“There is no force equal to a woman determined to rise." - W.E.B.Du Bois
“விழுந்தபின் எழ முடிவெடுத்த பெண்ணின் உறுதியை விட வலிமையானது வேறொன்றுமில்லை.” - அமெரிக்க சிவில் உரிமைகள் போராளி வில்லியம் எட்வர்ட் புகார்ட் டுபோயின் மிகப் பிரபலமான மேற்கோள் இது. வலிகளில் இருந்து மீண்டெழுந்த ஒரு பெண்ணின் வலிமையை இதைவிட சிறப்பாக வர்ணித்துவிட முடியாது.
மீண்டெழுந்த ஒரு பெண்ணின் முதல் அறிகுறி அவளது உடல்மொழி. நிமிர்ந்து நடக்கும், நேர்கொண்டு பார்க்கும் அவளை ‘திமிர் பிடித்தவள்’ என்று இந்தச் சமூகம் எப்போது விமர்சிக்கிறதோ, அப்போதே அவள் எழுந்துவிட்டது உறுதியாகிவிடுகிறது.
இந்தச் சமூகத்தில், சூழ்ச்சியால் வேலையிழக்கும், ஏதோ காரணத்தால் துணையை இழக்கும், பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் பெண்கள் அதில் தேங்கிவிடுவதில்லை. இக்கட்டுக் காலங்களில் சிகரெட்டையும், குடியையும் துணைக்குக் கூப்பிட்டுக் கொண்டு சுய பச்சாதாபத்தில் சொறிந்து கொடுத்து புலம்புவதும் இல்லை. நிச்சயம் இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.
பெரும்பான்மையாகப் பார்த்தால், இடர்களில் சிக்கும் பெண்களுக்கு வேட்டை விலங்கைப் போல் குணமிருக்கிறது. அவர்கள் இலக்கை நோக்கி ஓட்டமெடுப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களை எளிதில் எதுவும் தடுப்பதில்லை. சில நேரம் மீண்டும் விழுவார்கள். ஆனாலும் மூழ்கிவிடமாட்டார்கள். ஏனென்றால், அவர்களின் உறுதியைவிட வலிமையானது வேறொன்றுமில்லையே!
அப்படி ஒரு தாய் கொண்ட உறுதி, அதன் அதீதத்தில் என்னவாகிறது என்பதுதான் ‘Balan: The Boy’ மலையாளப் படத்தின் ஒன்லைன். இணைய உலகில் ஒரு பகுதியினர் அவளை ‘ஓவர் புரொடெக்டிவ் மதர்’, (Over Protective Mother), ‘ஹைபர் இண்டிபென்டன்ட் வுமன்’ (Hyper Independent Woman) என்றெல்லாம் வகைப்படுத்தி வசைபாடிக் கொண்டிருக்கிறது.
தமிழில் ‘சந்தோஷ் சுப்ரமணியன்’ என்றொரு படம் வந்தது. அதில் வரும் ஹா.. ஹா.. ஹாசினியை விடுங்க. அந்தப் படத்தில் நாயகனின் தகப்பனாக வரும் பிரகாஷ் ராஜை, குறைபாடுகள் கொண்ட தந்தை (Flawed Father) என்று யாரும் பெரிதாக வகைப்படுத்தவில்லை. இன்றும் ஹாசினி மட்டும்தான் மீம் கன்டென்ட்.
ஆனால், பாலனின் தாயைப் பழிக்க கூட்டம் வரிசைகட்டிக் கொண்டிருக்கிறது. அவளின் முடிவுகள், தெரிவுகள், மகனுக்கான பரிந்துரைகள் தவறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் சமூகமும், சமூகத்தின் சிஸ்டம்களும் மட்டும் என்ன ‘திருவாளர் பரிசுத்தங்களா?’. இந்த இணையப் போராளிகள் எல்லோரும், பாலனின் தாயிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இந்தச் சமூகத்திடமும் தானே கேட்க வேண்டும்!
யாரேனும் கேட்பார்கள் என்று காத்திராமல், நான் கேட்பேன். பாலனின் அம்மாவின் கவனிக்கப்பட வேண்டிய முகத்தை சுட்டிக்காட்டி, இந்தச் சமூகத்தை கேள்வி கேட்பேன். மீண்டெழுந்த ஒரு பெண்ணாக, அதைச் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஜித்து மாதவன் எழுதி சிதம்பரம் இயக்கிய Balan: The Boy படத்தை ஜீ 5 ஓடிடி தளத்தில் நீங்கள் காணலாம். சைக்காலஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படத்தின் இயக்குநர்தான் 2024-ல் வெளியான ‘Manjummel Boys’ படத்தை இயக்கியவர்.
‘இந்த உலகம் அத்தனை மோசமானது அல்ல’ - ‘Manjummel Boys’ படத்தைப் பார்த்தபோது, நண்பனுக்காக தன் உயிரை துச்சமென நினைத்து குகைக்குள் இறங்கி மீட்பராய் சுபாஷுடன் வெளிவந்த குட்டன், அப்படியொரு நம்பிக்கையை எனக்குள் கடத்தினார். ஒரு சர்வைவல் த்ரில்லர் படம்தான். ஆனால், இனியும் பிழைத்துக் கிடக்க முடியாது என்று நம்பிக்கை வறட்சியின் விளிம்பில் நாம் நிற்கும்போது எங்கிருந்தாவது மீட்பர்கள் வரத்தான் செய்வார்கள் என்ற பேரொளியை அது பரப்பியது.
‘இந்த உலகம் அத்தனை கருணையானது அல்ல’ - ‘Balan: The Boy’ படத்தைப் பார்த்த பின்னால், எனக்குள் அப்படியொரு பயம் கவ்வியது. அடிப்படையில் ஒரு தாயின் சர்வைவல் போராட்டம் பற்றியதுதான் படம். வஞ்சிக்கப்பட்ட ஒருத்தியின் யோசனை பயமாக, கோபமாக, வெறியாக மாறி அவளை கொலைகாரியாக்கி சிறையிலும் தள்ள, சிறைவாசத்துக்குப் பின் அவளை இந்தச் சமூகம் அணுகும் விதமும், சமூகத்தை அவள் அணுகும் விதமும் இந்த உலகம் எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும் கருணை காட்டுவதில்லை என்ற நிதர்சனத்தை அச்சத்துடன் கடத்தியது.
நல்ல மேக்கிங் கொண்ட் சைக்காலஜிக்கல் த்ரில்லர், சர்வைவல் த்ரில்லர் படங்களை ஆழ்ந்து பார்க்கும்போது ஏற்படும் இந்தத் தாக்கங்கள் இயல்பானதுதான். அதையும் இரண்டு எக்ஸ்ட்ரீம்களையும் ஒரே அளவிலான தாக்கத்தைக் கொடுக்க வைக்கும் படைப்பாக கொடுத்த இயக்குநர் சிதம்பரம் பாராட்டுக்குரியவர். அதனினும் அதிகப் பாராட்டுக்குரியவர் பாலனின் தாயாக நடித்த ஃபர்ஸானா பலதிங்கல்.
இனி Balan: The Boy-க்குள் முழுமையாக மூழ்குவோம். பெண்கள் சிறைக்குள், கதைக்குள் கதையுடன் தொடங்குகிறது படம்.
இந்திய சிறைச் சட்டங்களின்படி, பராமரிக்க ஆள் இல்லாத குழந்தையை, தாய் அக்குழந்தையின் 6-வது வயது வரை தன்னுடன் வைத்துக் கொள்ளலாம். அதனால் பாலனுக்கு 6 வயது அல்லது அதற்குள் தான் இருக்கும் என்று நாம் தீர்மானித்துக் கொள்ளலாம். சிறைச் சுவர்கள் அவனது உரையாடல்களை உள்வாங்கிக் கொள்ளும் இன்னொரு உயிர். பாலனின் கிரேயான்கள் அதற்கு அந்த சக்தியைக் கொடுத்திருக்கும். பாலனைப் போன்ற சிறைவாசப் பிஞ்சுகளை நினைத்தால் மனம் பதறுகிறது.
அறிமுகக் காட்சியே சிறைகள் எல்லோரையும் திருத்தும் இடமாக மட்டுமே இருப்பதில்லை என்பதை பாலியல் ப்ரோக்கர் சமந்தா மூலம் நிறுவும். அதனால் தான் சிறைக்குள் இருக்கும் ஓட்டைகளைக் கலையாது, அறிவுரைகளையும், என்ஜிஓ அட்ரஸையும் தரும் காவல் அதிகாரியை பெரிதாக மதிக்க மாட்டாள் பாலனின் தாய். அதனாலேயே, வெளியில் வந்ததுமே சமந்தா, காவல் அதிகாரி கொடுத்த இரண்டு தொடர்பு எண்களும் குப்பைத் தொட்டிக்கு போய்விடும். அவள் கண்ணசைவுக்கு இயங்குபவன்தான் பாலன் என்பதும் புரிந்துவிடும்.
ஒரு மெல்லிய துள்ளலிசையுடன் இருவரின் தத்துபித்து நடைகளுடன் நாமும் நடைபோட ஆரம்பிப்போம்.
இழப்புகளில் இருந்து மீண்டெழும் முயற்சிகளில் இருப்போருக்கு, அவர்கள் கண்ட காயம் தந்த வடுக்கள் நம்பிக்கை பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்பது உளவியல் உண்மை. அதுவும் பெண்ணாக இருந்தால் அது சற்று அதிகமாகவே இருக்கும்.
அப்படியான சூழல்களில், அவளுக்கான முடிவை அவளே தான் எடுத்தாக வேண்டும் என்பதைவிட எந்தத் தலையீடும் இல்லாமல் அவளே தான் எடுக்க விரும்புவாள்.
பாலனை கூட்டிக் கொண்டு பேருந்தில் ஏறும் அவன் அம்மாவுக்கு எங்கு போகப்போகிறோம் என்ற இலக்கில்லை என்றாலும், எங்கு இறங்க வேண்டும் என்று தீர்மானித்து ஓரிடத்தில் இறங்குவாள். தனக்கான வேலையிடத்தையும் அவளே தீர்மானித்து அணுகுவாள். எந்தத் தலையீடும் இல்லாமல் இருந்திருந்தால் அந்த இடத்திலேயே அவள் இருந்திருப்பாள்.
நடைமுறையில் நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சின்ன நிகழ்வை உதாரணமாகக் குறிப்பிட விரும்புகிறேன். நாம் அடிக்கடிச் செல்லும் நமக்குப் பரிச்சியமாக கடையாக இருக்கலாம். அங்கே புதிதாக ஒரு ஆண் வேலைக்கு சேர்ந்திருந்தால் விசாரணைகள் இருக்காது. ஆனால், புதிதாக ஒரு பெண் இருந்தால் குறுகுறு பார்வைகளும், விசாரணைகளும் கல்லாவைவிட களைகட்டும். அப்படியான விசாரணைகளும், கடைக்காரரின் கரிசனமும்தான் பாலனையும், அவன் தாயையும் சிறைவாசத்துக்குப் பின் அவர்கள் தேர்ந்தெடுத்த சகஜமாக வாழ்தலுக்கான முதல் முயற்சியிலிருந்து விரட்டும்.
ஆனாலும் சில சிங்கிள் உமன்கள் தற்காப்புக்காக சகோதரத்துவம் பாராட்டுவது உண்டு. அங்கே அவளை நோக்கி வரும் உறவுச் சொற்கள் எல்லாம் உள்ளத்தில் இருந்து வருவதில்லை என்பதே உண்மை.
“இந்து, நீ என் மகளாக, அவன் என் பேரனாக இங்கேயே இருக்கலாம்” என்ற வார்த்தைகள் அவளுக்குச் சுமையாகிறது.
சமரசங்கள், சமாளிப்புகளடன் கூடிய ஒரு கம்ஃபர்ட் ஜோனைவிட கரடுமுரடான சுதந்திரப் பாதைதான் பாலனின் தாயைப் பொறுத்தவரை பாதுகாப்பானதாக இருக்கிறது. அதனால் தான் அவள் அடுத்தடுத்த கதைகளை எழுதுகிறாள்.
பாலனின் தாய் இந்து, மேரி லூக்காவாக, ஃபர்ஸானாவாக, ஷெர்லியாக மாறுகிறாள். பாலனோ அபிஜித் குமார், ஆதிசேஷன், பென்னி, மனு, வாசுதேவ் என மாறுகிறான்.
துணையை இழந்த ஆணை இந்தச் சமூகம் எப்போதுமே எந்தக் கேள்வியுமே கேட்பதில்லை. அதுபோல் துணையை இழந்த பெண்ணை கண்காணிக்கத் தவறுவதும் இல்லை. இந்து என தான் அறிந்தவளை இன்னொரு இடத்தில் மேரி என்று அறியும்போது சரக்கு வாகன ஓட்டுநர் அத்தனை விசாரணை செய்கிறான். போதாது என்று குழந்தையிடமும் குறுக்கு விசாரணை.
தாய் தன் நெருக்கடிகளை சமாளிக்கச் சொல்லும் பொய்களை அவள் கற்றுக் கொடுக்காமலேயே கற்றுத் தேர்ந்தவனாக இருக்கிறான் பாலன். சர்வைவல் பாடங்கள் யாரும் யாருக்கும் கற்றுத்தரத் தேவையில்லை. தாய் ஒன்றை ஒதுக்கினால் தனக்கும் அது பாதுகாப்பானது அல்ல என்பதே அவனுக்குக் கிடைத்த புரிதல்.
சுயச் சம்பாத்தியத்தில் சுதந்திர வாழ்வில் பயணிக்கும் தனித்து வாழும் பெண்கள் கூட சமூகத்தின் சில பல குதர்க்கக் கேள்விகளுக்கு பதிலாகச் சொல்ல ரெடிமேட் பொய்களை தயாராக வைத்திருப்பது இன்னமும் தேவைப்படுகிறது.
பாலனின் தாயை விசாரணைகள், குறுக்கு விசாரணைகள் செய்யாமல் இருந்திருந்தால் அவள் அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருப்பாள். பாலன் பென்னியாகவே வளர்ந்திருப்பான்.
அத்துடன் எதுவும் நிற்கவில்லை. ஃபர்ஸானாவாக சென்ற இடத்தில், ‘உனக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறேன்’ என்றும், ‘உன்னை நான் கட்டிக் கொள்கிறேன்’ என்றும் கூடுதல் ஆஃப்ராக ‘அவனை என் மகன் போல் பார்த்துக் கொள்கிறேன்’ என்று போலி அக்கறைகளை, வெற்று வாக்குறுதிகளை எவளும், எவனும் கொடுக்காமல் இருந்திருந்தால் அவள் மெழுகுவர்த்தி தயாரிக்கும் இடத்திலும், மீன் பதப்படுத்தும் ஆலையிலும், ரப்பர் ஃபேக்டரியிலும் வேலையில் இருந்திருப்பாள்.
திருமணம் என்ற உறவு தேவையில்லை என்ற பெண்ணை இந்தச் சமூகம் ஏன் மீண்டும் அதற்குள் தள்ள அத்தனை மெனக்கிடுகிறது?!
ரிஸ்க் உடைய குடும்ப கட்டமைப்பை விட உனக்கு நீ, எனக்கு நான் போதும் என்பதே பாலனின் தாயின் சாய்ஸ். அதிலென்ன அத்தனை விமர்சனம் சமூகத்துக்கு.
“என் தங்கை கல்யாணியை வாழவிட்டார்களா?” என்பதுபோல் சமூகம் துரத்த போலி ஆவணங்களை தயாரிக்கும் நிர்பந்தத்துக்கு தள்ளப்படுகிறாள்.
அவள் நேர்வழியில் உழைப்பைச் செலுத்தத் தயாராகவே இருந்தாள். அவளுக்குத் தேவை தன்னை யாரும் உறவு கொண்டாடக் கூடாது என்பது மட்டுமே. குடும்பம் என்ற அமைப்பும், பாலியல் தொழில் கூடாரமும் அவளுக்கு ஒரே மாதிரியான இருளாகத் தெரிகிறது. அதனால் தான் இரண்டிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்வது அவளுக்கு முதன்மையாக இருந்தது. அதிலென்ன குற்றம் காண்கிறார்கள் கேள்வி கேட்பவர்கள்.
ஒருவழியாக, அவள் விரும்பியபடியான தன்னை ஜட்ஜ் செய்யாத, தன்னை உறவு கொண்டாட நினைக்காத, தன்னை கட்டுப்படுத்தாத இடத்தில் ஷெர்லியாக அவள் இளைப்பாறுகிறாள். வசுதேவ் ஆகி பள்ளி செல்கிறான் பாலன்.
ஷெர்லி போன்ற இளம்பெண்ணாக இருந்தாலும், அவளின் பராமரிப்பில் இருக்கும் பாட்டியாக இருந்தாலும் சமூக தொந்தரவுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள பெண்களுக்கு ஒரு கடுமை தேவைப்படுகிறது. பாட்டிக்கு ஒரு துப்பாக்கி தேவைப்பட்டது.
‘இனி நீ பள்ளிக் கதைகளை மட்டும் படித்தாள் போதும்’ என்கிறாள். இந்த உலகம் எப்போதும் எல்லோருக்கும் கருணையாக இருப்பதில்லை என்றொரு சம்பவம் பாலனின் தாய்க்கு நடக்கிறது.
பாலன் தன் தாய் வரவில்லை என்றதும் நோட்டு புத்தகப் பையையும், சீருடையையும் வீசிவிட்டு உள்ளாடையுடன் நிற்பது, ’நாம் யார் என்பது நமக்கு மட்டுமே தெரிந்தால் போதும்’ என்ற அவன் தாய் சொல்லிக் கொடுத்த அவலம் தான்.
அதன் பின்னர் பாலனும், தாயும் பிரிவது, பாலன் டோவினோவிடம் செல்வது, மீண்டும் தாயைக் காணத் திரும்புவது. காவல் அதிகாரி பவித்ரனின் கோர முகம் எல்லாமே இந்தச் சமூகம் பாலன்களுக்கும், அவனது தாய்களுக்கும் விடுக்கும் சவால்கள் தான்.
நீ யார்... நீ ஏன் தனியாக இருக்கிறாய்... இவன் அப்பா எங்கே... உன்னை நான் கட்டிக் கொள்கிறேன்... என்னுடன் பீர் சாப்பிட வருகிறாயா? என்ற அதீத தலையீடுகளை இந்தச் சமூகம் பெண்கள் மீது மட்டும் செலுத்துகிறது.
அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால் பாலனின் தாய், மனிதர்கள் மீதான சந்தேகங்களை விடுத்து சகஜமாக வாழ்ந்திருப்பாள்.
பாலன் ‘நம்முடைய அடுத்தக் கதை என்னம்மா?’ என்று கேட்டிருக்க மாட்டான். அவளும் அவனுக்கு இன்னொரு பெயர் சூட்டு விழாவை காதில் நடத்தியிருக்க மாட்டாள்.
‘Balan: The Boy’ படத்தை ‘திரை தேவதைகள்’ தொடருக்காக தேர்வு செய்வதற்கான யோசனைகள் நீண்டபோது 2025-ல் வெளியான ‘Eko’ (எக்கோ) திரைப்படம் நினைவுக்கு வந்தது. குரியச்சனின் வஞ்சனையில் விழுந்த மிலாத்தி சேட்டத்தி அதே வஞ்சனையில் அவனை சிக்க வைப்பாள். மலைகளின் எதிர் முழக்கம் போல் அமைந்திருக்கும் சேட்டத்தியின் எதிர்வினை.
சோய், மலாத்தி, மிலாத்தி, சேட்டத்தி, சூனியக்காரி என்று சமூகத்தின் பெயர்ச்சூட்டுகளில் சிக்கிய குரியச்சனின் மனைவியும், இந்து, மேரி லூக்கா, ஃபர்ஸானா, வந்தனா, ஷெர்லி என்று சமூகத்துக்காக புதுப் புது சுய பெயர்களை சூட்டிக்கொண்ட பாலனின் தாயும் ஒரு சமகோட்டில் என் கண்முன் நின்றார்கள்.
இருவருமே துல்லிய பாலின பேதம், ஆணாதிக்கத்தின் விக்டிம்கள் அல்ல. ஆனால், இருவருமே சமூகம் தீர்மானித்த ‘பாதுகாப்புக்கும்’ - அது செல்லுத்தும் கட்டுப்பாட்டுக்கும் இடையில் சிக்கிக் கொண்டவர்கள்.
Eko (எக்கோ)-வில் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட மிலாத்தி, குரியச்சனை பழிவாங்குபவர் ஆகிறாள். ‘Balan: The Boy’-ல் சமூகத்தின் அதன் சிஸ்டங்களின் தொடர் கட்டுப்பாடுகளால், பாதுகாப்பு என்ற பெயரில் தன் வாழ்க்கையையும், பாலனின் வாழ்க்கையையும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருக்கி தன்னையும், மகனையுமே விக்டிம் ஆக்கிக் கொள்கிறாள்.
பரந்துபட்ட பார்வையோடு அணுகினால் இருவருமே இந்தச் சமூகத்தின் விக்டிம்கள்தான். திருமணம், குடும்பம், தாய் பிம்பம் மீது சுமத்தப்பட்ட பொறுப்பு, காவல் துறை, சிறைத் துறை கட்டமைப்பில் இருக்கும் ஓட்டைகள், ஒரே பிரச்சினையில் ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் வெவ்வேறு கோணத்தில் அணுகும் ‘ஜட்ஜ்மென்ட்டல்’ சமூகம் ஆகியனவற்றின் விக்டிம்கள்.
‘எக்கோ’-வில் குட்டி போட்ட நாய் ஊர் சுத்தப் போயிடுச்சு என்று பியூஷ் சொல்லும்போது, “குட்டிகள் இருப்பதால் அது அதற்காக வாழக் கூடாதா?” என்று தெறிக்கவிடுவாள் மிலாத்தி.
அப்படியே “நாய்களை கட்டி வைத்து வளர்க்கக் கூடாது. கட்டி வைத்து சோறு போடுவதும் கூட அதன் மீது உரிமையை செலுத்துவதே” என்பாள்.
ஆனால், முன்னொரு காட்சியில் மலேசியாவில் அவளின் முதல் கணவன், “பருவம் வந்த நாயையும், பெண்ணையும் பூட்டி வைக்க வேண்டும்” என்று சொல்லியிருக்க, அதையே குரியச்சன் மிலாத்தியாக மாறிய சோய்-க்கு செய்திருப்பான்.
இணையவாசிகளில் ஒரு தரப்பினர் பாலனின் தாயின் ஓவர் புரொடெக்டிவ் நேச்சரை மட்டுமே கேள்வி கேட்பதை நிறுத்துவிட்டு மிச்சம் மீதிக் கேள்விகளையாவது பெண்களைக் கட்டுப்படுத்தும் ஆணாதிக்கம் தோய்ந்த சமூகத்தை நோக்கி கேட்கட்டும்.
சமூகத்தின் அவலங்களை வென்ற பெண்கள் ஏராளம். சமூகத்தின் விக்டிம்களாக காட்சி கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள்தான் பாலனின் தாயும், குரியச்சனின் மனைவியும் இன்னும் பல பெண்களும்.
| தேவதைகள் இன்னும் வலம் வருவர் |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in