“Once we give up searching for approval we often find it easier to earn respect.” - Gloria Steinem
“மற்றவர்களின் அங்கீகாரத்தைத் தேடுவதை நாம் எப்போது நிறுத்துகிறோமோ, அப்போது அவர்களின் மரியாதையைப் பெறுவது நமக்கு எளிதாகிவிடும்” - செப்.2, 2026-ல் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பிரபல பெண்ணிய செயற்பாட்டாளர் குளோரியா ஸ்டீனெம் கூறிய ஆழமான கருத்து இது.
பெண் கல்வியும், அதன் மூலம் பெண்களுக்குக் கிடைக்கும் பொருளாதாரச் சுதந்திரமும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வருகிறது. ஆனால் ஓர் ஆணைப் போலவே அவளால் சுதந்திரமாக வாழ முடிகிறதா என்றால்... முழுவீச்சில் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும்.
“தனக்குப் பிடித்த மாதிரி ஒரு பெண் வாழ நினைத்தால், முதலில் அவள் இந்தச் சமூகத்தின் வேடிக்கைப் பொருளாவாள். அதை எதிர்த்துப் போராட அவளுக்கான உத்வேகம் வெளியில் இருந்து அல்ல, அவளுடைய பெண் சமூகத்தில் இருந்தேதான் வர வேண்டும். இங்குதான் பெண்களுக்கிடையேயான ஒற்றுமை அவசியமாகிறது.”
அப்படி, தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழத் தயங்கிய ஒரு மத்திம வயது பெண்ணுக்கும், அவளுக்கு உற்ற தோழியாக இருந்து முன்னேறிச் செல்ல உதவும் மகள் வயதொத்த பெண்ணுக்கும் இடையேயான பிணைப்பு, உணர்வுகள் பற்றியும், உறவுச் சிக்கல்கள் பற்றியும் பேசும் படம்தான் 2023-ல் வெளியான ‘சாந்த்லோ’ (Chandlo) குஜராத்தி திரைப்படம். ரொமான்டிக் டிராமா ஜானரிலான இந்தப் படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம்.
காஜல் ஓஸா வைத்யா என்ற குஜராத்தின் பிரபல எழுத்தாளரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான் ‘சாந்த்லோ’ (Chandlo) திரைப்படம். இப்படத்தை ஹர்திக் கஜ்ஜார் இயக்கியுள்ளார். படத்தின் பிரதான கதாபாத்திரமான மீராவாக நடித்திருக்கிறார் எழுத்தாளர் காஜல் ஓஸா வைத்யா. அவருடன் ஆஸ்தாவாக ஷ்ரதா டாங்கர், ஷரண் ஆக மனவ் கோஹில், தபஸ் ஆக ஜெயேஷ் மோர் நடித்துள்ளனர். இவர்களைச் சுற்றித்தான் படம் நகர்கிறது.
“உன் கண்களில் சமுத்திரத்தைப் போல் கண்ணீர் நிறைந்திருக்கிறது. என் கண்கள் வறண்டு போயிருக்கின்றன. நம் இருவருக்கும் இருப்பதுமே தாகம் தான். ஆனால் இந்தச் சமூகம் மற்றவர்களின் மகிழ்ச்சியை மட்டுமேதான் காண்கிறது!”
- இப்படி கவித்துவமான வேதனை விவரிப்போடுதான் படம் தொடங்குகிறது. அப்போது காட்சியில் மீராவும், ஆஸ்தாவும் கண்ணாடி முன் இருக்கிறார்கள்.
உண்மையில் வெளியில் தெரியும் மனிதர்களின் உதட்டுப் புன்னகையை மட்டும்தான் இந்தச் சமூகம் காண்கிறது. சிலர் அழுது கொண்டிருக்கும் உள்ளத்தை மென் சோகமாகக் கூட முகத்தில் படரவிடுவதில்லை. இதில் ஆண், பெண் பேதமில்லை. இயல்பிலேயே அழுத்தமானவர்கள் அவர்கள்.
அப்படியானவர்களின் பளிச் உடை, துள்ளல் நடை, உற்சாக வார்த்தைகளின் பின்னால் பல துயரங்கள் இருக்கலாம். அதைக் கண்டு கொள்ளவும், புரிந்து களிம்பு போடவும், துயரத்தைக் கடக்க உதவுபவர்களும் தான் உண்மையான உறவாளர்கள்.
மீரா, ஆஸ்தா இருவருமே வெளியே பார்ப்பவர்களுக்கு மாடர்ன் வேர்ல்டு பெண்கள். ஆனால் இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்டு தன் மகனை தனியாக ஆளாக்கி, இனி எல்லாம் சுபம் என நினைத்தபோது அவனையும் இழந்தவள் மீரா. கல்லூரிக் காதலனை கணவனாக அடைந்துவிட்டதால் இனி எல்லாம் சுகம் என நினைத்தபோது அவனை இழந்த இளம் விதவையானவள் ஆஸ்தா.
பெண்ணை பெண்ணுக்கு எதிராக நிறுத்துவதில் ஆணாதிக்கத்துக்கு சுனாமிபோல் வலிமை உண்டு. அப்படி ஆணாதிக்கம் உருட்டி, திரட்டியதுதான் மாமியார் போஸ்டிங். இன்னமும் கூட தமிழ் சீரியல் வில்லிகளாக மாமியார்கள் இருக்கின்றனர்.
ஆனால், மீரா - ஆஸ்தா இடையேயான உறவு, ஆணாதிக்கத்தில் இருந்து தப்பிப் பிழைத்த மாமியார் - மருமகள் உறவு. ஒட்டுமொத்த குடியிருப்பு வாசிகளும் அவர்களைத் தாய், மகள் என்றுதான் நினைப்பார்கள். உண்மையில் அவர்கள் அதையும் தாண்டி. வீட்டினுள் இருவரும் நல்ல தோழிகள். நல்ல நட்புக்கு வயது தடையல்ல என்பதைப்போல்.
மீராவுக்கு இழப்புகள் புதிதல்ல என்பதால் மகனை இழந்த சோகத்தை மனதில் ஓரமாக வைத்துவிட்டு, புன்னகை மாஸ்க் அணிதல் இயல்பாகிப் போனதால், வாழ்க்கையை நகர்த்துகிறாள். ஆனால் ஆஸ்தாவுக்கு இழப்பு புதியது, பெரியது. ஆஸ்தாவின் மகிழ்ச்சியில்தான் தன் மகிழ்ச்சி இருக்கிறது என்று நம்புகிறாள் மீரா.
இந்தியச் சமூகத்தில் பெண்கள் மகள், சகோதரி, மனைவி, தாய், மாமியார் என்ற ரோல்களில் தன் சுயத்தை பெரிதும் தொலைத்து விடுகிறார்கள். ஒரு ரொட்டீன் சுழற்சிக்குள் இருப்பதே இயல்பானது. அதுவே சரியானது என்று நம்பவைக்கப்பட்டதால், அதிலிருந்து இம்மி விலகாமல் இருப்பவர்களாகவே பெரும்பாலானோர் இருக்கின்றனர். சிலர் தேவைப்படும் இடங்களில் தளர்வுகளை அனுமதிக்கின்றனர்.
மீரா அப்படிப்பட்டவள் தான். ஆடைச் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம், ரசனை சுதந்திரம் என்று எல்லாமே அவளுக்கு அவளே கொடுத்துக் கொண்டாலும், தன் கணவன் மறைவுக்குப் பின் மகனை வளர்த்தல், மகன் மறைவுக்குப் பின் மருமகளை தேற்றுதலில் தான் மொத்த வாழ்க்கையும் இருக்கிறது என்பதுபோல் சுயவேலி போட்டுக் கொண்டவள்.
கணவனை இழந்த பெண்கள் மீது பொறுப்புணர்வு என்ற பெயரில் குற்றவுணர்வை தூண்டிவிட்டு அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தியாகத்தில் மூழ்கடித்து குதூகலிக்கும் ஆணாதிக்க சமூகம். அதற்கு மீரா போன்றவர்களே சில நேரம் தீனியாகிவிடுவது சோகம்!
எனக்கு இன்னொரு ஆண் துணை வேண்டாம் என்ற முடிவை ஒரு பெண் சுயமாக முடிவெடுத்து சுதந்திரமாக இருப்பதும், என்னை நம்பி என் குழந்தை இருக்கிறது, என்னைச் சார்ந்து அந்த உறவு இருக்கிறது என்பதற்காக தனிமையை சுமப்பதும் வெவ்வேறு.
கல்லூரி பேராசிரியான மீராவுக்கு கவிதை பிடிக்கும். அவள் பேனாவில் கவிதைகள் கொட்டும். கசல் (Ghazal) இசையும் பிடிக்கும். அவளுக்குப் பிடித்த கசல் இசைக் கலைஞருக்கு தன் கவிதைகளையெல்லாம் அனுப்பியிருப்பாள். அந்தக் கவிதையை அந்தக் கலைஞரும் பாட்டாகப் பாடி அது பிரபலமாகியிருக்கும். ஆனால், அனுப்பிய கவிதைகளில் தன் அடையாளத்தை வெளிப்படுத்தியிருக்க மாட்டாள்.
மற்றவர்களின் அங்கீகாரத்தைத் தேடுவது பெண்ணை அடிமையாக்கும் என்றால், குடும்பத்துக்காக தன் சுயத்தை தானே அங்கீகரிக்க மறுப்பதும் அடிமைத்தனமே.
இந்த உலகில் நமக்கு யார் எதிரியாக இருந்தாலும் நாம் மீண்டுவிடலாம்... எதிரி நாமாக இருக்காதவரை!
குடும்ப உறவை காக்கும் மாமியாராக, நல்ல மனிதியாக, தோழியாக ஆஸ்தா மீது மீரா காட்டும் அக்கறை எல்லாமே பின்பற்றப்பட வேண்டியதுதான். ஆனால், அதிலேயே அவளது சுயத்தை மீரா அடகுவைத்ததுதான் மாற்றப்பட வேண்டியது.
ஒரு பெண் தன்னை முன்னிறுத்துவதை இந்த உலகம் சுயநலம் என்று சொல்லலாம், ஆனால் தன் சொந்த மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு பெண்ணும் புரிந்துகொள்வது அவசியம்.
அந்தப் புரிதல் இல்லாமல் இருந்த மீராவின் வாழ்வின் ஷரண் வருகிறான். அவளுக்குப் பிடித்த கசல் இசைக் கலைஞனான ஷரண், மீராவின் வீட்டின் மேலேயே குடி வருகிறான். அவள் வீட்டு சமையல் மேடையில் பாந்தமாக அமர்ந்து கொண்டு அவள் சமையல் பக்குவத்தை ரசித்துப் பேசுகிறான். ஆஸ்தாவை மீராவின் மகள் என்று எண்ணிக் கொண்டு, “செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறீர்கள்” என்று உரிமை கொண்டாடுகிறான். மீராவின் டைரியில் இருக்கும் கவிதையைப் பார்த்து, “இந்தக் கவிதையை எனக்கு அனுப்பிய பெண்ணை நான் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்கிறான்.
அது பெண் என்று எப்படி முடிவு செய்தீர்கள் என்பதை அத்தனை வாஞ்சையோடு விசாரிக்கும் மீரா, அதை நான் தான் அனுப்பினேன் என்று சொல்ல மறுக்கிறாள். காரணம் அதன் மூலம் ஷரணை மேலும் நெருங்கினால், அது நட்பாகவே இருந்தாலும் கூட ஆஸ்தா என்ன நினைப்பாள் என்பது தான்.
மீரா சுதந்திரமான பெண் தான் என்றாலும், குடும்பம் அவளுக்கு எல்லைக் கோடு. ஒரு புதிய நட்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூட அதுதான் அவளுக்கு எல்லை.
மீரா - ஷரண் நட்பும், ஆரம்பத்தில் ஷரணுடனான மோதல் பின்னாளில் ஆஸ்தாவுக்கு காதலாக மாறுவதும், அதை ஷரண் கையாளும் விதமும் உறவை மன முதிர்ச்சியுடன் அணுகுவதற்கான டிப்ஸ்.
உறவுகள் வலுவாக மனப் பக்குவம் மிகவும் முக்கியம். சிலர் அதை பட்டும்படாமல் இருத்தல் என்று புரிந்து கொள்கிறார்கள். ஒருவரை நேசிப்பதற்கும், ஒருவரின் உறவு நமக்கு இருக்கிறது என்ற உணர்வை நேசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவது பக்குவப்பட்ட காதல். இரண்டாவது கம்பேனியன்ஷிப்.
சாந்த்லோ-வில் வரும் ஷரண் மற்றும் தபஸ் என்ற ஆண் கதாபாத்திரங்களும் என்னை சம அளவில் ஈர்த்தன. பெண்களின் உணர்வுகளை, நகர்வுகளை தராசில் வைக்கும், விமர்சிக்கும் ஆண்களுக்கு மத்தியில் அவர்கள் இருவரும் ஆச்சரியப்பட வைத்தனர். ஜீரோ ஈகோ ஆண்கள், இமோஷனலி அவைலபிள் ஆண்கள் ஷரண், தபஸ் போல் இல்லாத ஏலியன்கள், இருந்தாலும் அரிதானவர்கள் போல!
கஜல் பாடல் தனிச்சிறப்பானது. அதில் ஒவ்வொரு இரண்டு வரியும் ஒரு சிறிய தனிப்பாடல் போன்றது. ஷரண் - மீரா நட்பு, ஷரண் - ஆஸ்தா நட்பு கஜல் பாடல் வரிகள் போன்றதே. தனித்தனி கதைகள். ஆனால் ஒரே புத்தகத்தினுள்ளேயே இருக்கக் கூடியவை.
படத்தில் வரும் ‘சாயிபா’ கஜல் பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
எதிலும் ஈடுபாடில்லாத ஆஸ்தா, ஷரண் மீது காதல் கொள்வதும், ஆஸ்தாவின் மனமாற்றத்தில் மீரா மகிழ்ச்சி கொள்வதும் திரையில் காணும் போது அத்தனை கவித்துவமாக இருந்தது.
ஆஸ்தாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என ஷரணிடம் மீரா கேட்கும்போது, நான் உன்னைத்தான் காதலிக்கிறேன் மீரா என்று ஷரண் சொல்வதும். மீராவின் தவிப்புகள் தொடங்குவதும் முகம் சுளிக்கவைக்காமல் படமாக்கப்பட்ட விதம் பாராட்டத்தக்கது.
ஒரு காதல் உருவாக இளம் வயது தான் முதல் காரணி என்பது எத்தனை பிற்போக்குத்தனம் என்பதை மீராவிடம் தன் காதலை ஷரண் சொல்லும்போது புரிந்துகொள்ள முடியும்.
திருமண முறிவுக்குப் பின்னர் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் இரண்டாம் காதல் வாய்ப்புகளை, ஒரு கைம்பெண்ணின் காதல், காமத்தை அங்கீகரிக்கும் திரைப்படங்கள் எல்லாம் இந்தியாவில் வரிசைகட்டத் தொடங்கிவிட்ட நிலையில், ஒரு கைம்பெண்ணின் ஏஜ் - கேப் ரிலேஷன்ஷிப் பற்றிய ‘சாந்த்லோ’, குஜராத் மண்ணில் படமாக்கப்பட்டது ஒரு புரட்சி தான்.
வயதான ஹீரோக்கள் 20+ கதாநாயகிகளையே ஹீரோயின்களாக ஏற்று நடிக்கும் போக்கு மாறாத இந்திய சினிமாவில் 50+ வயதில் உள்ள எழுத்தாளர் இளம் நடிகருடன் நடித்திருகிறார். அவர்களுக்குள்ளான காதலை, அவர்களின் திருமணத்தை படம் பேசுகிறது என்பது மே - டிசம்பர் உறவைச் சுற்றிய தயக்கங்களை, தடைகளைக் கலைய நல்லதொரு திரை முயற்சி.
ஷரணை வேண்டாம் எனக் கூற அழகு, வயது, ஆஸ்தா, சமூகம் என்று பல தயக்கங்களை மீரா வெளிப்படுத்தும் போது, “நீ என் வாழ்வின் முதல் பெண் அல்ல. எனக்கு இதற்கு முன்பும் சில உறவுகள் இருந்து கசந்து பிரிந்து போயுள்ளன. நான் நேசிப்பது மீராவின் புறத்தோற்றம் அல்ல. மீராவின் கவிதைகளை, மீராவின் இசையை. நீ எழுதும் வரை நம் காதல் வாழும்” என்பான்.
அதை ஏற்க மீராவுக்கு இருந்த தயக்கத்தை உடைக்க ஆஸ்தாவும், ஷரணும் கூட்டு சேர்வார்கள். அப்போது, “பல ஆண்டுகளாக கூண்டுக்குள் அடைபட்ட ஒரு பறவைக்கு கூண்டுக்கதவைத் திறப்பது மட்டுமே பறப்பதற்கு போதுமானதாக இருக்காது” என்று ஷரணிடம் ஆஸ்தா சொல்பாள்.
அடுத்த சில காட்சிகளில் திருமணக் கோலத்தில் மேடைக்கு வரும் மாமியார் மீராவின் நெற்றியில் திலகம் வைப்பாள் மருமகள் ஆஸ்தா. முதல் காட்சியில் தீபாவளி கொண்டாட்டத்துக்கு கிளம்பும்போது மருமகள் நெற்றியில் மீரா திலகமிட்டு ‘பெர்ஃபெக்ட்’ என்று சொன்னது அந்த இறுதிக் காட்சியில் எனக்கு நினைவுக்கு வந்தது.
ஒரு பெண்ணின் உணர்வுகளை ஆண்கள் புரிந்து கொள்வதும், மதிப்பதும், ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் நிற்பதுமாக அணிவகுத்து மனிதர்கள் மனிதர்களாகவே இருப்பதை ‘சாந்த்லோ’ படத்தில் பார்க்கையில் உடோப்பியாவில் இருப்பது போல் இருந்தது. தன்னை முன்னிலை படுத்தவும், சிறகை விரிக்கவும் மீராக்கள் தயங்காமல் இருக்கட்டும்.
| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in