறான்.

இப்படியாக ஒன்றல்ல, இரண்டல்ல 27 பேரை அவன் கொலை செய்துவிட, அந்த மர்ம முடிச்சுகளை நேர்த்தியாக அவிழ்க்கும்போது தன்னை ஒரு நேர்மையான, திறமையான அதிகாரியாக நிறுவுகிறாள் அஞ்சலி. கூடவே சமூகம் இதுதான் இப்படித்தான் என்று கட்டமைத்து வைத்திருக்கும் பாலின பேதங்களை அடித்து நொறுக்குகிறாள். சாதிய அடக்குமுறைகளை துவம்சம் செய்கிறாள்.

அஞ்சலியை திருமணம் செய்துகொள்ளும்படி அவரது தாயார் ஒருபுறம் நச்சரித்துக் கொண்டே இருக்க, அஞ்சலியோ திருமணம் என்ற சடங்குக்குள் தன்னை அடைத்துக் கொள்ள விரும்பாதவளாகவே இருக்கிறாள். அவள் வசிக்கும் மண்டாவா போன்ற குக்கிராமத்தில், தனக்கான இணையை தேர்வு செய்துகொண்டு அவனுடன் உறவிலும் இருக்கிறாள். அந்த உறவிலும்கூட மனதளவில் தன்னை அட்டாச் செய்துகொண்டு ஒரு கட்டுப்பாட்டுக்குள் வர விரும்பாதவளாக இருக்கிறாள் அஞ்சலி.

ஒரு காட்சியில், “நான் திரும்பவரும் வரை என்னை மிஸ் செய்வாயா” என்று அவளது இணை கேட்க, அவள் திரும்பச் செலுத்தும் புன்னகைதான் காதல், திருமணம், ரிலேஷன்ஷிப் மீதான அவளின் ஈடுபாடு. காரணம், தனிப்பட்ட வாழ்க்கையைக் காட்டிலும், தனக்கான சமூக இலக்குகள் நோக்கிய பயணம்தான் அவளுக்கு முதன்மை என்பதை பார்வையாளர்கள் உணரலாம்.

அதேபோல் பணியிடத்தில் நிகழும் பாலின பேதங்களையும் அஞ்சலி நேர்த்தியாக எதிர்கொள்வாள். சீரயல் கில்லர் வழக்கு விசாரணையில் அஞ்சலியை காவல் உயர் அதிகாரி சீண்டும்போதெல்லாம் தன்னை இன்னும் இன்னும் அதிகமாக தகவமைத்து, திறம்பட மர்ம முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டுவாள்.

‘கொலையாளி பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகளில் சயனைடு தடவிக் கொடுத்து கொலைகளை நிகழ்த்தியிருக்கலாம் என்பதை எப்படிக் கண்டுபிடித்தாய்?’ என்று இன்ஸ்பெக்டர் தேவி சிங் கேட்கும்போது, தனக்கு முந்தைய இரவு கான்ட்ராசெப்டிவ் பில்ஸ் சாப்பிடும் சூழல் ஏற்பட்டது என்றும், அப்போது தான் ஒரு பூட்டிய அறையில் அந்த மாத்திரையை எடுத்துக் கொண்டபோது, இதுபோல் ஏன் கொலைகள் நடந்திருக்கக் கூடாது என்று லீட் கிடைத்ததாகவும் அஞ்சலி சொல்வாள்.

‘எனக்குத் திருமணம் ஆகவில்லை, ஆனால் நான் என் இணையைத் தேர்வு செய்து அவருடன் உறவில் இருக்கும் வயதையும், அறிவையும் கொண்டுள்ளேன்’ என்பதுபோல் அவள் மிடுக்காகவே அந்தப் பதிலை தேவி சிங்கிடம் கூறுவாள்.

அங்கீகரிக்கப்பட்ட பாலுறவுக்காகவே இங்கே பல திருமணங்கள் நடக்கின்றன. அதைக் கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் அஞ்சலியின் அணுகுமுறைகள் இருக்கும்.

இன்ஸ்பெக்டர் தேவி சிங் - அஞ்சலிக்கு இடையே பரஸ்பரம் ஒருவித ஈர்ப்பு இருக்கும். ஆனால், அதை எல்லை மீறாமல் இருவரும் அணுகும் விதம் க்ளாஸ் ரகம்.

விசாரணை தொடங்கிய குறுகிய காலத்திலேயே அஞ்சலிக்கு ஆனந்த் ஸ்வர்ணகர் மீது சந்தேகம் வந்துவிடும். ஆனால், அதை நிறுவுவதற்கு அவளிடம் போதிய ஆதாரங்கள் இல்லாமல் போகும். ஆனந்த் கதாபாத்திரம் குற்றவாளி சயனைடு மோகன் குற்றங்களைத் தழுவியது. மோகன் குறிவைத்ததும் வரதட்சிணை தர இயலாமல் திருமணமாகாத, நடுத்தர வர்க்க பெண்களே.

மோகனும் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்த நபர்தான். 20 கொலைகள் செய்த மோகன் இப்போது கர்நாடக சிறையில் ஆயுள் கைதி. மோகன் கதையைத் தழுவி நிறைய படங்கள் எடுக்கப்பட்டாலும், ‘தஹாத்’ சீரிஸ் போல் அழுத்தமாக குற்றத்துக்கும், சமூகப் பொருளாதார சிக்கல்களுக்கும் இருக்கும் தொடர்பை எந்தவொரு படைப்பும் இதுவரை வலுவாகச் சொல்லவில்லை.

சோஷியோ சைக்கோபாத்தாக ஆனந்த் ஸ்வரணகர் (விஜய் வர்மா) நமக்குள் அச்சத்தைக் கடத்துகிறார். தான் செய்யும் குற்றத்தை நன்கு திட்டமிட்டு, எவ்வித சலனமும் இல்லாமல் செய்யும் ஆனந்த், தன்னை அஞ்சலி ஆழமாக சந்தேகப்படுவதையும், கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதையும் ஆரம்பத்திலிருந்து புரிந்து கொண்டவனாகவே அவளை அணுகுகிறான். அஞ்சலியும், ஆதாரம் சிக்கினால் போதும் ஆனந்தை கைது செய்துவிடலாம் என்று அவனை நெருக்குகிறாள்.

ஆரம்பத்தில் ஆனந்த் தான் குற்றவாளியாக இருக்க வேண்டும் என்று அஞ்சலி சொல்லும்போதெல்லாம் அவளது கோணத்தை எள்ளிநகையாடும் எஸ்.பி.யே கூட அவளின் அழுத்தமான விசாரணையின் விளைவை பின்னர் ஆமோதித்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வருகிறார்.

அஞ்சலி தன் வேலையில் அத்தனை பேராவல் கொண்டவள். தான் கொண்ட பணியை நேசிக்கும் அவள், காலங்காலமாக பெண்கள் மீதான சமூக எதிர்பார்ப்புகளை சல்லிசல்லியாக உடைத்தெறிகிறாள். சமகால தலித் நடுத்தர வர்க்கத்தின் படித்து, சுயமாக சிந்தித்து செயல்படும் பெண்களை பிரதிபலிப்பவளாகவே அஞ்சலி இருக்கிறாள்.

சாதியால் தன்னை புறக்கணிக்கும் ஆனந்தின் தந்தையிடம் அரசியல் சாசன உரிமைகளை சுட்டிக்காட்டி, தன்னை பணி செய்யவிடாமல் தடுத்தால் சட்ட நடவடிக்கை பாயும் என்று அஞ்சலி உரக்கச் சொல்வது கம்பீரத்தின் உச்சம்.

இன்றளவும் ஐபிஎஸ் அதிகாரியானாலும்கூட சாதிய ஒடுக்குமுறைகளை சந்திக்க நேர்பவர்கள் சிலர் எப்படி அதை உடைத்தெறிகிறார்களோ, அதை அஞ்சலி திரையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

வாய்ப்புகள்தான் வாழ்க்கையில் திருப்புமுனைகளை ஏற்படுத்தும். அஞ்சலிக்கு ஆனந்த் ஸ்வர்ணகர் வழக்குதான் திருப்புமுனை. வழக்கின் முடிச்சுகளை உடைக்கும்போது அஞ்சலி தன்னை அழுத்திக் கொண்டிருந்த பாலின, சாதிய அடையாளங்களையும் சேர்த்துதான் உடைக்கிறாள். அதனால்தான் கடைசியில் மேக்வால் என்ற தனது பின்னொட்டுப் பெயரையே திரும்ப வேண்டிப் பெறுகிறாள்.

‘சாதி ஒழிப்பு என்பது சாதிப் பெயர்களை துறப்பதில் அல்ல... அந்தப் பெயர் இருந்தாலும்கூட சமூகத்தில் தனக்கான சமத்துவமும் அந்தஸ்தும் இம்மியளவும் குறையாமல் இருப்பதை உறுதி செய்வதில்தான் மிகுதியாக இருக்கிறது’ என்பதை தனது ‘செய்கை’யால் பறைசாற்றுவாள் அஞ்சலி!

| தேவதைகள் இன்னும் வலம் வருவர்... |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

SCROLL FOR NEXT